நடிகர்களை பயமுறுத்திய சுதா கொங்கரா

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடிப்பில் வரும் 10ம் தேதி திரைக்கு வரும் படம், ‘பராசக்தி’. இதற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி படத்தை வெளியிடுகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தனது சிஷ்யை சுதா கொங்கரா குறித்து இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ‘என்னிடம் ‘ஆயுத எழுத்து’, ‘யுவா’ ஆகிய படங்களில் சுதா பணியாற்றினார். அந்த படங்களில் அவர், காட்சிகளின் தொடர்ச்சியை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஏற்றிருந்தார். அவர் கையில் எப்போதும் ஒரு கேமரா இருக்கும். நிறைய நடிகர், நடிகைகளுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவரிடம், ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட தப்பிக்க முடியாது. ஷூட்டிங் முடிந்து வெளியில் போக விரும்பினால், சுதாவை தாண்டித்தான் போக முடியும். கண்டினியூட்டி தவறுகளை அலசி பார்த்த பிறகுதான் ஆர்ட்டிஸ்ட்டுகளை வெளியே விடுவார். அன்று அவரை பார்த்து பயப்படாதவர்களே கிடையாது. சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்டை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறார். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்றார்.

இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக ‘பராசக்தி’ படக்குழுவினர் கொச்சி, திருச்சி, ஐதராபாத் சென்றனர். தனி விமானத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, லீலா ஆகியோர் சென்றிருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. மொழி திணிப்புக்கு எதிரான தமிழ் மாணவர்களின் எழுச்சியாகவும், உண்மை சம்பவ பின்னணியிலும் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற வசனங்கள் வைரலானது. அதுபோல், டிக்கெட் முன்பதிவிலும் ‘பராசக்தி’ படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

Related Stories: