ஷசாம்! பியூரி ஒப் தி காட்ஸ் - திரைவிமர்சனம்

டிசி காமிக்ஸ் கதையில் மற்றுமொரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நியூ லைன் சினிமா, மேட் கோஸ்ட் புரொடக்சன்ஸ், தி சப்பிரான் கம்பெனி மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்  நிறுவனம் மூலம்  விநியோகம் செய்யப்படுகிறது.ஸாசெரி லேவி, ஏஷெர் ஏஞ்சல், கிரேஸ் கரோலின் கர்ரீ, ஜாக் டைலான் கிரேஸர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டேவிட் எஃப். சாண்ட்பெர்க்.

ஷசாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தட்டியூஸ் சிவன்னாவைத் தோற்கடித்து மந்திர கொலை உடைத்து வெற்றி கண்டார். ஷசாம் உடைத்த மந்திர கோல் கிரீஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. உடைந்த பாகங்களைத் தேடி  அட்லஸ் டைட்டன் கடவுளின் இரு மகள்களான ஹெஸ்பேரா மற்றும்   கலிப்சோ இருவரும் பூமிக்கு வருகின்றனர். உடைந்த பாகங்களை ஒட்டவைத்து மந்திரக்கோலை உயிர்பித்து பூமியை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். மந்திரக்கோலில் சக்தியால் மிகப்பெரிய டிராகனும் பல மான்ஸ்டர்களும் விழித்துக் கொள்ள இதைக் காப்பாற்றும் பொறுப்பு ஷசாம் மற்றும் அவரது சகோதர சகோதரிகளுக்கு வருகிறது.  கொடூரமான வில்லியிடமிருந்து பூமியை காப்பாற்றினரா ஷசாம்&கோ என்பது மீதிக்கதை.

குழந்தைகளுக்கான ஸ்கிரிப்டுகளில் கைத்தேர்ந்தவர் ஆன இயக்குனர் டேவிட் இந்த இரண்டாம் பாகத்திலும் தனது திறமையை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார். குடும்பமாக குழந்தைகளுடன் பார்ப்பதற்கு ஏற்றவாறு நிறைய காமெடி காட்சிகளும் சூப்பர் ஹீரோ மொமெண்டுகளையும் மிக அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்.

சூப்பர் ஹீரோவாக இருக்கும் ஷசாம் மற்றும் அவரது சகோதர சகோதரிகள் கூட்டத்தினர் போடும் திட்டங்கள் மற்றும் அதில் அவர்களே சொதப்பியும் மாட்டிக் கொள்வது ஒருவரை ஒருவர் காப்பாற்றி உலகையும் காப்பாற்றுவது என பல அருமையான காட்சிகள் படத்தில் அப்ளாஸ் அள்ளுகின்றன.

குறிப்பாக யூனிகான் வரும் காட்சிகளும் டிராகன் வரும் காட்சிகளும் பிரம்மாண்டத்தின் உச்சமாக தெரிகின்றன. கியூலா படோஸ் ஒளிப்பதிவும், கிறிஸ்டோப் பெக் இசையும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் ரசிகர்கள் எனில் இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது.

Related Stories: