மீண்டும் அக்னி நட்சத்திரம்!

சினிமாவில் பின்புலம் இல்லாதவர்கள் ஜெயிக்குமளவுக்கு பின்புலம் உள்ளவர்கள் ஜெயித்ததில்லை. அந்த வகையில் சினிமா பின்புலம் உள்ளவர் உதயா. ஆனால் இவருடைய கிராப் ஒரே சீராக ஏறுமுகம் கண்டதில்லை. ஆனால், சினிமா கடலில் வெற்றி எனும் முத்து எடுக்க விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இவருடைய முந்தைய படைப்பான ‘உத்தரவு மகா ராஜா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த படமாக ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிஸியான படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசினோம்.

அக்னி நட்சத்திரம்?

இந்த டைட்டிலுக்காக முதலில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்குதான் நன்றி சொல்லவேண்டும். ஏன்னா, டைட்டிலுக்கான உரிமை இப்போது அவரிடம்தான் இருக்கிறது. நிறையப் பேர் இந்த டைட்டிலை அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஐசரி சாரே அவர் தயாரிக்கும் படங்களுக்கு வைக்காமல் எனக்காகக் கொடுத்தார். மற்றபடி ‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் கனெக்‌ஷன் இல்லை. டைட்டிலில் மற்றுமே ஒற்றுமை காணப்படும். இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் சாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கதை?

வித்தியாசமான க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்விதமாக இருக்கும்.  ‘உத்தரவு மகராஜா’ வுக்குப் பிறகு பண்ணும் படம் கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.

விதார்த்துக்கு என்ன ரோல்?

விதார்த் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். என்னுடைய அன்புக்காக இந்தப் படத்தை கமிட் பண்ணினார். படத்தில் என்னைவிட அவர்தான் சோலோ பெர்ஃபாமன்ஸில் கலக்கியிருப்பார். அவருடைய கேரக்டர் பெயர் லூயிஸ். கேரக்டர், கெட்டப் என்று வித்தியாசமான விதார்த்தை இதில் பார்க்கலாம். விதார்த்... நல்ல கலைஞன் என்பதைக் கடந்து நல்ல மனிதன்!

உங்களுக்கு என்ன கேரக்டர்?

தீனா என்ற கேரக்டர் பண்றேன். படத்தில் என்னுடைய நடிப்பு இரண்டு கோணங்களில் இருக்கும்.  பாடிலேங்வேஜ், டயலாக் என்று என்னுடைய கேரக்டர் மாறுபட்ட விதத்திலிருக்கும். என்னுடைய கேரக்டர் முழுக்க முழுக்க ஆக்ட்டிங்கிற்கான கேரக்டர். அந்த வகையில் இந்தப் படம் நடிகனாக எனக்கு நல்ல மைலேஜ் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஹீரோயின் யார்?

ஸ்ருதி வெங்கட் பண்ணுகிறார். ‘தடம்’ படம் பார்த்து விட்டுதான் அவரை கமிட் பண்ணினேன். ஷீ இஸ் வெரி குட் ஆர்ட்டிஸ்ட். மிகப் பெரிய திறமைசாலி. பெரிய நடிகையாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உண்டு. இந்தப் படத்தை ஏலகிரி, சென்னை உட்பட ஏராளமான இடங்களில் படமாக்கினோம். கடுமையான குளிர், கேரவன் என்று எதையும் பொருட்படுத்தாமல் சொந்தப் படம் போல் நினைத்து தயாரிப்பாளருக்கு சப்போர்ட் பண்ணினார்.

இன்னொரு ஹீரோயினாக ‘தாதா 87’ படத்தில் நடித்த ஸ்ரீபல்லவி வர்றார். அவரும் அருமையாக  பெர்ஃபாம் பண்ணக்கூடியவர். குட் அட்டி

டியூட் உள்ளவர். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார். அழகும் திறமையுமுள்ள அவரை இயக்குநர்கள் பயன்படுத்த வேண்டும். அவரும் எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்.

மற்ற நடிகர்கள்?

சாம்ஸ் மிரட்டியிருக்கிறார். கவுண்டமணி- செந்தில்- காம்போ போல் அவரும் நானும் வரும் போர்ஷன் செம ரகளையாக இருக்கும். ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வந்த அனிதா என்ற கேரக்டரில் நிரோஷா மேடம் பண்றார். படத்துல அவர் சி.பி.ஐ. போலீஸாக வர்றார். இயக்குநரும் நடிகருமான ராமகிருஷ்ணன் இருக்கிறார். ‘ரீல்’ ராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக இத்தாலியிலிருந்து வந்தார். இந்தப் படத்தில் எங்களுக்கு நல்ல கலைஞர்கள் கிடைத்திருப்பதால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி?

சரண் இயக்குகிறார். இவர் நாராயணமூர்த்தி, மோகன் ராஜா,  விஷ்ணுவர்த்தன் போன்ற இயக்குநர்களிடம் சினிமா பயின்றவர். ஆக்சுவலா அவருக்கு இது இரண்டாவது படம். தெலுங்கில்  ‘ஹேப்பி ஹேப்பி கா’ என்ற படம் பண்ணியவர். அவர் முதல் முறை கதை சொன்னபோதே பிடித்திருந்தது.  வெறித்தனமாக உழைத்திருக்கிறார். அவருடைய திட்டமிடுதல் பிரமாதமாக இருக்கும். ஸ்டோரி விஷயத்திலும் மோகன் ராஜா, விஷ்ணுவர்த்தன் இருவரையும் கலந்துகட்டி அடித்துள்ளார். மேக்கிங்கில் காம்ப்ரமைஸ் பண்ணாமல் எடுத்திருக்கிறார்.

‘கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்கிறார். சில்வா மாஸ்டர் ஃபைட் பண்ணியிருக்கிறார். அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் பிஸியாக இருக்கும் அவர் கதை பிடித்திருந்த காரணத்தால் இந்தப் படத்தை பண்ணுகிறார். ஒய்.ஆர். பிரசாத் மியூசிக். இவர் மணிசர்மா சாரின் அக்கா மகன். திறமையானவர். பாடல்களும் பின்னணி இசையும் வேற லெவலில் இருக்கும். தீம் மியூசிக் பெரிய வரவேற்பு பெறும். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.  என்னுடைய நண்பர் பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளார். எடிட்டிங் ‘ராட்சசன்’ சான் லோகேஷ் பண்ணியிருக்கிறார்.

ஒளிப்பதிவு ‘குளிர் 100’ எல்.கே.விஜய். மனிதர் இவ்வளவு நாள் எங்கிருந்தார் என்று கேட்குமளவுக்கு டேலன்ட்டட் கேமராமேன். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், தயாரிப்பாளரின் கேமராமேன். ஒவ்வொரு ஷெட்யூலிலும் இரண்டு நாட்கள் முன்கூட்டியே முடித்துக் கொடுத்துவிடுவார். மேக்கிங் அள்ளும். ஃபிரேம் பை ஃபிரேம் செதுக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். பெரிய பட்ஜெட் படத்தில் இருக்கிற ஜிம்மி, ஹெலிகேம் என்று எல்லாவித கருவிகளையும் பயன்படுத்தியுள்ளோம்.

படத்தில் நிறைய இரவு நேரக் காட்சிகள் இடம்பிடித்திருக்கும். அந்தக் காட்சிகள் ஹாலிவுட் எஃபெக்ட்டில் இருக்கும்.படம் பார்க்கும் ரசிகர்கள் சீட் நுனிக்கு வருவது நிச்சயம். படத்தில் வரும் அனைத்துக் காட்சிகளும் ரிஸ்க் நிறைந்தது. மலைப் பகுதி என்பதால் பாம்பு, ஓநாய் என்று விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்தினோம். டெக்னீஷியன்களின் கூட்டு முயற்சியால் இந்தப் படம் குவாலிட்டியாக வந்துள்ளது.

படத்துலே என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?

மெசேஜ் இருக்கு. ஆனால் பெரியளவில் இருக்காது. முடிந்தளவுக்கு ரசிகர்களை பொழுது போக்கு அம்சங்களால் திருப்திப்படுத்த முயன்றுள்ளோம். இந்த டைட்டில் எங்களுக்கு நிறைய சுமையைக் கொடுத்துள்ளது. மணி சாரிடமிருந்து ‘நல்லாயிருக்கு’ என்ற ஒரு வார்த்தைக்காக எங்க டீமில் உள்ள அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

அடுத்து?

இரண்டு படங்கள் கமிட் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் நாய் மெயின் கேரக்டரில் வரும். இந்தப் படம் மற்ற அனிமல் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.

உங்களுடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நடிகனாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். அப்பா தயாரிப்பாளர் என்பதால் சினிமாவின் கஷ்டம் நஷ்டம் எனக்குத் தெரியும். சினிமா மாதிரி நல்ல தொழில் கிடையாது. ஆனால், எப்படி பண்ணுகிறோம் என்பது முக்கியம். என்னைப் போன்ற நடிகர்களை  வைத்து பத்து கோடி பட்ஜெட்டில் எடுத்தால் நஷ்டம் கன்ஃபார்ம். என்னைப்போன்ற நடிகர்களை வைத்து படம் எடுக்கும்போது பட்ஜெட்டுக்குள் எடுத்தால் கையைக் கடிக்காது.

வெற்றியோ, தோல்வியோ... தொடர்ந்து என் வேலையைச் செய்கிறேன். 2000ம் வருடத்திலிருந்து என்னுடைய முயற்சி தொடர்கிறது. இதுவரை 25 படங்கள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் 17  படங்கள்தான் வெளியாகியுள்ளது. 8 படங்கள் வெளியாகவில்லை. கஸ்தூரிராஜா சாரின் ‘காதல் சாதி’, மனீஷா கொய்ராலாவுடன் ‘கனவே’, ‘கோட்சே’, ராஜ்கிரண் சாருடன் ‘சேதுபதி சீமையிலே’ என்று டிராப்பான படங்கள் வந்திருந்தால் இந்நேரம் 27 படங்களைத் தொட்டிருப்பேன். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால்... என்னுடைய வளர்ச்சி இந்தளவுக்காவது இருக்கிறதே என்று நினைத்து ஆறுதல் அடைகிறேன். தொடர்ந்து வெற்றிக்காக போராடுகிறேன். வீழ்ந்தாலும் எழுந்திருப்பேன். சினிமாவில் என் முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

உங்களுக்கு டைரக்‌ஷன் ஆசை இருக்கிறதா?

உண்டு. நடிகனாக நான் செய்ய வேண்டியவை நிறைய உண்டு. ஆசைக்காக ஒரு படம் டைரக்‌ஷன்  பண்ணலாம். சூழ்நிலை காரணமாகத்தான் சில படங்களை நான் தயாரித்தேன். ‘உத்தரவு மகாராஜா’  பெரிய பட்ஜெட் படம். அந்தப் படத்தை நானே தயாரித்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தேன். தரமான கதைகள் கிடைத்தால் பிற நடிகர்களை வைத்தும் என்னுடைய ஜெய்சன் நிறுவனம் படம் தயாரிக்கும்.

வில்லனாக நடிப்பீர்களா?

நடிப்பேன் சார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் நணபர் அருண் விஜய்க்கு பெரிய பிரேக் கிடைத்தது. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லமாட்டேன். நான்கைந்து ஹீரோக்கள் கதையில் நடிக்க ரெடியாக இருக்கிறேன். பெரிய ஹீரோ படத்துல வில்லன் வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களைத் தவிர்த்து பிற ஹீரோக்களை இணைத்து படம் எடுத்தால் அந்த மாதிரி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பெரிய ஹீரோ படத்தில் வில்லனாகவோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவோ நடிக்க நான் ரெடி.

பெரிய இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்கும் பழக்கம் உண்டா?

சினிமாவில் எல்லாரையும் எனக்குத் தெரியும். தம்பியாக இருந்தாலும் ஏ.எல்.விஜய் பெரிய இயக்குநர். ‘தலைவா’ படத்தில் கெஸ்ட் ரோல் கொடுத்தார். அதை மறக்க முடியாது.பாலா சாரிடம் வாய்ப்பு கேட்டுள்ளேன். பத்து வருடத்துக்கு முன்பே அவருடைய படத்தில் நடித்திருக்க வேண்டும். எப்படியோ மிஸ்ஸாகிவிட்டது. அவர் படத்தில் ஒரு கேரக்டராவது பண்ண வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரும் அழைப்பு கொடுப்பதாக சொல்லியுள்ளார். அழைப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் கோலிவுட்டில் உள்ள எல்லா இயக்குநர்களிடமும் வாய்ப்பு கேட்டுள்ளேன். அதற்கான காலம் அமையவேண்டும்.

Related Stories: