சமந்தா நடித்த வேடத்தில் நடிக்க டாப்ஸி மறுப்பு

ஆடுகளம் படம் மூலம் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் தேடி வரவில்லை. வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை என விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே தமிழ் படங்களில் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கில் நடிக்கச் சென்றார். அங்கும் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை.

தென்னிந்திய படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார் டாப்ஸி. அது அவருக்கு கைகொடுத்தது. பேபி, பிங்க், ரன்னிங் ஷாதி, நாம் சபானா, ஜுட்வா 2 என பல்வேறு இந்தி படங்களில் நடித்தார். இந்த ஆண்டு மட்டுமே இந்தியில் 4 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்த ஆண்டுக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பிஸியாக உள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்த யூ டர்ன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில் அதில் டாப்ஸியை நடிக்க கேட்டு படக்குழு அணுகியது.

ஆனால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். ‘இந்தி படங்களில் நடிக்க ஏற்கனவே கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருப்பதால் யு டர்ன் இந்தி ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் இல்லை’ என்று தெரிவித்தார். தற்போதைக்கு இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் டாப்ஸியிடம் தமிழ் படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டால், ‘யார் வாய்ப்பு தருகிறார்கள், நல்ல வாய்ப்பாக வரட்டும் பார்க்கலாம்’ என்று பதிலடி தருகிறார்.

Related Stories: