மத்திய பிரதேசத்தில் புதிய குழப்பம்: சிவராஜ் சிங் சவுகானை மீண்டும் முதல்வராக்க பாஜ.வில் எதிர்ப்பு: புதியவருக்கு வாய்ப்பு :வழங்க மேலிடம் பரிசீலனை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை மீண்டும் முதல்வராக்க, பாஜ.வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.வில் சேர்ந்தார். அவரது ஆதரவாளர்கள் 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது.  இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று  முன்தினம் மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும்படி கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ இறங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 13 ஆண்டு காலமாக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், மீண்டும் முதல்வராக கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இதனால், புதிதாக ஒருவரை முதல்வர் பதவிக்கு பா.ஜ மேலிடம் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. இதற்கு, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், நரோட்டம் மிஸ்ரா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இம்மாநிலத்தில் ராஜினாமா செய்த 22 பேருடன் சேர்த்து, 24 பேரவை இடங்கள் காலியாக உள்ளதால், அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.வுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள் ஆதரித்தால், அதன் பலம் 110 ஆக அதிகரிக்கும். இடைத்தேர்தல் நடந்தால் பாஜ பெரும்பான்மையை பெறுவதற்கு மேலும் 6  இடங்கள் தேவைப்படும்.

 சுயேச்சைகள் பாஜ.வை ஆதரிக்கவில்லை என்றால்,  இடைத்தேர்தலில் பாஜ 10 இடங்களை வெல்ல வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ்  24 இடங்களை வென்றால் (தற்போது 92 இடங்கள் உள்ளன) அக்கட்சி மீண்டும் ஆட்சி  அமைக்கும். 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் மாநிலத்தின் 14  மாவட்டங்களில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்களில் 15  பேர் ஜோதிராதித்யா சிந்தியாவின் கோட்டையான குவாலியர் - சம்பலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

ராஜினாமா செய்த 22 பேர் பாஜ.வில் இணைந்தனர்

மத்திய பிரதேசத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 22 பேரும், ஏற்கனவே எதிர்பார்த்தது போல் நேற்று பாஜ.வில் இணைந்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, இக்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்தனர். இதையடுத்து, அங்கு முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. பின்னர், ராஜினாமா செய்த அனைவரும் பாஜ.வில் இணைந்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதே பாணியே மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப்பட உள்ளது. நேற்று கட்சியில் இணைந்த மாஜி எம்எல்ஏ.க்களுக்கு, இடைத்தேர்தலில் பாஜ சீட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: