ஜோதிடத்தில் காலத்தை நிர்ணயித்து காரியம் ஆற்றினால் வெற்றி நிச்சயம்!

வேதாங்கங்களில் ஒன்று ஜோதிடம். மற்றவை.

1.சீக்ஷா - உச்சரிப்பு

முறைகளை விளக்குவது

2.வியாகரணம் - இலக்கணம்

3.சந்தஸ் - செய்யுள் இலக்கணம்

4.நிருக்தம் - சொல் இலக்கணம்

5.ஜோதிடம் - வானசாஸ்திரம்

6.கல்பம் - செயல்முறை, கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம் ஆகியவை அடங்கியது.

இதில் ஜோதிஷம் முக்கியமானது.ஜோதிஷம் மூலமாகத்தான் எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். காலத்தைப்  பார்ப்பது, காலத்தைக்  கணிப்பது என்று இதற்குப்  பொருள். ஜோதிட சாஸ்திரத்தின் பல முக்கியமான விஷயங்களைச்  சரியாக புரிந்து கொண்டு மனித குலம் பயன்படுத்துவது இல்லையோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஆன்மிகத்திற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சிலர் வாதிடுவதும் காணமுடிகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக மதங்களில் இந்து மதம் மட்டும் தான் கர்மாவை ஏற்றுக் கொள்ளுகின்றது. ஒருவன் செய்யும் செயல் அதனுடைய விளைவை, எத்தனை யுகம் ஆனாலும் தந்துவிட்டுத்தான் போகிறது. விளைவுகளுக்கான காரணங்கள் கண்ணுக்கு பிரத்யட்சமாகத் தெரிவதில்லை. அப்படித் தெரியாத காரணத்தை கண்டுபிடித்துச் சொல்வதுதான் ஜோதிடம். அதனால் தான் வேதத்தின் கண் என்று அதனைச் சொன்னார்கள். எந்தெந்த காலங்களில் எதை எதைச் செய்ய வேண்டும் என்கின்ற விஷயத்தைச் சொல்வதுதான் ஜோதிடம். அப்படி என்றால் என்ன பொருள்?

ஒரு காரியத்தை, இந்த நாளில், இந்த அமைப்பில் செய்ய வேண்டும் என்றுதானேபொருள். ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து, அந்த காரியத்தைச் செய்தால், அந்த காரியம் வெற்றி பெறும் என்பதைத்தான் ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. தனிமனித ஜாதகம் என்பது அவரவர்களுக்கான கர்மாவை அனுபவிப்பதற்கான சட்டம். அது அப்படித்தான் நடக்கும். ஆனால் நாம் இந்த நிலவுலகத்தில் நமக்கான கடமைகளைச் செய்து கொண்டு இருக்க வேண்டும். உலகியல் கடமையும் ஆன்மிகக்  கடமையும் அதற்கான நேரங்களில் செய்ய வேண்டும்.

அதை எப்பொழுது செய்ய வேண்டும்?

எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத்தான் ஜோதிடம் வலியுறுத்துகிறது. ஆனால் தனிப்பட்ட ஜாதகங்களை அலசும் நாம் கால நிர்ணயம் என்கின்ற விஷயத்திற்கு அனேகமாக முக்கியத்துவம் தருவதில்லை. இந்த கால நிர்ணய விஷயத்தை வள்ளுவமும் வலியுறுத்துகிறது.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்

[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

ஒருவன் இந்த உலகத்தையே பெற வேண்டும் என்றாலும், மிகத்துல்லியமான ஒரு நேரத்தை நிர்ணயித்து, செயலில் இறங்கினால் முடியும் என்பது இந்தக் குறளின் கருத்து.

காலத்தை நிர்ணயிப்பது பற்றிய குறிப்புகள் அடங்கியதுதான் ஜோதிட சாஸ்திரம்.. என்ன நடக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வதைவிட, என்ன நடக்க வேண்டும் என்று நிர்ணயித்து அதற்கான காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு முகூர்த்த நிர்ணயம் என்று சொல்வார்கள். இது ஒரு அற்புதமான பகுதி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் மகாபாரதத்தில் இந்தக்  கதையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் என்பது தீர்மானம் ஆகிவிட்டது.

கண்ணனுடைய தூது அங்கே பயன்படவில்லை. அதுவும் அவன் திருவுள்ளம் தானே. துரியோதனன் சகாதேவனைத் தேடி வருகின்றான். சகாதேவன் ஜோதிட சாஸ்திர நிபுணர் என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

துரியோதனன் அவனை ஏன் தேடி வர வேண்டும்?

தங்களுடைய ஜாதகங்களைக் காட்டி வெற்றியா தோல்வியா என்பதை நிர்ணயம் செய்வதற்காக வரவில்லை. போர் தொடங்குவதற்கு முன்னரே களபலி தருவதற்கான நேரத்தை அதாவது லக்னத்தையும்  நாளையும்  குறிப்பதற்காக அவன் சகாதேவனைத் தேடி வந்தான். துரியோதனனுடைய ஜாதகம் எத்தனை

பலவீனமானதாக இருந்தாலும் அந்த பலவீனத்தை பலப்படுத்தும் நாளாக ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் அதில் உள்ள சூட்சுமம்.

சகாதேவன் நாள் குறித்து கொடுத்துவிட்டான்.

இது கண்ணனுக்குத் தெரிகிறது கண்ணன் அந்த நாளை சரி பார்க்கிறார். உடனே பாண்டவர்களுக்குச் சொல்லுகின்றார். ‘‘இப்படிப்பட்ட முகூர்த்த நாளில் துரியோதனன் களபலி கொடுத்து விட்டால்,என்னால் கூட உங்களைக்  காப்பாற்ற முடியாது அர்ஜூனனின் காண்டீபமும் பயன்படாது”காரணம், குறித்து கொடுத்த அந்த முகூர்த்த லக்னத்தின் விசேஷம் அப்படிப்பட்டது. ‘‘இனி நாம் தோற்று விட்டோம்” என்கிறார். பிறகு கண்ணன் வேறு சில விதிகளைக்  கையாண்டு அந்த முகூர்த்த லக்னத்தில் துரியோதனன் களபலி கொடுக்க முடியாதவாறு செய்து விடுகின்றார்.

இங்கே முக்கியமாகக்  கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். கண்ணன் கூட அந்த நேரத்தை பழுதுபடும்படியாகச் செய்யவில்லை. அந்த நாளில் கள பலி  செய்யாமல் வேறு ஒரு நாளில் களபலி செய்யும்படியாகத்தான் செய்து விடுகின்றான் . எனவே ஒரு சரியான நாளில், சரியான லக்னத்தில், ஒரு காரியத்தைத் தொடங்கினால், அந்த முகூர்த்த லக்னத்தில், அந்த காரியம் தடைகளை மீறி வெற்றிபெறும். அதோடு பகவானுடைய அனுக்கிரகமும் வேண்டும்.  இன்றைக்கு திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு நாள் குறிக்கும் போது  மண்டபத்திற்கான நாளை தான் வைத்துப் பார்க்கிறார்களே தவிர, மணமக்களின் ஜாதக அடிப்படையில் பெரும் பாலோர் பார்ப்பதில்லை.

முகூர்த்த நாள்  தேர்ந்தெடுக்கும் பொழுது நாம் செய்கின்ற தவறுகள்

1. ஒரு சுப தினம் என்று பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுப  தினம் எல்லாருக்கும்  பொருந்துகிற தினமாக இருக்காது.

2. அவரவர் ஜாதக, லக்கின, நட்சத்திரங்களைப் பொறுத்து அதற்கேற்ற லக்ன பலம், சந்திர பலம், தாரா பலம் இருக்கக்கூடிய நாளைத்  தேர்ந்தெடுப்பது சவாலான விஷயம்.

3. அப்படிப்பட்ட நாளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய பொறுமை பலருக்கும் இல்லாததால் கிடைத்த நாட்களில் சில முக்கியமான  செயல்களைச்  செய்து விடுகின்றோம்.

4. இப்படி அவசரப்பட்டு செய்வதால் ஜாதக விசேஷம் இருந்தாலும்கூட ஒரு காரியம் தொடங்கிய நாள் மிக மோசமான நாளாக அமைந்ததால் அந்த காரியம் பல தடைகளைச் சந்திக்கிறது.

5.100% முழுமையான சுபதினம் என்பது ஒன்று இல்லை என்றாலும் கூட மிக அதிகமான நலன்களை தரக்கூடிய ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் .

6. தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் ஒரு செயலைத் தொடங்க வேண்டும் என்றாலும் கூட அதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டுத் தொடங்கவேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் ஜாதக முகூர்த்த  நிர்ணய சாஸ்திர விஷயத்தில் சொல்லி இருக்கின்றார்கள்.

இனி முகூர்த்த லக்கினத்தை வைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: