தனது டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் நடிகை சமந்தா தயாரித்து, சிறிய வேடத்தில் நடித்திருந்த ‘சுபம்’ என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றிபெறவில்லை. எனினும் மனம் தளராத சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாண்ட்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். இதை ராஜ், டீகே இணைந்து இயக்குகின்றனர். தவிர, ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து ஹீரோயினாக நடிக்கும் சமந்தா, இந்தி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை 2வதாக காதல் திருமணம் செய்த பிறகு தனது நடவடிக்கைகளை அதிரடியாக மாற்றியுள்ளார். அதாவது, படப்பிடிப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவர், யாருடனும் சிரித்தபடி பேசுவது இல்லையாம்.
இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஜ் நிடிமோரு இணைந்து தயாரிக்க, நந்தினி ரெட்டி இயக்குகிறார். முக்கிய வேடங்களில் குல்ஷன் தேவய்யா, திகந்த், கவுதமி, மஞ்சுஷா நடிக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் தெலுங்கில் உருவாக்கப்பட்டு, பிறகு மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. பர்ஸ்ட் லுக்கில், ஒரு பேருந்தில் சண்டைக்கு தயாராவது போல் சமந்தா புடவையில் நிற்கிறார். இது அவருக்கு சரியான கம்-பேக்காக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்தின் டீசரும், டிரைலரும் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது.
