ஐதராபாத்: கடந்த 15 வருடமாக உடல் நலப் பிரச்னை ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடிகர் நாகார்ஜுனா.மிகவும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கும் நாகார்ஜுனாவையும் ஒரு உடல்நலப் பிரச்சனை வாட்டுகிறது. இது 15 வருடங்களாக உள்ளதாம். இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். ‘‘15 ஆண்டுகளுக்கு முன் மூட்டு வலி தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை என்றாலும், நான் அதைத் தவிர்த்தேன். லூப்ரிகன்ட் மற்றும் PRP சிகிச்சை எடுத்தேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். அவ்வப்போது திடீரென வரும் மூட்டு வலியால் கால் பாதங்களிலும் தீவிர வலி ஏற்படும். இதனுடனேயே வாழ பழகிவிட்டேன்.
அதனால் அறுவை சிகிச்சை இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் தொடர விரும்புகிறேன். என்ன ஆனாலும் உடற்பயிற்சியை விடுவதில்லை. அதை தினசரி பழக்கமாக வைத்திருக்கிறேன். அதேபோல் நீச்சலும் எனது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருப்பேன். பாதி வயிறு நிரம்பிவிட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன். இதுதான் எனது இளமையின் ரகசியம்’’ என்றார் நாகார்ஜுனா.தற்போது தனது மகன் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நாகார்ஜுனா நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘ஜெயம்’ ராஜா இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
