சித்தூர் தொட்டிபல்லி அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பொங்கல் பண்டிகை அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

சித்தூர்: சித்தூர் தொட்டி பல்லி அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பொங்கல் பண்டிகை அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பிரபாகரன் கூறினார். சித்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று ரயில்வே கேட்டுகள் உள்ளன. இந்த வழியாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பேருந்துகளில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சித்தூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் அவதிப்பட்டு வந்தன. அதுமட்டுமல்லாமல் சாலை விபத்து ஏதாவது ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் செல்ல கூட வசதி இல்லாமல், ஏராளமான நோயாளிகள் உயிரிழக்கும் அவலநிலையும் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சித்தூர் எம்பி உட்பட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால் அதற்கு எந்த எம்பியும், அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு  அப்போதைய எம்பி மறைந்த  சிவபிரசாத்திடம் அப்பகுதி மக்கள்  எங்கள் பகுதியில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை என்றால், அடுத்த தேர்தலில்  உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என கூறினர்.

இதனையடுத்து மறைந்த முன்னாள் எம்பி சிவபிரசாத் பாராளுமன்ற கூட்டத்தொடரில் சித்தூரில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் மூன்று ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனால் மத்திய அரசு 3 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கியது. இதில் ஏற்கனவே சித்தூர் அடுத்த ஆர்விஎஸ் நகர் பகுதியில் உள்ள மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மீதமுள்ள 2 மேம்பாலங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தூர் தொட்டிபல்லி பகுதியில் ரயில்வே மேம்பாலம் 1.6 கிலோமீட்டர் தூரம் அமைக்க ரூ50 கோடியே 90 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு, பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகை அன்று பாலத்தை திறந்து வைப்பதாக  தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பிரபாகரன் தெரிவித்தார்.

தற்போது  இரவு, பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு நாட்களுக்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: