ஆழ்வார்திருநகரியின் அற்புத சிற்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

காலம்: பிற்காலப் பாண்டியர் (பொ.யு.12-ஆம் நூற்றாண்டு) மற்றும் நாயக்கர் (15-16-ஆம் நூற்றாண்டு)

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில், 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

மூலவர்: ஆதிநாதன்(பொலிந்து நின்றபிரான் - நின்ற திருக்கோலம்)

தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி.

நம்மாழ்வார்

மாறன் என்ற இயற்பெயர் கொண்ட பாண்டிய மரபினரான `நம்மாழ்வார்’ அவதரித்த திருத்தலம் இதுவாகும். கொடிமரத்துடன் கூடிய தனிசந்நதியில் பெருமாளுக்கு நிகரான பெருமைநிலையில் நம்மாழ்வார் எழுந்தருளி காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்படுகிறார். இங்குள்ள நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி புகழ்பெற்றது. ஒரு கவிஞன் தெய்வாம்ச நிலை பெற்று, இறைவனுக்கு நிகராக அமர்ந்திருக்கும் ஆலயம் இது என்றால் அது மிகையன்று.

அந்தண குலத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார், தன்னைவிட வயதில் மிகச் சிறியவரான நம்மாழ்வாரைத்தன் குருவாக ஏற்றுக்கொண்டு, இறைவன்மேல் பாசுரங்களைப் பாடாமல், தன் ஆச்சார்யனே இறைவன் என்று நம்மாழ்வார் மேல் மட்டும் பாடினார். தன் குருவின் பாக்களைப் பரப்பி உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். நம்மாழ்வார் தனது 11 பாசுரங்களால் இத்திருக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளார்.

‘‘ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்

யாதும் இல்லா

அன்று, நான்முகன் தன்னொடு தேவர்

உலகோடு உயிர் படைத்தான்,

குன்றம்போல் மணிமாடம் நீடு திருக்

குருகூர் அதனுள்,

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத்

தெய்வம் நாடுதிரே”

உறங்காப்புளி  ஸ்தல விருட்சம்

புளிய மரத்தின் இலைகள் இரவில் மூடிக்கொள்வது இயற்கை. ஆனால் இங்குள்ள பழமையான மரத்தின் இலைகள் இரவில் மூடிக்கொள்ளாமல் இருப்பதால் `உறங்காப்புளி’ என்றழைக்கப்படுகிறது. பிறந்தது முதல் 16 ஆண்டு காலம் ஊமையாக இருந்த மாறன் சடகோபன், ஞானம் பெற்று, தமிழ் வேதம் பாடி `நம்மாழ்வாராக’ புகழ் பெற்றது இந்த புளியமரத்தடியில்தான். நம்மாழ்வார் தவமிருந்த இந்த புளியமரம், மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

 ஆலய அமைப்பு

ஆழ்வார்திருநகரி ஊரின் நடுப்பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்புறம் `பந்தல் மண்டபம்’ அமைந்துள்ளது. உள்ளே பலிபீடம், அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. நம்மாழ்வார் காலத்திலேயே பிரசித்தி பெற்றிருந்த இத்திருக்கோயில், வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் மண்டபக் கட்டுமானங்களும், விரிவாக்கங்களும் செய்யப்பட்டுள்ளன. பெருமாள் சந்நதி விமானத்தைவிட நம்மாழ்வாரின் சந்நதி விமானம் சற்று பெரியது.

சிற்பச்சிறப்புகள்

நம்மாழ்வார் சந்நதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில், தூண் சிற்பங்கள் நிறைந்துள்ளன. ராமன், லட்சுமணன், சீதை, அர்ச்சுனன், மோகினி, துவாரபாலகர் ஆகியோரின் எழில் சிற்பங்கள் நுணுக்கமான ஆபரணங்கள், ஆடைகள், தலையலங்காரங்களுடன் உயிரோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. அருமையான வேலைப்பாடுகளுடன் கருங்கல்லில் குடைந்தெடுத்த கல்நாதஸ்வர இசைக்கருவி, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. எழில் மிகு குழல் தூண்களும், இசைத் தூண்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Related Stories: