கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதனை தொடர்ந்து, ‘மஜ்னு’, ‘காக்க காக்க’, ‘கஜினி’, உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவிட்டாலும் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். கடைசியாக ரவி மோகன் நடித்த ‘பிரதர்’ படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கான்சர்ட் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கான்சர்ட் நிகழ்ச்சியை பாராட்டி அந்நாட்டு அரசு அவரை கவுரவித்துள்ளது. தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பணியை பாராட்டி கனடா அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது. இதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு கனடா அரசுக்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
