பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை கவலைக்கிடம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரி மக்கள் போராட்டம்

வார்தா: மகாராஷ்டிராவில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரியும் உள்ளுர் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் உள்ள தரோடா கிராமத்தை சேர்ந்தவர் அங்கிதா பிசுடே (25). கல்லூரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதே கிராமத்தை சேர்ந்தவர் விகேஷ் நாக்ராலே (27). இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஆனால் விகேஷின் மோசமான நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நட்பை அங்கிதா துண்டித்துக் கொண்டார். விகேஷுக்கு திருமணம் ஆகி 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து அங்கிதா பின்னால் சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் அங்கிதா கல்லூரிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்ற விகேஷ், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அங்கிதா மீது ஊற்றி தீ வைத்தார்.

தற்போது நாக்பூரில் ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அங்கிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குற்றவாளி விகேஷுக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி வார்தா நகரில் உள்ள ஹிங்கன்காட் மற்றும் சமுத்ராபூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று கண்டன பேரணி நடத்தினர்.  வார்தா மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுனில் கேதார் மற்றும் ஹிங்கன்காட் பா.ஜனதா எம்.எல்.ஏ. சமீர் குன்னாவர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அங்கிதாவை பார்த்தனர்.  இதற்கிடையே, அரசியல் கட்சி தொண்டர்கள், ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 7,000 பேர் வார்தாவில் உள்ள நந்துரி சவுக்கில் இருந்து அம்பேத்கர் சதுக்கம் வரையில் பேரணியாக சென்றனர். குற்றவாளி விகேஷுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரும் மனு ஒன்றை ஹிங்கன்காட்டில் உள்ள மூத்த வருவாய்த்துறை அதிகாரியிடம் கொடுத்தனர்.

குற்றவாளியை பத்து நிமிட நேரத்துக்கு தங்களிடம் ஒப்படைக்கும்படி போராட்டக்காரர்களில் சிலர் கோரினர். ஹிங்கன்காட் மற்றும் பக்கத்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் மக்களின் வழக்கமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த சம்பவம் “மனித குலத்தின் மீது படிந்த கறை” என்று மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், “தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும். குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.

Related Stories: