சென்னை: தென்னிந்திய மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர், பாவனா. சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அவர் அளித்த பேட்டி வருமாறு: ஒரு மலையாள படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்தபோது நான் சாப்பிட்ட நெய் தோசையையும், பூரியையும் மறக்க முடியாது. சுவையாக இருந்தது. சென்னை சாப்பாடு என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு பணியாரமும் சாப்பிட்டேன். புரொடக்ஷனில் தரும் சாம்பார் சாதம், தயிர் சாதம் பிடிக்கும். அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிட மாட்டேன்.
சில ஆண்டுகள் மிகவும் குண்டாக இருந்தேன். இப்போது எனது உடல் எடையை குறைத்துள்ளேன். சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், டயட் பற்றி கவலைப்படவே மாட்டேன். `இருப்பது ஒரு வாழ்க்கை. விரும்பியதை சாப்பிடாமல் என்ன செய்ய போகிறோம்’ என்று சாப்பிடுவேன். பிரியாணி, ஐஸ்கிரீம் வேண்டும் என்று தோன்றினால் ருசித்து ரசித்து சாப்பிடுவேன். பிறகு உடல் எடையை குறைப்பேன். உணவு வகையை கட்டுப்படுத்த சொன்னால் கஷ்டப்படுவேன்.
