தெலுங்கில் 2018ல் வெளியான ‘லவ்வர்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், ரித்தி குமார். தொடர்ந்து ‘அனகனகா ஓ பிரேமகதா’, ‘பிராணயா மீனுகளுடே கடல்’, ‘கண்டம்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார். அப்போது பிரபாஸுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, தற்போது மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். முன்னதாக ‘தி ராஜா சாப்’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது பேசிய ரித்தி குமார், ‘மூன்று வருடங்களுக்கு முன்பு பிரபாஸ் எனக்கு ஒரு புடவையை பரிசளித்தார். அதுதான் எனக்கு ரொம்ப, ரொம்ப ஸ்பெஷல். அந்த புடவையை மூன்று வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்து, இந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்துள்ளேன்’ என்றார். ரித்தி குமாரின் பேச்சை கேட்ட ரசிகர்கள், ‘பிரபாஸ்… பிரபாஸ்’ என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ‘தி ராஜா சாப்’ படத்தின் ‘நாச்சே நாச்சே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடலில் மூன்று ஹீரோயின்களும் பிரபாஸுடன் இணைந்து, ரசிகர்களை கவரக்கூடிய வகையில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர்.
ரித்தி குமாரின் நடனமும், முகபாவனைகளும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால், யார் இந்த ரித்தி குமார் என்று இணையத்தில் தேடி அவரை பற்றி தெரிந்துகொள்கின்றனர்.
