வளங்களை அள்ளித் தரும் வசந்த நவராத்திரி

22-3-2023 முதல் 30-3-2023

அகில உலகத்தையும் ஆளுகின்ற அன்னை பராசக்திக்கு பல்வேறு விழாக்கள் எடுத்து நாம் கொண்டாடு கிறோம். உள்ளூர் கிராமங்களில்கூட கிராமத் தேவதைகளாக அம்பிகை அருளாட்சி புரிந்து வருகிறாள். அனைத்து நாட்களுமே அன்னைக்கு திருநாளாயினும், சில நாட்கள் மிக முக்கியமான நாட்களாக சொல்லப்படுகிறது. இந்த வசந்த காலத்தில் அன்னைக்கு கொண்டாடப்படும் திருநாளே ``வசந்த நவராத்திரி’’ ஆகும். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு.

* ஆஷாட மாதத்தில் (ஆடி) வாராகி தேவிக்கு ``ஆஷாட நவராத்திரி’’.

* சரத்ருது-வில் (புரட்டாசி-ஐப்பசி) துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கான ``சாரதா நவராத்திரி’’.

* மகர மாதத்தில் (தை) வருவது, மாதங்கிக்கு உரிய ``சியாமளா நவராத்திரி’’.

* வசந்தருதுவில் (பங்குனி-சித்திரை) வருவது ``வசந்த நவராத்திரி’’ இது ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரிக்கு உரிய நவராத்திரி ஆகும்.

பங்குனி முதல் சித்திரை வரை `வசந்தருது’ எனப்படுகிறது. இதில், மஹா ஷோடசி எனப்படுகின்ற மஹா பட்டாரிகா ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரிக்கு ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. பங்குனி அமாவாசை முடிந்து வரும் பிரதமையில் இருந்து நவமி வரை ஒன்பது நாட்கள் அம்பிகையை விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

லலிதா திரிபுரசுந்தரி மற்றும்  64 யோகினிகள்

அன்னை லலிதாம்பிகை ஸ்ரீசக்ர மஹா மேரு பீடத்தின் மத்தியில் அமர்ந்து ஆட்சிபுரிகிறாள். அன்னையின் சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் இருபுறமும் இருக்கின்றனர். பைரவரும், காளியும் காவல்புரிகின்றனர். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் அவளின் சிம்மாசனத்தை தாங்கி நிற்கின்றனர். வாராகி படைத்தலைவியாகவும் மற்றும் மாதங்கி அமைச்சராக இருக்க, அம்பிகையில் இருந்து வெளிவந்த சக்திகளான அறுபத்து நான்கு யோகினிகளைக் கொண்டு ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி ஆட்சிபுரிகிறாள். இவளின் தோற்றத்தை `லலிதா சகஸ்ரநாம’ தியானத்தில் கூறப்பட்டுள்ளது.

தியானம்

“அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்

த்ருத-பாசாங்குச-புஷ்பபாண-சாபாம்

அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை -

ரஹமித்யேவ விபாவயே பவானீம்

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித

வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்

கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம்

ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம்

பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்

ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம்

ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி-கஸ்தூரிகாம்

ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்

அசேஷஜனமோஹிநீ-மருண-மால்ய-பூஷாம்பராம்

ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம்

என்று அம்பிகையை தியானிக்கும் ஸ்லோகம் அமைந்துள்ளது. மேரு சாம்ராஜ்யத்தில் அனைத்துத்தேவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். எனவே, ஸ்ரீசக்ர மஹா மேருவை பூஜித்தால், அனைத்துத் தேவர்களையும் பூஜித்த பலன் கிடைக்கும். இந்த வசந்த நவராத்திரி விழாவில் அம்பிகைக்கும், 64 யோகினிகளுக்கும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றது.

வசந்த நவராத்திரி முடிவில், நவமியன்று ராமர் பிறந்த தின விழாவும் (ராம நவமி) கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீசக்ர மஹா மேரு நவாவரண பூஜை, அறுபத்து நான்கு யோகினிகள் பூஜை, சண்டி ஹோமம் போன்றவைகள் கோயில்களில் நடத்தப்படுகிறது. வீட்டில் இருந்தவாறே தினமும் லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்தின மாலை பாராயணம் செய்யலாம். அனைவரும் தவறாமல் `வசந்த நவராத்திரி’ தினத்தில் அம்பிகையை வழிபட்டு இந்த பிரச்னைகள் நிறைந்த காலகட்டத்தில் உலக நன்மையையும், உடல் நலனையையும் வேண்டி அம்பிகையை பூஜிப்போம்.

தொகுப்பு: அனுஷா

Related Stories: