நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பக்தர்களுக்கு நோய் நீங்கினாலோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் ஏற்பட்டாலோ, விரும்பிய இடத்தில் திருமணம் நிறைவேறினாலோ தெய்வங்களுக்குத் திருவிளக்கு வாங்கி வைப்பதாக பக்தர்கள், ``நேர்ச்சை’’ (நேர்த்திக்கடன்) செய்து கொள்கின்றனர். அந்த நேர்ச்சை செய்துகொள்ளும் தெய்வம் முருக பெருமானாக இருந்தால், குக்குட விளக்கு மற்றும் மயில் விளக்கும், திருமாலாக இருந்தால், அன்னவிளக்கு மற்றும் கஜலட்சுமி விளக்கும், சிவபெருமானாக இருந்தால், கிள்ளை விளக்கு மற்றும் காமாட்சி விளக்கும், சரஸ்வதிதேவியாக இருந்தால், சரோருக விளக்குமாக எந்தெந்தத் தெய்வத்திற்கு எந்தெந்த விளக்குப் பிரியம் என்று சிற்பிகளிடம் கேட்டுத் தெரிந்து, குறிப்பிட்ட நாளில் கொட்டு முழக்கோடு கோயில்களுக்கு சென்று விளக்கை ஏற்றி வழிபட்டு, விளக்கைக் காணிக்கையாக செலுத்துவார்கள்.

சில நோய்கள் நீங்கக் கோயிலுக்கு சென்று நோயாளியைப் படுக்கவைத்து அவர்கள் வயிற்றில் அரிசிமாவினால் செய்த விளக்கை வைத்து, அதற்கு நெய் ஊற்றி எரித்து அதன் பிறகு, சுவாமியை வணங்கி வருவதுமுண்டு. இதற்கு மாவிளக்குப் பார்த்தல் என்பார்கள்.வீடுகளில் பெரும்பாலும், உருவங்கள் இல்லாத அகல் விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டா மணி விளக்கு, காய் விளக்கு, சந்திரஹாரக் குத்து விளக்குப் போன்றவற்றையே உபயோகிக்கிறார்கள். கை விளக்குகளில் கஜலட்சுமி, விஷ்ணு போன்ற உருவங்கள் பொறித்த விளக்குகளை உபயோகித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டுத் திருவிளக்குகளின் அமைப்பும், அழகும், பொலிவும், சிற்ப நுட்பமும், தொன்றுதொட்டு இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் சிற்ப மேதைகளின் அறிவிற்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

தொகுப்பு: அ.ராகவன்

Related Stories: