பட்டாசு உற்பத்தி செய்வதில் தரக்கட்டுப்பாடு அமைப்பை உருவாக்க அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘பட்டாசுகளின் தரத்தை சோதிக்க, தரக்கட்டுப்பாடு வரையறை அமைப்பை உருவாக்குவது தொடர்பான விரிவான அறிக்கையை 15 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த  ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பை வழங்கியது. அதில், குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என  பெசோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவில், ‘‘பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில்  தரக்கட்டுப்பாட்டு வரையறை தொடர்பான அமைப்பை உருவாக்க வேண்டும். அதில், மத்திய அரசு சார்ந்த அதிகாரி ஒருவர் செயல்பட வேண்டும். இதைத் தவிர பட்டாசு தயாரிக்கும் போது சிறிய அளவிலான பேரியத்தை பயன்படுத்துவதற்கு  உச்ச நீதிமன்றம் முந்தைய உத்தரவில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் புதிய விதியின்படி, அதாவது பசுமை பட்டாசுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது, மேலும், தரக்கட்டுப்பாட்டு வரையறை அமைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதில்  எத்தனை பேர் இடம் பெறுவார்கள், அதன் தொழில்நுட்பம் என்னென்ன விதத்தில் இருக்கும் என்பது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த 15 நாட்களுக்குள் பட்டாசு தயாரிப்பு உற்பத்தியாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய  வேண்டும்,’’ என கூறினர். பின்னர், வழக்கை டிச. 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: