‘காமெடி படத்துக்கு இசை அமைப்பது சவாலானது’: அஜ்மல் தஹ்சீன்

சென்னை: காமெடி படத்துக்கு இசையமைப்பது சவாலானது என இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீன் கூறினார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. காமெடி திரில்லர் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. சார்லஸ் இயக்கியுள்ளார். விவேக் ரவிச்சந்திரன், பாலாஜி சுப்பு தயாரித்துள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீசாகிறது. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அஜ்மல் தஹ்சீன் கூறியது: தனி இசை ஆல்பங்களுக்கு இசை அமைத்துள்ளேன். ‘சொப்பன சுந்தரி’ பட தயாரிப்பாளர்கள் எனது பணியை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். அவர்கள் தயாரிப்பில் இசை ஆல்பம் ஒன்று செய்வதாக இருந்தது. அப்போது, படம் தயாரிக்கும் திட்டத்தை பற்றி அவர்கள் கூறினர். அத்துடன் என்னை பணியாற்றவும் கேட்டார்கள். பிறகு இயக்குனர் சார்லஸ் கதை கூறினார்.

கதை கேட்ட ஓரிருநாளில் இதற்கான ஒரு பாடலை உருவாக்கினேன். அதை கேட்டு படக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர். இது காமெடி ஜானர் படம் என்பதால் அதற்கு இசை அமைப்பது சவாலானது. சென்னையில் நடக்கும் கதை என்பதால், நானும் சென்னை பையன்தான். அதனால் இந்த வட்டார மொழியை படத்துக்குள் இசையாக கொண்டு வருவது எனக்கு எளிதாக இருந்தது. படத்தில் 4 பாடல்கள். ஏற்கனவே, பணக்காரி பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. மற்றொரு குத்து பாடல் பாணியில் ஒரு கலக்கல் டான்ஸ் பாடல் இடம்பெற்றுள்ளது. 2 மெலடி பாடல்களும் உண்டு. இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்க முடியவில்லை. விஷால் சந்திரசேகர் அந்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். நான் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக பின்னணி இசை அமைப்பேன். இவ்வாறு அஜ்மல் தஹ்சீன் கூறினார்.

Related Stories: