சபரிமலை ஐயப்பன் புகழை அழிக்க யாராலும் முடியாது: சசிகுமார வர்மா, பந்தளம்

அரண்மனை நிர்வாக குழு தலைவர் சபரிமலை  ஐயப்பன் குறித்து எதுவும் தெரியாதவர்கள் தான் நீதிமன்றத்திற்கு  சென்றுள்ளனர். சபரிமலை கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்களாக  இருந்தாலும் சரி,  பெண்களாக இருந்தாலும் சரி 41 நாட்கள் விரதம் இருக்க  வேண்டும். இது ‘பஞ்ச சுத்தி’ என அழைக்கப்படுகிறது. நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது என்பதற்காக இந்த விரத நாட்களை  குறைக்க முடியாது. எல்லா  மதத்தினருக்கும் அவர்களுக்கு உரித்தான ஆசாரங்களும், கோட்பாடுகளும் உள்ளன  என்பதை மறந்து விடக்கூடாது. தேவைப்பட்டால் தற்போது  கடைபிடிக்கப்பட்டு  வரும் ஆசார விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.பண்டைய  ஆசாரங்கள் அனைத்தையும் இன்றைய நவீன உலகிலும் கடைபிடிக்க வேண்டிய  அவசியமில்லை என்பது உண்மை தான். உடன்கட்டை ஏறுதல், கேரளாவில் தாழ்த்தப்பட்ட   சமூகத்தை சேர்ந்த பெண்களின் மார்பகங்களை மூட அனுமதி மறுத்தது என பல மத  நம்பிக்கைகள் காலப்போக்கில் அழிந்துள்ளன. பல போராட்டங்களை நடத்தித் தான்  அந்த மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டன. அதே போல  தேவையில்லாத ஆசாரங்களை கைவிட  வேண்டியது அவசியமான ஒன்று தான். ஆனால் இந்து  மதத்திலுள்ள ஆசாரங்களை மாற்ற  வேண்டுமென்றால் சமுதாய தலைவர்கள், தாந்திரீக பயிற்சி கூடங்கள், கோயில் ஆகம  விதிகள் குறித்து நன்கு அறிந்த மத பண்டிதர்கள் ஆகியோர் கூடி ஒரு  அமைப்பை  உருவாக்க வேண்டும்.

தேவசம் போர்டு என்பது கோயில்களின் ஆசார,  ஆகம விதிகளை பாதுகாக்க வேண்டிய ஒரு அமைப்பாகும். ஆனால் சபரிமலை  விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அந்த  கடமையிலிருந்து விலகிச்  சென்றுவிட்டது. இதனால் தான் பல சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது  வந்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவால் சபரிமலை ஐயப்பனின் புகழுக்கோ,   நம்பிக்கைக்கோ எந்த களங்கமும் ஏற்படப் போவதில்லை என்பதை அனைவரும் தெரிந்து  கொள்ளவேண்டும்.நீண்ட காலமாகவே சபரிமலையின் மீது பல முனை  தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் சாந்த குணம் கொண்ட சபரிமலை  ஐயப்பனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினால் என்ன அசம்பாவிதங்கள் நடக்கும்  என்பதை 2 மாதங்களுக்கு முன் நாம் அனுபவித்துள்ளோம்.  கேரளாவில் ஏற்பட்ட  இயற்கை சீற்றத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை. வெள்ளப்பெருக்கால் ஒரு  பக்தனால் கூட சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.சபரிமலை ஐயப்பனை பெண்களின் எதிரியாக காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.  சபரிமலை கோயிலிலுள்ள ஆசாரங்கள் அனைத்தும் தவறு என சித்தரிக்கவும் முயற்சி  நடக்கிறது.  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஏராளமான  சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு  வரும் வரை எந்தக் காரணம் கொண்டும் சபரிமலையில்  இளம்பெண்களை அனுமதிக்க  கூடாது.

சபரிமலை ஐயப்பனுக்கு பந்தளம் குடும்பம் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து  இறுதி வரை போராடி ஐயப்பனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையை தீர்த்து  வைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: