பழந்தமிழ் பாடும் பழம்பெரும் நடனம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அழகும் வளமும் மிக்க வஞ்சி மாநகரம். அந்த அற்புத நகரம் எங்கும் பூத்துக் குலுங்கும் பலப்பல சோலைவனங்கள். அந்த அற்புத நகரத்தில் நடுநாயகமாக நெடிதுயர்ந்த ஆடக மாடம் என்ற சேர அரண்மனை. அந்தி சாயும் மாலைவேளையில், எழில் மிகுந்த அந்த அரண்மனையின், அழகான வேலைப்பாடுகள் மிகுந்த உப்பரிக்கையில், நீதியில் சிறந்த சேரன் செங்குட்டுவன் தனது தேவியோடு இன்புற்று இருந்தான்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், சேரனும் அவனது இளவலும், தமிழகத்து ராம லட்சுமணர்கள். ஆம். ஜோதிடம் சொல்பவர்கள் அண்ணன் செங்குட்டுவனுக்கு பதில் இளவல்தான் முடி சூடுவான் என்று சொல்ல, ஜோதிடர்களின் அந்தக் கணிப்பை பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே, இளவல் துறவறம் ஏற்றார். இந்த வைராக்கியம் மிகுந்த இளவல் வேறு யாரும் இல்லை. தமிழ் அன்னைக்கு சிலம்பாக சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள் என்னும் பெரும் புலவர்தான். ஆம் இளங்கோவின் அண்ணன் தான் சேரன் செங்குட்டுவன். பெருமைமிக்க சேரமன்னனை காண அன்று ஒரு நாடகக்காரன் வந்தான். சாக்கையன் என்னும் அந்த நாடகக் கலைஞன் தன் மனைவியோடு வந்து மன்னனைப் பணிந்தான். அவனை முக மலர்ந்து வரவேற்ற சேரன், அவன் வந்த விஷயத்தை விசாரித்தான்.

‘‘மன்னர் மன்னவா! கலையும் தமிழும் உங்கள் நாட்டில் நன்கு வளர்கிறது. இதற்குக் காரணம் தங்களது ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதுதான். கலை மண்டியிருக்கும் இந்த சேரநாட்டில், தமிழரின் பாரம்பரிய நடனமான கொடு சேத நாட்டியத்தை நான் ஆட அதை நீங்கள் கண்டு களிக்க வேண்டும் என்பது என்னுடைய விண்ணப்பம்’’ என்று வில் போல வளைந்து வணங்கி, விற்கொடியோனாகிய சேரனை வேண்டினான்.

‘‘கொட்டி சேத நடனமா? அது என்ன நடனமோ?’’ சேரன் எதுவும் அறியாதவன் போல கேட்டான். ‘‘தெய்வீக மொழி தமிழ் மொழி. அதில் உள்ள இயலிலும் இசையிலும் நாடகத்திலும் எங்கு பார்த்தாலும் தெய்வீகம் தான். இசையிலும், நாட்டியத்திலும் கூட இறைவனை கண்டவர் நம்மையல்லாமல் வேறு ஒருவர் இல்லை மன்னா. உலகையே படைத்து காத்து அழித்து அருளி மறைக்கும் அந்த பரம்பொருளான ஈசன், திரிபுரங்களை எரித்தபோது ஆடிய நடனம் இந்த கொட்டிச் சேதம்’’‘‘அருளே வடிவான இறைவன் முப்புரங்களை ஏன் எரிக்க வேண்டும்?’’ இம்முறை சேரனின் தேவி இடையில் புகுந்தாள் ‘‘வித்யுன்மலி, தாரகாட்சன், கமலாட்சன் என்று மூன்று அரக்கர்கள் இருந்தார்கள்.

நான்முகனை வேண்டித் தவமிருந்து வரங்கள் அநேகம் பெற்றார்கள். பறக்கும் மூன்று நகரங்களை நான்முகன் அருளால் படைத்தார்கள். தங்கத்தால் ஆனது ஒன்று, வெள்ளியால் ஆனது ஒன்று மற்றொன்று தகரத்தால் ஆனது. இந்த மூன்று பறக்கும் நகரங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் ஒன்றுசேரும். அந்த சமயம் ஈசன் விடும் ஒற்றை அம்பால்தான் இந்த மூன்று நகரங்களும் அந்த நகரங்களை ஆளும் அரக்கர்களையும் அழிக்க முடியும். இதைத் தவிர அவர்களை அழிக்க வேறு வழியே இல்லை. இப்படி ஒரு வரத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள்’’ சாக்கையன் பெரிய கதையை சொல்லி மூச்சு வாங்க நிறுத்தினான்.

‘‘சாக்கையா! உண்மையில் இந்த முப்புரங்கள் என்பது, ஜீவர்களான நமக்கு இருக்கும் மூன்று மலங்கள். வியர்வை, சிறுநீர், மலம் இவை உடல் வெளியிடும் மலங்கள். ஆணவம், கன்மம், மாயை என்பது, அகந்தை தனது உணர்வால் ஏற்படுத்திய மலங்கள். நான் என்ற அகந்தையாகிய ஆணவம் அதில் முதலாவது. ஈசன் அருளால் இயங்கும் இந்த ஆன்மா, அந்த பரம்பொருளாகிய ஆனந்தக் கடலின் ஒரு சிறு நீர்த்துளி. இந்த சிறிய நீர்த்துளி, ‘‘நான் பரம்பொருளாகிய ஆனந்தக் கடலை காட்டிலும் வேறானவன்’’ என்று நினைக்கும் மடமையே ஆணவம். உண்மையில் இந்த சிறு நீர்த்துளிக்கு தனித்து இயங்கும் வல்லமையே கிடையாது. ஆனால் இது (ஜீவாத்மா) என்னவோ தானே அனைத்தையும் செய்வதாக இறுமாந்து இருக்கிறது. இதுவே ஆணவம் என்னும் முதல் மலம்’’

‘‘அற்புதம் மன்னர் மன்னவா! இரண்டாவது மலம் என்னவோ?’’ சாக்கையன் மன்னன் கூறும் தத்துவத்தில் தன்னை மறந்து கேட்டான்.

‘‘இந்த ஜீவாத்மா, பலப்பல பிறவிகள் எடுக்கிறது ஒவ்வொரு பிறவியிலும் பலப் பல பாவ புண்ணியங்களை செய்கிறது. இந்த பாவங்களையும் புண்ணியங்களையும் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இதை அனுபவிப்பதற்காக எடுக்கும் பிறவியில் வேறு சில பாவ புண்ணியங்களை செய்கிறது. அதை அனுபவிக்க ஒரு பிறவி. அதில் புதிய பாவ புண்ணியம் என்று மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கிறது. தீர்க்கமுடியாத இந்த கர்மங்களின் குவியல் அழிந்தால் அன்றி அந்த ஆனந்தப் பரம்பொருளை அடைய முடியாது. அதாவது இனி பிறவி இல்லாத மோட்சத்தை அடைய முடியாது. இப்படி இறைவனை அடையத் தடையாக இருக்கும் இந்த பாவ புண்ணியங்கள்தான் இரண்டாவது மலம். நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் ‘‘கர்மா’’ என்னும் மலம்.’’‘‘மூன்றாவதாக இருக்கும் மாயைக்கும் விளக்கம் தாருங்கள் மன்னர்மன்னவா!’’

‘‘இரவில் ஒரு கயிற்றின் மீது கால் வைக்கிறோம். இரவின் இருளில் அதைக் கயிறு என்று அறிய முடியாத நாம் அதைப் பாம்பு என்று நினைத்து பயப்படுகிறோம். ஆனால் அங்கு ஒரு விளக்கைக் கொண்டு வந்தாலோ அங்கிருந்த பாம்பு கயிறாக மாறுகிறது. அதாவது அது பாம்பு இல்லை சாதாரண கயிறு என்று அறிகிறோம். அதேபோல இறைவனைப் பற்றிய ஞானம் இல்லாத போது, காடு, மலை, முகடு, மேடு, பள்ளம், தங்கம், தகரம், அரசன், அரசு, தாய் - தந்தை என்று பல வடிவங்கள் தெரிகிறது. ஆனால் ஞானம் என்னும் அறிவொளி வந்தவுடனோ, காடு மலை முகடு என அனைத்துமாக இருப்பது இறைவன் ஒருவனே என்று தெரியும். ஞானஒளி இல்லாத போது தெரியும் பல வடிவங்கள் ஞானஒளி வந்த உடன் இல்லாமல் போகிறது. இப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக உணர்வதே மாயை என்னும் மூன்றாவது மலம்.’’

‘‘இந்த மூன்று மலங்களும் ஜீவாத்மாவாகிய நம்மை இறைவனோடு சேரவே விடாது போல் இருக்கிறதே மன்னா! இதிலிருந்து விடுபடுவது எங்ஙனம்?’’ அரசன் கூறிய தத்துவங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் அறிவதற்காகக் கேட்டான் சாக்கையன். அதைக் கேட்ட சேரன் புன்முறுவல் பூத்தான். ‘‘நீ கேட்ட கேள்விக்கான பதில் கதையின் அடுத்த பகுதியில் இருக்கிறது. இந்த மூன்று புரங்களும் அதன் அரக்கர்களும் தரும் இன்னல் தாங்காத, தேவர்கள் மகாதேவரை முறையிடுவார்கள்.

அவர்களுக்காக மனம் இரங்கிய தேவதேவன், தனது ஒற்றைச் சிரிப்பால் அதாவது கடைக்கண் பார்வையால் முப்புரத்தை அழித்தொழிப்பான். இதில் மூன்று மலங்கள் அரக்கர்கள் என்றால், அவர்களால் துன்புறுத்தப்படும் தேவர்கள் தான் ஜீவாத்மா. இந்த ஜீவாத்மாவானது வேறு பற்று எனக்கில்லை என்று, இறைவன் காலடியைப் பிடிக்கிறது. வேறு வழியில்லை என்று ஜீவாத்மா வந்தபோது தன் கடைவிழியின் கருணை நோக்கால் மூன்று மலங்களையும் இறைவன் அழிக்கிறான்.’’ ‘‘அழிக்கிறான் என்பதுவரையில் புரிகிறது மன்னா, ஆனால் ஏன் மூன்று புரங்களை அதாவது மூன்று மலங்களை எரிக்க வேண்டும்’’ சாக்கையன் புத்தி சாதுர்யத்துடன் கேட்டான்.

‘‘அற்புதமான கேள்வி சாக்கையா!’’ என்று கை உயர்த்தி பாராட்டிய சேரன் தொடர்ந்தான். ‘‘நெருப்பு ஒன்றிற்கு மட்டும்தான் தன்னோடு சேர்ந்தவற்றை தன்னைப் போலவே மாற்றும் வல்லமை இருக்கிறது. நெருப்பில் எதை போட்டாலும் அதுவும் நெருப்பாகிறது. இது அந்த பரம் பொருளுக்கு மட்டுமே இருக்கும் குணமாகும். அதனால்தான் ஆணவம்கொண்ட அரி அயன் முன்பு அனல் வடிவாக அண்ணல் தோன்றினார்.

இறைவன் அருளால் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் வெந்து தணிந்து அனைத்தும் சாம்பலாகிறது. அதாவது அனைத்தும் சாம்பலான பிறகு ஜீவாத்மா பரமாத்மா என்ற பாகுபாடு ஏது? இறைவனோடு இரண்டறக் கலந்த பின்பு துன்பம் ஏது? எங்கும் ஆனந்தம்தானே? அந்த ஆனந்தத்தில் இறைவன் துள்ளிக் குதிப்பதே ஆனந்தத் தாண்டவம். இப்படி மூன்று மலங்களும் அழிந்து ஜீவன் இறைவனோடு கலக்கும் போது ஈசன் ஆடும் நடனம்தான் கொடு சேதம். அதாவது கொழுந்து விட்டு எரியும் முப்புரத்தை கண்டு கை கொட்டி ஆனந்தமாக இறைவன் நடனமிடுவது தான்கொட்டி சேதம்’’முன்பு எங்கும் கேட்டிராத அற்புதமான ஆழ்ந்த விளக்கத்தை மன்னன் கூற கேட்ட சாக்கையன் மெய் சிலிர்த்தான். மன்னனின் ஆழ்ந்த ஞானத்தை எண்ணி வியந்தான். தன்னையும் அறியாமல் மரியாதையால் சாக்கையன் கைகள் குவிந்தன. அதைக் கண்டு குறுநகை பூத்தான் மன்னன்.

‘‘விளக்கம் கேட்டாகிவிட்டது. இப்போது கண்ணும் மனமும் குளிரும் வண்ணம் அற்புதமாக கொட்டிச் சேதம் ஆடுவாய். ஈசனை எண்ணி அதை நாங்கள் கண்டு களித்து தூயவர்கள் ஆவோம்’’ கம்பீரமாக மொழிந்தான் சேரன். அவன் இட்ட கட்டளைப்படி, சாக்கையன் கொட்டிச் சேதம் ஆடி பரிசு பல பெற்று மகிழ்ந்தான். இதை சேரனின் தம்பியான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு மொழிகிறார்.

‘‘திருநிலை சேவடி சிலம்பு புலம்பவும்

பரிதரு செங்கையில் படு பறை ஆர்ப்பவும்

செஞ்சடை சென்று திசை முகம் அலம்பவும்

பாடகம் பதையாது சூடகம் துளங்காது

மேகலை ஒலியாது மென்முலை அசையாது

வார்முலை ஆடாது மணிக்குழல் அவிழாது

உமையவள் ஒருதிறனாக ஓங்கிய

இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்

பார்தரு நால்வகை மறையோர் பறையூர்

கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.’’

என்பது மேல்கண்ட சரிதத்தை விளக்கும் சிலம்பின் வரிகள்.

சங்கத்தமிழ் பாடல்களின் தொகுப்பான கலித்தொகை என்னும் நூலின் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடலும் அம்மையப்பனின் கொட்டிச் சேத நாட்டியத்தைத் தான் வர்ணிக்கிறது. உலகமனைத்தும் படைத்து காத்து அழிக்கும் எம்பிரான், பிரளய காலத்திலே அனைத்தையும் எரிக்கிறான். அனைத்தும் எரிந்து சாம்பலான பின், அந்த சாம்பலை மேனி எங்கும் பூசிக்கொண்டு ஆடுகிறான். அனைத்தும் அழிந்த பின் படைக்கும் பிரம்மனுக்கு என்ன வேலை. அவனும் இறைவனோடு கலக்கிறான். பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்திய படி ருத்திர தாண்டவம் ஆடுகிறான்.

அவனோடு இரண்டறக் கலந்த நம் அம்மை அருகில் ஒய்யாரமாக நின்றபடி பாணி தூக்கு சீர் என்ற தாளங்களை வாசிக்கிறாள். தாளமின்றி கூத்து நிகழாது இல்லையா. அவனது கூத்திற்கு மட்டுமில்லை அவனுக்குமே ஆதாரமாக இருக்கும் இவள், தாளம் போடுவதில் வியப்பில்லைதானே. அதைப்போலவே கவிஞர்கள் சிந்தையில் ஐயன் ஆடும் கூத்தின் எதிரொலி தான் கவிதைகள். அந்த கவிதைக்கான சந்தங்களை தந்தருள்வதும் அம்பிகையின் திருவருள் தான். இவை அனைத்தும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலின் தேர்ந்த பொருளாகும். (ஆறு அறி அந்தணர்க்கு எனத் தொடங்கும் பாடல்) இப்படிப் பல தமிழர்கள் பாடிப் பரவிய பழம் பெரும் நடனத்தை பாடிப் பரவி நமது பழவினையைத் தீர்ப்போம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related Stories: