சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, லீலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்துக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை போலவே தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. ‘பராசக்தி’ படக்குழுவிடம் ரிவைசிங் கமிட்டி கேட்ட வரலாற்று தரவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, 1960களில் நடைபெறுவது போன்ற கதைகளத்தை கையில் எடுத்திருக்கிறது ‘பராசக்தி’ திரைப்படம். படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி அதில் சில காட்சிகள் குறித்து, ‘பராசக்தி’ குழுவினரிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, அதற்கான சான்றுகளை படக்குழுவினர், ரிவைசிங் கமிட்டிக்கு பட தயாரிப்பு நிறுவனம் சமர்ப்பித்ததாகவும், ஆனால் அந்த சான்றுகள் போதவில்லை என்று ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது ‘பராசக்தி’ படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. 2 மணி நேரம் 43 நிமிடம் ஓடும் இப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. மேலும், ‘பராசக்தி’ படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
