ஜோதிடரிடம் இதை மட்டும் கேட்காதீர்கள்

நாம் எல்லோருமே நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி தெரிந்து கொள்வதில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த ஆசைதான் நாம் ஜோதிடர்களையோ, கைரேகைகாரர்களையோ, வாஸ்து நிபுணர்களையோ, இல்லை, இந்த மாதிரி எதிர்காலத்தைச் சொல்லக்கூடிய குறி சொல்பவர்களையோ நாடச்செய்கிறது. இது ஒன்றும் தவறு இல்லை. இது இயல்பான விஷயம்தான்.

ஆனால், நாம் இதில் உள்ள சில அடிப்படையான விஷயங்களை உணர்ந்து கொண்டால், இதை எப்படி அணுகுவது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

சில பேர் பிறப்பு ஜாதகம் தான் சரி, அதை வைத்துக் கொண்டுதான் சொல்ல முடியும் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் ஜாதகங்களில் பலவிதமான நேர மாற்றங்கள் எல்லாம் வந்து விடும், சரியான பிறப்பு நேரத்தை குறித்துக் கொள்வது மிகவும் சிரமம், ஆனால் ஒருவனுடைய கைரேகை மாறாமல் இருக்கும் ஆகையினால் கைரேகை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை மிக எளிதாக கணித்து விடலாம் என்று சொல்லுகின்றார்கள்.

இன்னும் சில பேர், அதெல்லாம் வேண்டியதில்லை. நீங்கள் வந்த நேரத்தை வைத்துக்கொண்டு ஒரு பிரஸ்னம் பார்த்து உங்களுடைய எதிர்காலத்தை சொல்லிவிடலாம் என்று சொல்லுகின்றார்கள். வெறும் முகத்தை மட்டும் பார்த்து எதிர்காலத்தை துல்லியமாக கணித்து சொல்பவர்கள் இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். கட்டைவிரல் ரேகையை வைத்துக்கொண்டு நாடியைத் தேடிக் கண்டுபிடித்து, ஜாதகம் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது, அதை நான் படிக்கிறேன் கேள் என்று சொல்லக்கூடிய நாடி ஜோதிட வல்லுநர்கள் இருக்கின்றார்கள்.

இன்னும் நூதனமாக, டெலிபோன் நம்பரை வைத்துக்கொண்டு பலன் சொல்பவர்கள், ஆதார் கார்டு வைத்துக் கொண்டு பலன் சொல்பவர்கள், பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பலன் சொல்பவர்கள் என்று பலரும் இருக்கின்றார்கள். நட்சத்திர சார ஜோதிடம், கே.பி சிஸ்டம், ஹோரா சிஸ்டம், ஜாமக்கோள் ஆருடம், அட்ச லக்னபத்ததி  என்று சொல்லுகின்றார்கள். நீங்கள் இன்றைக்கு இணையதளத்தில் சென்று பார்த்தாலும் சரி, பத்திரிகைகளிலும் சரி ஏராளமான ஜோதிட முறையில் எதிர்காலத்தைச் சொல்வதற்கு குவிந்து கிடக்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதையும் சொல்லுவதினால், நமக்கு, ஓஹோ இந்த முறைதான் சரியான முறைபோல் இருக்கிறது என்கிற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இதில் அடிப்படையாக நான் சொல்ல வந்த கருத்து இதுதான். நீங்கள் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்லுகின்றீர்கள். ஒரு வருடங்களுக்கு குறிப்பிட்ட நிகழ்வைச் சந்திக்கப் போகிறீர்கள். அதுதான் விடை. இந்த விடையை யார் சொன்னாலும் அது சரிதான். கைரேகையை வைத்துக்கொண்டு சொன்னாலும் சரிதான், கிருஷ்ணமூர்த்தி பத்ததியை வைத்துக்கொண்டு சொன்னாலும் சரிதான். வெறும் முகம் பார்த்து சொன்னாலும் சரிதான். இங்கே பலன்தான் முக்கியமே தவிர வழிமுறைகள் முக்கியமல்ல.

சிறந்த முறை (authenticated and accurate systems) என்று பல துல்லிய முறைகளாக இருக்கலாம். ஆனால், இத்தனை முறையையும் பின்பற்றி பலன் சொல்கின்றவர்கள் அவ்வளவு பேரும் இதில் நிபுணர்களாக (experts) இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை. அதைவிட பிரபஞ்சத்தின் சூட்சுமமான ரகசியத்தை அவ்வளவு துல்லியமாகவும் எளிதாகவும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. எத்தனை படித்தாலும், எத்தனை அனுபவம் இருந்தாலும், மனிதனின் அறிவு என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது (with limited knowledge) தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாரத்வாஜ மகரிஷி பல பிறவிகள் தொடர்ந்து தன்னுடைய ஆயுளை வளர்த்துக் கொண்டு வேதத்தை படிக்கின்றார். அத்தனை ஆண்டுகள் படித்த பிறகு அவருக்கு இந்திரன் காட்சி தந்து,” இத்தனை ஆயுளிலும் நீ படித்தது ஒரு சிறு அளவு தான், இன்னும் படிக்க வேண்டியது மலை போல் உள்ளது” என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இன்னொரு விஷயமும் அவர் சொல்லுகின்றார். இந்த பர்வதம் வளர்ந்து கொண்டே இருப்பதுபோல நீ படிக்க வேண்டிய விஷயங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்.

என்ன பொருள்? இந்த பிரபஞ்சத்தினுடைய அத்தனை ரகசியங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் அதற்குப் பொருள். எனவே எந்த முறையிலும் ஆய்வு செய்தாலும், சில ரகசியங்களை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. உதாரணமாக நீங்கள் ஒரு விஷயத்தைக் குறித்து ஜோதிடரிடம் கேட்கின்றீர்கள். அவர் நுட்பமாக கணக்கீடுகள் செய்து இந்த விஷயம் நடக்கும் என்று சொல்லுகின்றார் என்று சொன்னால், அது 100% நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இது இன்றைக்கு உள்ள பிரபலமான ஜோதிடர்களைக் குறைத்துச் சொல்வதற்கு அல்ல. பிரபல ஜோதிடர்களும் என்ன சொல்கிறார்கள்.? “நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்; தினம்தினம் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுகின்றேன்; இந்த ஜோதிடக் கலையை முழுமையாக கற்றவன் அல்ல” என்று அவர்களே சொல்வதால், சொல்லும் பலனில் அந்த கற்காத பகுதிகளும் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

காரணம் நூறு விதிகளை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை நாம் தீர்மானம் செய்தாலும், 101 வது புது விதி உருவாகி அந்த விஷயத்தை நடத்த முடியாமலும் செய்துவிடும்.

இராமருடைய பட்டாபிஷேகத்தை நாள் குறித்து கொடுத்த வசிஷ்டர், மிகப்பெரிய வேத பண்டிதர். இன்னும் சொல்லப்போனால் திரிகால ஞானி. அப்படிப்பட்டவர்களுக்கும் விளங்காத சில விஷயத்தை, பரமாத்மா தன்னுடைய சங்கல்பத்தினால் நடத்திக் காட்டுகின்றான். அது ஜோதிட சாஸ்திரத்தின் பிழை அல்ல. நம்முடைய கர்மாவை நடத்திக் காட்டுவதற்குத் தான் கிரகங்கள் அமைந்திருக்கின்றன. அது இப்படித்தான் நம்மை நடத்தப் போகிறது என்று நாம் துல்லியமாக கணக்கிட்டாலும் கூட, நம்மை விட ஆயிரம் மடங்கு நுட்ப கணித சாஸ்திரத்தில் வல்ல கிரகங்கள் அந்த விஷயத்தை பொய்யாக்கிவிடும்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்ன என்று சொன்னால் சில முக்கியமான, எளிதில் நமக்கு பிடிபடாத விஷயங்களுக்காக மட்டும் நீங்கள் திறமையான ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தை காட்டி என்ன நடக்கும் என்பதை அல்ல, என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தவறு இல்லை. அது அப்படியே நிகழாமல் இருக்க என்ன விதமாக பிராயச்சித்தங்கள் அல்லது முயற்சிகள் செய்து தடுக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். நமக்கு பாதகமான விஷயங்களாக இருந்தால் அவை 100% (நிச்சயம்) நடக்கும் என்று நம்பாமல் அது நடக்காமல் இருப்பதற்கும் வழி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு விழிப்புடன் இருங்கள்.

நமக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொன்னால் அது நிச்சயம் நாம் உட்கார்ந்து இருந்தாலும் நடந்து விடும் என்று நினைக்காமல், அந்த விஷயம் நடத்துவதற்கு நம்முடைய உற்சாகத்தையும் நம்முடைய நேர்மறை சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டு உழையுங்கள்.மிகுந்த தன்னம்பிக்கையும், தெய்வபக்தியும், செய்யும் செயல்கள் எல்லாம் நேர்மறையாகவும் இருக்கும் பொழுது நீங்கள் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ஜோதிடம் மூலம் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள். மிக முக்கியமாக உங்கள் ஆயுளைப் பற்றி ஜோதிடரிடம் எக்காரணத்தை முன்னிட்டும் கேள்வி கேட்காதீர்கள்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: