திருமேனி பிரகாசம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

(சக்தி தத்துவம் சென்ற இதழின் தொடர்ச்சி)

தந்திர சாஸ்திரங்களானது ஒவ்வொரு மந்திரத்திற்கும் உரிய தேவதைகளை அதற்குரிய வழிபாட்டை அதை செய்ய வேண்டிய நாட்களை, செய்யவேண்டிய பொழுதை, அதற்கு தேவையான பொருட்களையும் பத்ததிகள், கல்பங்கள் என்ற பூசனை செயல்முறை விளக்க நூல்கள் இவை எல்லாவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றார். பேணுதல் என்பதால் உபாசனை நெறிகளை பின்பற்றுதலையும், தான் கொண்ட உபாசனை நெறியைத் தவிர பிற தெய்வங்களின் உபாசனை நெறியைப் பின்பற்ற மாட்டேன் என்பதையும் நமக்கு அறிவுறுத்துகிறது.

 மேலும், புகழ்ச்சியன்றி என்பது தேவி மஹாத்மியத்தில் வரும் அசுரர்களை வதைத்த கதைகளையும், சகஸ்ரநாமத்தில் உள்ள உபாசனை நெறி விளக்கங்களையும் தெளிவுறக் கூறும் பண்டாசுர வதம், மகிஷாசூரவதம், சும்ப, நிசும்ப வதம் போன்ற சம்ஹாரங்களில் ஒவ்வொரு உமையம்மையின் திருவுருவம் தோன்றிய சூழலையும் திருவுருவத்திற்கே உரிய தனிச் சிறப்பையும் செவ்வனே எடுத்து இயம்பும் கதைகளாக இன்றுவரை பாராயணம் செய்து வருகின்றனர். அதை உமையம்மை கேட்பதாகவும், நம்பப்படுகிறது.

மேலும், இந்த பாராயணமானது மனதிற்கும், நினைவிற்கும், மொழிக்கும் எட்டாத இறைவியின் வடிவத்தை மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம், புத்தி, இவைகளுக்கு விளங்கும் வகையில் உமையம்மையின் அருள் சக்தியை நமக்கு தெளிவுற புலப்படுத்தும் வல்லமை பெற்றது என்கிறது. தந்திர சாஸ்திரம் இதையெல்லாம் மனதில் கொண்டே “நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்” என்கிறார்.

“ஒருபொழுதும் திருமேனி பிரகாசமன்றிக் காணேன்”

ஒருபொழுதும் என்பதற்கு எப்பொழுதும் என்று பொருள். திருமேனி பிரகாசம் என்பது உமையம்மையை மனதிலே எப்பொழுதும் தியானம் செய்து கொண்டிருப்பவரை திருமேனி என்ற தமிழ் வார்த்தையால் குறிப்பிடுவர். மலையாளப் பகுதியில் வழிபாடு செய்விப்பவரை திருமேனி என்றே குறிப்பிடுவர். திருமேனி பிரகாசம் என்பது மானுடத்து உள்ளே ஒளிந்து கிடக்கும் ஜோதியான குண்டலினி என்ற ஒருவித தெய்வீகப் பேராற்றலாகும்.

மறைந்திருக்குமிதை வெளிப்படுத்த தியானம், ஜபம், பூஜை எனப் பல வழிகள் உள்ளன. இதைப் பற்றி சாக்த ஆகமங்கள் மிக விரிவாகப் பேசுகிறது. அந்த குண்டலினி சக்தியைத் தான் “திருமேனி பிரகாசம்” என்கிறார் இதனை ‘ஒளியே’ (23) என்பதனால் அறியலாம். குண்டலினி சக்தியை அறிய ஒரு சிறு குறிப்பை இங்கு காணலாம். அது “திருமேனி பிரகாசம்” என்ற வார்த்தையை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இது தந்திர சாஸ்திரத்தின் விளக்கச் சொல்லாகும். ஆகையால், சற்று நிறுத்தி பயில வேண்டுகிறேன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற ஆறையும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் தனித்தனி குறியீடுகளால் தியானம் செய்வர். மேலும், ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு மந்திரத்தின் அட்சரத்தைத் தியானம் செய்வர்.

ஒவ்வொரு அட்சரத்திலும் [எழுத்திலும்] ஒவ்வொரு தேவதையை தாமரை இதழ் வடிவில் தியானம் செய்வர். ஒவ்வொரு இதழிலும் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை தியானம் செய்வர். இதுபோல் எழுத்துக்களை உமையம்மையின் உடல் உறுப்பாக கருதி, நம் உடலுக்குள் இருப்பதாக மனதிற்குள் எண்ணி தியானிப்பர். அந்த முறையையே “திருமேனி பிரகாசம்மின்றி காணேன்” என்றார். அதை சற்று விளக்கமாக காண்போம். இதை எழுத்தும் இறைவியும் என்ற முறையில் கீழ்க்கண்ட வரிசையில் சிந்திப்போம்.

சாக்த தந்திரங்கள் உமையம்மையை அகத்தும், புறத்தும், அகப்புறத்தும்; உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவத்தில் பிரித்து மனதால் தேவதைகளை நினைத்தும், வாக்கால் மந்திர எழுத்துக்களை உச்சரித்தும் செயலால் அசைவற உடலை நிறுத்தியும், பயிற்சி செய்கின்றது. இந்தப் பயிற்சியானது மூன்று வகையில் தியானம், ஆசனம், ஜபம் என்ற கலைச்சொற்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்றைப் பற்றிய விளக்கத்தையே இந்த பாடல் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.

இறைவியே எழுத்துக்களாகவும், பஞ்சபூதங்கள் மற்றும் ஆன்மாவை கட்டம், வட்டம், நிறம் என்ற வடிவங்களாகவும், தேவதைகளை வடமொழியில் உள்ள எழுத்துக்களை உள்ளடக்கிய தாமரை இதழ்கள் போலவும் எண்ணி தியானம் செய்வதாகும். இந்த தியானப் பயிற்சியில்தான் அபிராமிபட்டர் அடிக்கடி அசையாமல் அமர்ந்து விடுவார். இந்த பயிற்சியினால் தேவதையின் தரிசனம் எதிர்கால நிகழ்வுகள் இவற்றை அறியலாம் என்கிறது ஆகமத்தில் உள்ள யோகப்பகுதி. இதை ஆகம சாஸ்திரங்கள் ஆறுவகை பகையை போக்க அதாவது;

ஆசை [காமம்]

சினம் [க்ரோதம்]

பற்று [லோபம்]

மயக்கம் [மோகம்]

ஆணவம் [மதம்]

பொறாமை [மாச்சர்யம்]

என்ற குணங்களை நீக்குவதன் பொருட்டு உபதேசிக்கின்றன.

இதையே ‘ஆசை கடலில் அகப்பட்டு’ (32) என்ற ஆறுவகை பகையையும், ‘கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது’ (23) என்பதனால் தியானத்தையும் ‘என்தன் நெஞ்சகமோ’ (20) என்பதனால் யோகத்தையும் மிக தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த தியான வகையை, `அந்தர் மாத்ருகா நியாசம் பூத சுத்தி’ என்ற கலைச்சொல்லாலும் இந்த பயிற்சியையே குறிப்பிடுகின்றனர். இதையெல்லாம் மனதில் கொண்டே புற நினைவுகளை ஒதுக்கி அகத்தில் இறைநினைவை பொருத்தி, ஆன்ம ஒளியை பெருக்கி, உலகியல் சிந்தனைகளை விலக்கி இருப்பதையே “ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றி காணேன்” என்கிறார்.

 பெயர்    இடம்    அடையாளம்    மந்ராட்சரம்    தேவதை    இதழ்    நிறம்

மூலாதாரம்     குதத்திற்கும்

கோசத்திற்கும் நடு    முக்கோணம்    ஓம்காரம்    கணபதி குண்டலினி    நாளிதழ் கமலம்    மாணிக்கம்

ஸ்வாதிட்டானம்     கோசத்திற்கும்

நாபிக்கும் நடு    நாற் சதுரம்    “ந”    ப்ரம்மா, சரஸ்வதி    ஆறிதழ் கமலம்    செம்பொன் நிறம்

மணிப்பூரகம்     நாபிக் கமலம்

மூன்றாம் பிறை    மூன்றாம் பிறை    “ம”    விஷ்ணு லக்ஷ்மி    பத்திதழ் கமலம்    மரகத நிறம்

அனாகதம்     இதயக் கமலம்    முக்கோணம்    “சி”    உருத்திரன் பார்வதி    பன்னிரெண்டிதழ்க்கமலம்    ஸ்படிக நிறம்

விசுத்தி     கழுத்து    அரசிலை    “வா”    மகேஸ்வரன்

மகேஸ்வரி    பதினோரிதழ்க்கமலம்    மேக நிறம்

ஆஞ்ஞை    நெற்றி    வட்டம்    “ய”    சதாசிவம் மனோன் மணி    மூன்றிதழ் கமலம்    நீல நிறம்

முனைவர்  பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: