பரோட்டா சூரி வைத்த இட்லி கடை

சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலரின் ஆரம்பகால கட்டங்கள் சோகமயமாக இருந்திருக்கிறது. வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பரோட்டா சூரியின் ஆரம்பகால வாழ்க்கையும் சோகமயமானதுதான். இதை அவரே தெரிவித்தார். எனக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். வீட்டில் வறுமை வாட்டியது. சினிமாவில் நடித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணி பஸ் ஏறி சென்னை வந்துவிட்டேன்.

துணை நடிகராக கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திணறினேன். பிறகு தி.நகரில் ஜவுளி கடைகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் பஸ் ஏறிச்சென்று பட வாய்ப்பு தேடுவேன். ஒருநாள் என் அம்மா போன் செய்து சாப்பிட்டியா என்றார். இல்லை தண்ணி குடிச்சிட்டு படுத்திருக்கிறேன் என்றேன். அதைக்கேட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

கடுமையான போராட்டத்துக்கு பிறகு படங்களில் ஓரிரு காட்சியில் நடித்தேன். வெண்ணிலா கபடி குழு படம் என்னை அடையாளம் காட்டியது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பணம் சம்பாதித்தேன். என் அம்மாவிடம் என்ன செய்யலாம் என்றபோது நாம் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம்.

இட்லி, சாப்பாடு கடை வைத்து குறைந்த விலையில் தருவோம் என்றார். அதன்படி மதுரையில் ஒட்டல் தொடங்கினேன். கடவுள் அருளால் நன்றாக வியாபாரம் நடக்கிறது. எனது சகோதரர்கள் அதை பார்த்து கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காமெடி நடிகராக இருக்க விரும்புகிறேன். வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் என்கிறார்கள். நான் ஹீரோ கிடையாது படத்தை இயக்கும் வெற்றிமாறன் தான் ஹீரோ.

Related Stories: