அரை மணிநேரத்தில் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஓய்வு நீதிபதி தலைமையில் குழு?

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாமா என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது. மதுரை, அவனியாபுரத்தில் ஜன. 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கலெக்டர் தலைமையில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டிவரும்’ என்றனர்.

அப்போது ஒரு தரப்பினர், ‘கடந்த 15 ஆண்டுகளுக்கு நாங்கள் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துகிறோம். யாரும் பங்கேற்க ஆட்சேபனை இல்லை. ஆனால், போட்டிகளை நாங்கள் தான் நடத்துவோம்’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்பி ஆகியோர் உடனடியாக ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர். இதையடுத்து அரை மணிநேரத்தில் மதுரை கலெக்டர் நடராஜன், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகினர். கலெக்டர், ‘ஜல்லிக்கட்டு நடத்தும் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. என் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த விருப்பம் இல்லை’ என்றார்.

நீதிபதிகள், ‘இந்தாண்டு அனைவரும் ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டு நடத்துங்கள். நாங்கள் ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமிக்கிறோம். அவரின் கீழ் அனைத்து தரப்பினரையும் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தலாம். இல்லாவிட்டால் நாங்கள் தற்போதைக்கு தடை விதிக்கிறோம். அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாம்’ என்றனர். நீதிபதிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: