சபரியும் ராமனும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சபரி பூர்வ ஜென்மத்தில் ராணியாக இருந்தாள். அப்போது அவள் தன் செல்வத்தினால் பெரியோர்களுக்குத் தொண்டு செய்தாளே தவிர, உடலினால் சிறிதும் உழைப்பு செலுத்தவில்லை. ஒரு முறை அவள் பிரயாகை சென்றிருந்தாள். அங்கே பல மகான்களைத் தரிசித்தாள். மறுபிறப்பில் தனக்கு மகான்களுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பும், அவர்களின் தொடர்பும் கிடைக்க வேண்டும் என்று கோரி, உடலை நீத்தாள். மறுபிறப்பில் மலை வாழ் பெண்ணாகப் பிறந்தாள்.

சபரி முழுமையான அன்பையே ஆதாரமாகக்கொண்ட பக்தியின் வடிவானவள். சபரிக்குத் திருமணம் நிச்சயமாயிற்று, மலை வாழ்மக்களின் வழக்கப்படி அவள் தகப்பன் திருமண விருந்துக்காக இரண்டு ஆடுகளை கொண்டு வந்து வீட்டில் கட்டி இருந்ததை கண்டு பயந்துவிட்டாள். என் திருமணத்திற்காக இதுபோல் பிராணிகளை இம்சை செய்யவே கூடாது என்று எண்ணிய அவள், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பம்பா சரோவர் என்ற ஏரியின் கரைக்கு வந்து மதங்கரிஷியின் ஆசிரமத்துக்கு அருகில் வசிக்கலானாள். சபரி அங்கு ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்திருப்பாள். பிறருடைய கண்களுக்கு தென்படாமல் மகான்களுக்கு பணிவிடை செய்வாள். முனிவர்கள் ஆற்றுக்கு எந்த வழியாக நீராடப்போவார்களோ அந்த வழிகளை யாரும் பார்க்காமல் இரவில் எழுந்து சபரி சுத்தம் செய்வாள்.

இதை கவனித்த மதங்கரிஷி அவளிடம், ``நீ யார்?’’ என்று கேட்டதற்கு அவள், ``நான் ஒரு வேடனின் புதல்வி’’ என்று உண்மையை கூறினாள். உடனே தம் ஆசிரமத்திலேயே வசிக்கும் படி கூறினார். மதங்கரிஷி, ஆசிரமத்தில் இடம் கொடுத்ததற்கு மற்ற முனிவர்கள் அவரை பழித்தார்கள். சபரி, தூய நடத்தை உள்ளவளாக இருந்தும், மற்றவர்கள் அவளை நிந்தனை செய்யத் தொடங்கினார்கள்.

மதங்கரிஷி, சபரிக்கு ``ராம நாம’’ மந்திரத்தை உபதேசித்திருந்தார். அவர் பிரம்மலோகம் செல்லத் தயாரானார். சபரி அதை பார்த்து அவரிடம், ``தாங்கள் சென்றுவிட்டால் என் கதி என்னவாகும் என்று வருத்தத்துடன் கேட்டாள். ரிஷி, ``ராம நாமத்தை ஜெபி. ஒரு நாள் உன் வீட்டுக்கு ராமன் கட்டாயம் வருவார். இப்போது அவர் அயோத்தியில் இருக்கிறார்’’ என்றார். ஸ்ரீராமர் என்றைக்காவது ஒரு நாள் தன் வீட்டுக்கு வருவார் என்று முழுமையாக நம்பி இருந்த சபரி, தினமும் காட்டிலிருந்து ராமனுக்காக இலந்தைப்க்பழங்களை கொண்டு வந்து வைப்பாள். மாலை வரை எதிர்பார்ப்பாள். ராமன் வராததைக்கண்டு அவற்றைத் தானே உண்பாள்.

``நான் பாவியா... ஏன் ராமன் இன்னும் என் வீட்டுக்கு விஜயம் செய்யவில்லை’’ என்று ஏங்கித தவித்தாள். ஆண்டுகள் பல ஓடின. அவள் கிழவி ஆகிவிட்டாள். இருப்பினும் நம்பிக்கையை இழக்கவில்லை. என் குருநாதர் சொல்லி இருப்பதினால் ராமன் என்றாவது ஒருநாள் கட்டாயம் வருவார் என்று நம்பி இருந்தாள். இலந்தைப்பழங்களை ரிஷி குமாரர்களுக்கு கொடுப்பார். கடைசியில் ஒரு நாள் ராமனும், லட்சுமணனும் சபரியின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார்கள். சபரி அப்பொழுதும், ஸ்ரீராம ஜெபமே செய்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் பரபரப்புடன் எழுந்து தக்க ஆசனம் அளித்து அமர வைத்தாள். எனக்கு வேறு உறவு இல்லை எல்லாவற்றிலும் சிறந்தது அன்பினால் ஏற்படும் உறவே என்றாள்.

ராமனுக்கு இரண்டு தொன்னைகளில் இலந்தைப்பழங்களை சபரி எடுத்து வந்து கொடுத்தாள். ஒவ்வொரு பழமாக கடித்து ருசி பார்த்து அவள் அளித்தாள். எதுவும் அகப்படாமல் இருக்கவே இப்படி ருசி பார்த்து அளித்தாள். எச்சில் படுத்தி ராமனுக்கு கொடுக்கிறோமே என்ற உணர்வே, அன்பு மிகுதியால் அவளுக்கு ஏற்படவில்லை. சபரி அளித்த இலந்தைப் பழங்களை ருசித்த ஸ்ரீராமன், அவளை மிகவும் பாராட்டினார்.சபரி, ஸ்ரீராமரை பார்த்துக் கொண்டே யோக சமாதியில் அடங்கிவிட்டாள்.

தொகுப்பு: ஆர். ஜெயலெட்சுமி

Related Stories: