காமெடி நடிகர் மரணம்: 40 நாட்கள் சிகிச்சைக்கு பின் சோகம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலிவுட் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (59), கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் சுய நினைவு திரும்பியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா, நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: