98வது ஆஸ்கர் விழா 6 விருதுகளை அள்ளியது ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

 

லாஸ்ஏஞ்சல்ஸ்: 98வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படம் 6 விருதுகளை குவித்து சாதித்துள்ளது. ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் அதிகபட்சமாக 16 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சின்னர்ஸ்’ திரைப்படம், 4 விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த படமாக ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ தேர்வானது. இதே படத்துக்காக பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குனருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

‘சின்னர்ஸ்’ படத்தின் இசைக்காக லுட்விக் கோர்டான்சன் மீண்டும் ஒரு ஆஸ்கர் விருதை வென்று தனது சாதனையைத் தொடர்கிறார். இதேபோல் ஹாலிவுட் நடிகர் சியன்் பென் 3வது முறையாக ஆஸ்கர் விருது வென்றார். ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படத்தில், ராணுவ வீரராக நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது.

இதற்கிடையே, ஆஸ்கர் விருது வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் துரால்ட் அர்காபா. ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
நார்வே திரைப்படமான ‘சென்டிமென்டல் வேல்யூ’ சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருதும், வெப்பன்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதை ஆமி மடிகனும் வென்றார். ரையான் கூக்லர், ‘சின்னர்ஸ்’ படத்தின் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

* ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு விவரம்:

சிறந்த நடிகர்: ‘சின்னர்ஸ்’ திரைப்படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான். சிறந்த துணை நடிகர்: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக சியன் பென். சிறந்த நடிகை விருது: ‘ஹெம்நெட்’ திரைப்படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி.

சிறந்த துணை நடிகை: ‘வெப்பன்ஸ்’ திரைப்படத்திற்காக எமி மதிகன். சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ‘கேபாப் டிமான் ஹன்டர்ஸ்’ திரைப்படத்திற்காக மேகி காங், கிறிஸ் அப்பெல்ஹான்ஸ் மற்றும் மிஷெல் எல்.எம். வோங். சிறந்த அனிமேஷன் குறும்படம் விருது: ‘தி கேர்ள் வூ க்ரைட் ப்யர்ல்ஸ் குறும்படத்திற்காக கிறிஸ் லாவிஸ், மசீக் ஸ்செர்போவ்ஸ்கி. சிறந்த காஸ்டிங்: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸ். சிறந்த ஒளிப்பதிவு: ‘சின்னர்ஸ்’ திரைப்படத்திற்காக ஆட்டம் டுரால்ட் அர்காபாவ். சிறந்த ஆடை

வடிவமைப்பு: ‘ஃப்ரன்கென்ஸ்டைன்’ திரைப்படத்திற்காக கேட் ஹாவ்லி. சிறந்த இயக்குனர்: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன். சிறந்த ஆவணப்படம்: ‘மிஸ்டர் நோபடி அகெயின்ஸ்ட் புடின்’ திரைப்படத்திற்காக டேவிட் போரன்ஸ்டீன், பாவெல் தலங்கின், ஹெல்லே ஃபேபர் மற்றும் அல்ஸ்பேட்டா கராஸ்கோவா. சிறந்த ஆவணப்படம்: ‘ஆல் தி எம்ப்டி ரூம்ஸ்’ குறும்படத்திற்காக ஜோசுவா செஃப்டெல் மற்றும் கோனால் ஜோன்ஸ். சிறந்த படத்தொகுப்பு: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக ஆண்டி ஜூர்கென்சன். சிறந்த சர்வதேச படம்: ‘சென்டிமென்டல் வேல்யூ’ – நார்வே.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: ‘தி சிங்கர்ஸ்’ திரைப்படத்திற்காக சாம் ஏ. டேவிஸ் மற்றும் ஜாக் பியாட். சிறந்த மேக் அப் மற்றும் சிகை அலங்காரம்: ‘ஃப்ரன்கென்ஸ்டைன்’ திரைப்படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி. சிறந்த இசை: ‘சின்னர்ஸ்’ திரைப்படத்திற்காக லுட்விக் கோரன்சன். சிறந்த பாடல்: கோல்டன். சிறந்த திரைப்படம்: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் ஆடம் சோம்னர், சாரா மர்பி மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன். சிறந்த வடிவமைப்பு: ‘ஃப்ரன்கென்ஸ்டைன்’ திரைப்படத்திற்காக தமரா டெவெரெல், ஷேன் வியூ.

சிறந்த சவுன்ட் விருது: ‘எஃப்1’ திரைப்படத்திற்காக கேரத் ஜான், அல் நெல்சன், க்வென்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிஸோ மற்றும் ஜுவான் பெரால்டா. சிறந்த விஷவல் எஃபெக்ட்ஸ் விருது: ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்காக ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட். சிறந்த தழுவல் கதை: ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன். சிறந்த எழுத்து (ஒரிஜினல்): சின்னர்ஸ் திரைப்படத்திற்காக ரியான் கூக்லர்.

* பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவம்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ’ப்ரையன் கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக வந்திருந்தார்.

Related Stories: