சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வசூல்: ஒடிசா நடிகரின் உதவியாளர் என கூறி மோசடி: கோவையில் வடமாநில வாலிபர் கைது

கோவை: கோவையில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல உதவி செய்த ஒடிசா சூப்பர் ஸ்டாரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநில திரைப்பட நடிகர் சப்யாசச்சி மிஸ்ரா. இவர் அம்மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் ஆவார். இவர் கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஒடிசாவுக்கு அழைத்து வர உதவி செய்து வருகிறார். இந்நிலையில், கோவையில் வசிக்கும் வடமாநில வாலிபர் ஒருவர் டிவிட்டரில், நான் சப்யாசச்சி மிஸ்ராவின் உதவியாளர் எனவும், ஒடிசாவுக்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் விளம்பரம் செய்தார். இதையடுத்து, சாய்பாபா காலனியில் வசிக்கும் பாத்தல் குமார் தாஸ்(23) உட்பட அவரின் நண்பர்கள் 6 பேர் அந்த வாலிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர்.

அப்போது அந்த வாலிபர், ஒடிசாவுக்கு செல்ல ரூ.6 ஆயிரம் செலவாகும் என்றும், சொந்த ஊருக்கு சென்ற பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.12 ஆயிரம் நடிகர் சப்யாசச்சி மிஸ்ரா வழங்குவார் எனவும் தெரிவித்தார். அவரின் பேச்சில் சந்தேகமடைந்த பாத்தல், சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட முயன்றது ஒடிசாவை சேர்ந்த கோவை சரவணம்பட்டியில் தங்கி வேலை பார்க்கும் கோபால் சந்திர சாஹூ(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்தனர்.

Related Stories: