பேரழகி ஐ.எஸ்.ஓ

பெரிய  பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டிய கதைகள், அவ்வப்போது சிறிய  பட்ஜெட்டில் தயாராவதுண்டு. அதுபோன்ற படம் இது. மன்னர்கள்  காலத்தில் வாழும் ஒரு மன்னன், என்றென்றும் தான் இளமையாகவே இருப்பதற்கான ஒரு  பார்முலாவை சில வைத்தியர்களிடம் இருந்து வாங்குகிறான். அந்த பார்முலா தற்போதைய  கடல் ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைக்கிறது. முதியவர்களை இளமையாக்கும் பார்முலாவை, அழகு சாதனம்தயாரித்து விற்கும் கம்பெனி ஆட்களிடம்  கொடுக்கின்றனர். அவர்களும் அதை பலபேரிடம் பரிசோதித்து பார்க்கும்போது, திடீரென்று பார்முலா தோல்வி அடைகிறது.

இந்நிலையில், தனது மகனிடம் கோபித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறும் சச்சுவை அழைத்துச் சென்று பரிசோதிக்கின்றனர். அது வெற்றி பெறுகிறது. பாட்டி சச்சு,  தனது பேத்தி ஷில்பா மஞ்சுநாத்தின் உருவத்தைப் பெறுகிறார். பிறகு என்ன  நடக்கிறது என்பது கதை. சச்சு தனது அனுபவ நடிப்பை நன்கு வழங்கியுள்ளார்.

வயதான காலத்திலும் தன்னுடைய அழகு விஷயத்தில் அதிகமானஅக்கறை செலுத்தும் கேரக்டரில் பொருந்துகிறார். பேத்தி ஷில்பா மஞ்சுநாத்துக்கு வெயிட்டான கேரக்டர்.  பாட்டி, பேத்தி என இரண்டு வேடங்களில் நடித்து சமாளித்து இருக்கிறார். அவரை  காதலிக்கும் ஹீரோ விவேக்கிற்கு அதிகமான வேலை இல்லை.

தவிர ஆர்.சுந்தர்ராஜன், லிவிங்ஸ்டன், போட்டோ பிரேமில் உள்ள டெல்லி கணேஷ் போன்றோர் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். நவ்ஷாத்தின் ஒளிப்பதிவும், சார்லஸ் தனாவின் இசையும் சொல்லும்படி இல்லை. மாறுபட்ட கதையை யோசித்த இயக்குனர் விஜயன், அதை ஆடியன்ஸ் மனம் கவரும் வகையில் படமாக்க  தவறிவிட்டார். இதுபோன்ற கதைகளுக்கு மிகப் பிரமாண்டமான விஷூவல்தான் பலம். அது இருந்திருந்தால், இந்த பேரழகி ரசிக்கப்பட்டு இருப்பாள்.

Related Stories: