அகிலமெங்கும் ஒளிரும் சிவராத்திரி

சிவராத்திரியின் பலன்

பதினோராவது ராசியான கும்பத்தில் தான் சிவராத்திரி வருகிறது என்பதைப் பார்த்தோம். ஒரு ராசியினுடைய பலன், அதற்கு அடுத்த ராசி தரும் என்பது ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். 11வது ராசியில் சிவராத்திரி விரதம் இருக்கின்றோம். அதாவது கும்ப மாதத்தில் சிவராத்திரியில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுகின்றோம். இதனுடைய பலன், அடுத்த ராசியாகிய 12வது ராசியில் கிடைக்கும் 12 வது ராசி குருவுக்கு உரிய ராசி.

மோட்ச ராசி. மோட்சம் என்றால் விடுதலை. மோட்சம் என்றால் நிம்மதி. கும்பமாதத்தில் மஹா சிவராத்திரி விரதம் இருந்தால், குருவின் அருளால், (மீனம் குருவின் ராசி), துக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறலாம். வறுமையில் இருந்து விடுதலை பெறலாம். நிறைவாக பிறப்புச் சுழலில் இருந்து விடுதலை பெறலாம்.

சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். சிவன் என்கிற சப்தத்துக்கு பல பொருள்கள் உண்டு. சிவன் என்றால், தமிழில் ‘‘சிவந் தவன்’’ என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமை யானது, மங்கலகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

சிவபுராணம் உணர்த்தும் சிவராத்திரி தத்துவம்

 சிவராத்திரியின் தத்துவத்தை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தின் வழியாகத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார். அதனால் தான் சைவ பெருமக்கள் திருவாசக முற்றோதலை கடைப்பிடிப்பதோடு, வைண வர்கள் எப்படி திருப்பாவையை நாள்தோறும் தப்பாமல் ஓதுவார்களோ, அப்படி சிவபுராணத்தை ஓதுதலை, தலையாய கடமையாகக் கொள்ளுகின்றனர்.

சிவபுராணத்தின் தொடக்கமே வாழ்த்துச் செய்தியுடன்தான் தொடங்குகிறது. சிவம் என்ற மங்கலச் சொல்லின் மகத்தான பொருள் “நமசிவாய” என்ற ஐந்து எழுத்தில் தான் நிலைநின்று இயக்குகிறது. நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் மெய்ப்பொருள் தான் சிவராத்திரித் தத்துவம். அதனால்தான் மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தை இப்படித் தொடங்குகிறார்.

 நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

 இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

 கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

 ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

 ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.

ஏன் மாசிமாதத்தில் சிவராத்திரி?

அது சரி, சிவராத்திரி ஏன் மாசி மாதத்தில் நிகழ்கிறது என்பதைக் கொஞ்சம் யோசிப்போம். மாசி மாதம் என்பது கும்பத்தில் சூரியன் இருக்கின்ற மாதம்.  சித்திரையில் ஆரம்பித்தால் மாசி மாதம் 11வது மாதம் அல்லவா. காலச் சக்கரத்தின் 11 வது ராசி கும்ப ராசி. இந்த 11 என்ற தத்துவம் ஏகாதசம் எனப்படும். ஏகம் என்பது ஒன்று. தசம் என்பது 10. இது சிவ தத்துவத்தைக் குறிக்கும் ஏகாதச ருத்ரர்கள் என்று சொல்வதும் உண்டு. ஒன்றுதான் பத்து, நூறு, ஆயிரம் ஆகிறது.

மணிவாசகப் பெருமான் சொன்ன “ஏகன், அனேகன்” என்ற தத்துவத்தை இங்கே பொருத்திப் பார்த்தால்,11 என்ற எண்ணின் பெருமையை நாம் தெரிந்துகொள்ளலாம். 11 என்ற எண்ணில் இரண்டு ஒன்று (1=!) உண்டு. முதல் 1 சிவ தத்துவம். அடுத்த 1 சக்தி தத்துவம். இரண்டையும் கூட்டினால் (2) இரண்டு வரும். அது சிவசக்தி தத்துவம். உமையொரு பாகனாகக் காட்சி தந்ததும் இந்த சிவராத்திரியில் தானே. எனவே சிவராத்திரிக்குரிய மாதமாக 11 வது மாதம் கும்பமாதம் பொருத்தமாக வருகிறது.

சிவனுக்கு கண்ணப்பன் கண் தந்த சிவராத்திரி

சிவலிங்கத்தின் கண்களில் குருதி வழிகிறது என்ற காட்சியைக் கண்டு, மனம் கொதித்து, தன்னுடைய கண்களையே தர முன் வந்த திருக்கண்ணப்பனின் பெருமை, இந்த உலகிற்குத் தெரிந்தது சிவராத்திரியில் தான். அதனால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளால், ‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்றும், பட்டினத்தாரால் ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என்றும், திருநாவுக்கரசரால் ‘‘திண்ணன், கண்ணப்பன், வேடன்’’ என்றும் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

தியாகத்தின் பெருமையை உணர்த்துவது சிவராத்திரி திருநாள் என்பதை கண்ணப்பனின் கதை மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அவர் சிவலிங்கத் திருமேனியை வெறும் கல்லாகக் கருதவில்லை. தன்னுடைய கண்ணாகக் கருதினார். ஒரு குழந்தையைப் போல ஈஸ்வரனை நேசித்தார். அந்த ஈசனை தன்னுடைய காலால் தொட்ட கண்ணப்பனுக்கு தந்த காட்சி, பல காலம் கையால் தொட்டு பூஜை செய்த அந்தணருக்கும் கிடைத்தது என்பது தான் அற்புதம். இந்த அற்புதம் நிகழ்ந்தது ஒரு சிவராத்திரியில்.

இந்த ஆண்டு சிவராத்திரிக்கு என்ன சிறப்பு?

 இந்த ஆண்டு சிவராத்திரி, மாசி மாதம் ஆறாம் தேதி, (18.2.2023) வருகிறது. மாசி மாதம் கும்ப மாதம். கும்ப ராசியை ஆள்வது சனி. சிவராத்திரி இந்த ஆண்டு சனிக்கிழமை வருகிறது. இது முதல் விசேஷம். இரண்டாவது சூரியனும் சந்திரனும் நட்சத்திர ரீதியில் இணைகின்ற நாள். சூரியன் சிவனாகவும், சந்திரன் சக்தியாகவும் இணைந்து சிவ சக்தி சொரூபமாக உள்ளனர். இந்த ஆண்டு சிவராத்திரி, சூரியனுக்கு உரிய உத்திராட நட்சத்திரத்திலும் (மாலை சுமார் 5 மணி வரை), பிறகு சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்திலும் வருவது இரண்டாவது சிறப்பு.

சனி பிரதோஷம் என்பது மிகவும் விசேஷம். இந்த சிவராத்திரி சனி பிரதோஷ நாளாகவும் வருகின்றது. வியதி பாத சிரார்த்த நாளாகவும் வருகின்றது. உலகில் பிதிர்களின் (குல முன்னோர்கள்) உய்வின் பொருட்டு செய்யப்படுகின்ற, சிரார்த்த வகைகள் 96. அதில் 13 சிரார்த்தம், வியதி பாத சிரார்த்தம். எனவே முன்னோர் கடன் தீர்க்கும் நாளாகவும் வருவது சிறப்பு.

கும்பராசியின் பெருமை

கும்ப ராசி என்பது ஆண் ராசி. ஸ்திர ராசி. ஸ்திரம் என்றால் நிலைத்தது, அழியாதது என்று பொருள். சிவம் என்ற தத்துவத்திற்கு அழியாதது என்று பொருள். பஞ்சபூதங்களிலேயே மிக முக்கியமானது காற்று. மூச்சு(காற்று) இல்லா விட்டால் பேச்சு இல்லை.  காற்றை உள்ளே செலுத்தி நிலை பெற்றதாக நின்று, உயிர் தத்துவத்தை இயக்குவது பரம்பொருளாகிய சிவம். கும்ப ராசி காற்று ராசி என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். கும்பமாகிய இந்த உடம்பில் காற்றை உள் நிறுத்தி, உள்முக ஆற்றலைப் பலப்படுத்தி, சிவமாகிய தத்துவத்தை உணர்வது தான் சிவராத்திரியின் நோக்கம்.

நீங்கள் புறப் பார்வையைப் பார்க்கும்போது அகம் இருளடையும். ஆனால் சிவ ராத்திரியில் வெளியிலே(புறத்திலே) இருள் இருக்கும். ஆனால் அகம் விழிப்படைந்து ஒளி பிறக்கும். கும்பத்தில் காற்றை ஒடுக்கி, பரிபூரண தியான நிலையில் பரமேஸ்வரனைச் சிந்தித்து, அகம் மலர்ந்து, பூரணமாக விகசித்து, பரம்பொருள் என்னும் ஒளியை உணர்வது தான் சிவராத்திரி.

சிவராத்திரியும் பஞ்சபூதங்களும்

சிவப்பரம்பொருளின் தத்துவத்தையும் சிவராத்திரியின் தத்துவத்தையும் ஊனுருக விளக்கும் உருக்கமான பாடல் இந்தத் திருவாசகப் பாடல்.  

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

பஞ்சபூத தத்துவங்களாக இறைவன் விளங்குகின்றான் என்பதை. அற்புதமாகக் காட்டுகின்றார். பஞ்சபூத தத்துவங்கள் தான் சிவராத்திரி தத்துவம் என்பதை இப்படிச் சிந்திக்கலாம். இந்த வானுக்கு கீழேதான் மங்கலமான பூமியில் நாம் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளுகின்றோம். வானாகிப் பரந்திருக்கும் சிவபெருமானை வணங்குகின்றோம் என்பதால் வான் தத்துவம் வந்துவிடுகிறது. மண் ராசியான மகரத்தில் உள்ள திருவோண உத்திர நட்சத்திரக் கலவையில் தான் சிவராத்திரி வருகிறது. எனவே இங்கே நிலத் தத்துவம்  வந்துவிடுகிறது.

காற்று ராசியான மாசி மாதத்தில் சிவராத்திரி வருவதால் காற்று தத்துவம் வந்துவிடுகிறது. இதை அடுத்து நீர் ராசியாகிய மீன ராசி இருப்பதால் நீர் தத்துவமும் வந்துவிடுகிறது. சிவராத்திரியின் நிறைவாக அக்னித் தத்துவமாக, சிவபெருமான் ஒளிவெள்ளமாக எழுவதால் நெருப்புத் தத்துவமும் வந்துவிடுகிறது.

சிவராத்திரியே வழி

பத்தாவது ராசி கர்மராசி (வினை). 11வது ராசி லாப ராசி. கர்ம பலனைத் தரும் ராசி. இந்த கர்மபலனில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி ஈஸ்வரனை சரண் அடைவது தான். ஈஸ்வரன் என்கின்ற பட்டம் சனிக்கும் உண்டு. அதனால் நாம் சனி பகவானைச் சரணடைந்து விடுகின்றோம். ஆனால் அது முறையல்ல. சனிக்கு அந்த பட்டத்தைத் தந்த ஈஸ்வரனை சரண் அடைந்தால் தான் சனியின் பிடியிலிருந்து (சனி திசை பாதிப்பு, ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,) விலக முடியும்.

கிரகங்கள்  ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டவை. திருநள்ளாறுக்கு சென்றால் முதலில் அங்கே இருக்கக்கூடிய தர்ப்பாரண்யேஸ்வரரைத்தான் வணங்க வேண்டும் அவரை வணங்கி விட்டு, பிறகு சனி பகவானுக்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வந்தால் போதும். சனி பகவான் மகிழ்ந்து தன்னுடைய பிடியை தளர்த்திக்கொள்வார். கர்ம பலனைக் கொடுக்கக் கூடிய 11 வது ராசியில் சிவராத்திரி வருவதால், சிவனைச் சரணடைந்து, கர்ம பலனில் இருந்து விடுபட வேண்டும் என்பதே சிவராத்திரி தத்துவம்.

Related Stories: