பௌர்ணமி யோகம்

ராசிக்கட்டம் பன்னிரண்டும், பன்னிரண்டு மாதங்களாக இருப்பது சிறப்பு. அந்த ராசி கட்டத்தில் அதாவது அதற்குரிய தமிழ் மாதத்தில் தனிச்சிறப்பு பெற்ற நாளாக பௌர்ணமி உள்ளது. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது முழு ஒளியையும் பூமியின் மீது விழுமாறு அமைகிறது. இப்புவியில் உயிரினங்கள் ஜனிப்பதற்கும் மேலும், உயிர்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் சந்திரனே காரணமாகிறான். ஆகையால், பெளர்ணமி நாளில் இயற்கை மாற்றங்களும் மனிதனின் மனதில் உண்டாகும் மாற்றங்களும் தனிச்சிறப்பை பெறுகின்றன. அப்படி சிறப்புப் பெற்ற இந்த பௌர்ணமி நன்நாளின் மகத்துவத்தை அறிவோம் தெளிவோம்.

பௌர்ணமி ஏன் சிறப்பான நாளாக இருக்கிறது?

ஜோதிடத்தில் ஒளி கிரகங்கள் சூரியன், சந்திரன் மட்டுமே மற்ற கிரகங்கள் ஒளியை பிரதிபலிப்பு மட்டுமே செய்கின்றன. அப்படிப்பட்ட இயற்கை ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் சப்தம ஸ்தானமாக அமர்ந்து சந்திரன் தன் மீது விழும் கதிர்களை பூமியின் மீது விழச் செய்கிறது. சூரியனிலிருந்து சந்திரன் மீது விழும் இந்த அதிகப்பட்ச கதிர்வீச்சால் சந்திரனில் காந்தசக்தி அதிகமாக உருவாகின்றது. இந்த சந்திரனின் காந்த சக்தியின் ஈர்ப்பால் பௌர்ணமி நேரங்களில் கடலில் எழும்பும் அலைகள்கூட புவியீர்ப்பு விசையை எதிர்த்து அதிகமாக மேல்நோக்கி எழும்புகின்றது.

இந்நாளில் புவியில் மேல்நோக்கி வளரும் தாவரங்கள் கூட சற்று அதிகமாக வளரும் தன்மை உடையனவாக உள்ளது.  மேலும், நம் உடலில் ரத்தத்தின் ஓட்டத்திற்கு காரண கிரகமாக சந்திரன் இருப்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்வு ஏற்படுகின்றது. தியானம், பிராணயாமம் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அதிகமான சக்தி பெற்ற உணர்வை இந்த பௌர்ணமி நாளில் நாம் பெறுகிறோம். தியானம் இன்னும் ஒரு படி நிலை மேல்நோக்கி சென்று, தியானம் ஆழமாகிறது. இக்காலக்கட்டத்தில் ஒரு வேளை நோன்பு இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நேர்மறை எண்ணங்களை விதைக்கும் போது ஒருபடி மேல்நோக்கி நல்ல பலனை உற்பத்தி செய்கின்றது. அதனால் நம் மனம் தூய்மை அடைகிறது. கோயில்களில் நாம் செய்யும் எண்ணத்தில் உண்டான பிரார்த்தனைகளை ஆழ்ந்து செய்யும் போது பிரார்த்தனை பலிதமாகிறது.

பௌர்ணமியில் பிறந்த ஜாதகரின் சிறப்பு என்ன?

ஒருவர் பிறந்த திதிக்கு ஏற்ப திதி சூன்யம் ஜனன ஜாதகத்தில் ஏற்பட்டு, சில ராசிக் கட்டங்கள் முடக்கு ராசிகளாக மாறி பாவகங்கள் செயல்படாமல் இருக்கும். ஆனால், பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் இல்ைல. எனவே, ராசி கட்டங்கள் முடங்காது. அனைத்து பாவங்களும் இயங்கும் அமைப்பாக இருக்கும். சூரியன் ஆத்மாபலம், தந்தை, கால்சியம் ஆகியவைகளை குறிக்கின்றன. சந்திரன் - தாய், மனம், உடல், உணவு ஆகியவற்றை குறிக்கின்றன. மேற்கண்டவைகளை சிறப்பாக பெற்றவனாகிறான். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையின் அன்புக்கு பாத்திரமானவன் ஆகிறான். மேலும், தன்னம்பிக்கையும் தைரியமும் இயல்பாகவே கிடைக்கப் பெற்றவனாகிறான்.

பௌர்ணமியில் பிறந்தவர்கள் பொதுவாக அழகுடன் தேஜஸாக காட்சியளிப்பார்கள். தந்தையிடம் இருந்து பெறும் சொத்துகள் கிடைக்கப் பெற்றவன் ஆகிறான். சொத்துகள் என்றதும் நீங்கள் வீடு, மனை, பணம் என எண்ணிக் கொள்ள வேண்டாம். இங்கு தைரியம், திறமை, எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் தீர்வை நோக்கி செல்லும் ஆத்ம பலம், பலர் இவர்களுக்காக வேலை செய்யும் ஆள் அடிமை பலம், அதிகாரம் அல்லது பதவியை பெறுவது, தனி மனித கௌரவம், சம்பாத்தியத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.

பெளர்ணமியில் பிறந்த புத்தர் பிரான், குருநானக், ராகவேந்திர சுவாமிகள் மற்றும் ஞானியர்கள் பலரும் வழிகாட்டியாக வாழ்ந்து பல நூற்றாண்டுகள் கடந்தும் இவர்களுடைய போதனைகளும் என்றும் மக்களின் மனதில் நீங்கா வண்ணம் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகளை செய்து சென்றுள்ளனர். . அதே போல, பௌர்ணமியில் பிறந்த பலர் அரசாளும் யோகத்தை பெற்று புகழுடன் வாழ்ந்தவர்களாக உள்ளனர்.

எந்த பௌர்ணமி ஜனனம் சிறப்பாக கருதப்படுகிறது?

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் உள்ள பெளர்ணமி மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. காரணம் அன்று சூரியன் மேஷ வீட்டில் மிகவும் உச்சம் பெற்று அதிகமான கதிர்களை வெளியிடுகிறான். அப்போது பிறக்கும் ஜாதகர் அதிக தன்னம்பிக்கை உடையவனாகவும் எதையும் சாதிக்கும் வல்லமை உடையவனாகவும் உள்ளான். சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ள பௌர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. காரணம் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடைகிறான். அதனால், சந்திரன் முழு சக்தியையும் சூரியனிடமிருந்து பெறுகின்றது. இந்த நாளில் கார்த்திகை தீபம் ஏற்றி தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம். தைமாதம் பூச நட்சத்திரத்தில் உள்ள பௌர்ணமியும் சிறந்த பௌர்ணமியாக உள்ளது. கடகத்தில் சந்திரன் தன் சொந்த வீட்டில் வலிமை பெறுகிறான். பழனியில் முருகப் பெருமானை வழிபட்டு அந்த மலையின் கதிர்கள் நம்மீது பட்டு சிறப்பான பலன்களைத் தருகிறது.

ஆவணி மாதம் சூரியன் தன் சொந்த வீட்டில் இருக்கும் போது சந்திரன் அவிட்ட நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தையும் சிறந்த பலம் உடையவனாகவும் தேஜஸ் உடையவனாகவும் திகழ்கிறான். இக்காலத்தில்தான் வேத உபநயனத்தை தொடங்கமாக ஆரம்பம் செய்கிறார்கள் குழந்தைகளுக்கு.

பௌர்ணமி தினத்தில் நாம் என்ன செய்யலாம்?

எப்படி நாம் சூரியக் குளியல் (Sun Bath) என்று சொல்கிறோமோ? இந்த பெளர்ணமி நாளை சந்திரக் குளியல் (Moon Bath) எனச் சொல்லலாம்.  இந்த நாளில் நாம் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்திராமல், மொட்டை மாடிகள் மற்றும் திறந்த வெளியில் வந்து சந்திரனின் அழகை தரிசித்து அந்தக் கதிர்களை நம்மீது படும்படி இருப்பது நமக்கு நன்மை பயக்கும். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் அல்லது சிவன் கோயில்களையே மூன்று முறை வலம் வரலாம். கடற்கரை அல்லது ஆற்றங்கரைகுச் சென்று முழுநிலவின் தரிசனம் செய்வதால் சந்திரனின் சக்தியை நாம் பெறலாம்.

பௌர்ணமி யாரை பாதிக்கும்?

வயதான நோயுற்ற பெண்களுக்கு நோய் வலுவடையும் ஆதலால், கவனம் தேவை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இக் காலத்தில் மேலும் அதிக படபடப்பிற்கு ஆளாகின்றனர்.

Related Stories: