வானமாமலை பெருமாளின் மாமனார் யார் தெரியுமா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தமிழகத்தின் இருபெரும் சமயங்கள் சைவமும் வைணவமும். சைவ நெறியைப்  பரப்புவதற்காக ஆதீனங்கள் இருப்பதுபோலவே, வைணவ சமயத்தைப் பரப்பு வதற்காக மடங்கள் உண்டு. அதில் தென்கலை வைணவ மரபின் புகழ்பெற்ற மடங்களில் ஒன்று வானமாமலை மடம். அந்த மடத்தின் முதல் ஜீயரின் அவதார தினம் இன்று. அவருக்கு பொன்னடிக்கால் ஜீயர் என்று பெயர்.

அவருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? அங்கே நடந்த அதிசயங்கள் என்ன? எப்படி அந்த மடம் தோற்றுவிக்கப்பட்டது? என நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல செய்திகள் உண்டு.  முதலில் வானமாமலை என்றால் எந்த ஊர் என்று பார்த்துவிடுவோம். வைணவத் தலங்கள் நூற்று எட்டில் ஒன்று வானமாமலை. திருவரமங்கை, வரமங்கலநகர், நாங்குநேரி, தோத்தாத்ரி சேத்திரம் எனப்  பல பெயர்கள் உண்டு.

திருநெல்வேலியில் இருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் இந்த தலத்தை நாம் தரிசிக்கலாம். இங்கே உள்ள பெருமாளுக்கு தோத்தாத்ரி நாதன் என்று பெயர். உற்சவருக்கு தெய்வநாயகன்  என்று பெயர். இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள் சந்நதிகள் இங்கு உண்டு. வைணவத்தில் தானாகத் தோன்றிய எட்டுத் தலங்கள் உண்டு. அதற்கு ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள் என்று பெயர். அந்த எட்டுத் தலங்களில் ஒன்றுதான் வானமாமலை.

ஸ்ரீவைகுண்டத்தில் எப்படி பகவான் அமர்ந்த கோலத்தில்  இருப்பாரோ, அதைப்போலவே இந்தத்  தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிடேகம் நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெயால் பல  நோய்கள்  தீரும் என்று பிரசாதமாக வாங்கிச் செல்கின்றனர்.

இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத் தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தோன்றியதுதான் வானமாமலை மடம். வைஷ்ணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சாரியரான மணவாளமா முனிகளால் தோற்றுவிக்கப்பட்ட திருமடம் இது. இந்த மடம் தோன்றியதற்கு பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உண்டு.

இந்த ஊரில் வெகுகாலத்திற்கு முன்  ஸ்ரீரங்கராஜன் என்றும் ஒரு பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். பெருமாள் மீதும் ஆசாரியர்கள் மீதும் மிகுந்த பக்தி  உடையவர். அவருக்கு புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று ஒரு ஆண்குழந்தை பிறந்தது. மிக அழகான அந்த குழந்தைக்கு அழகிய வரதன் என்று பெயர் வைத்தார். மிகுந்த அறிவாற்றலுடன் வளர்ந்த குழந்தைக்கு பஞ்ச சம்ஸ்காரம்(வைணவ தீட்ஷை) செய்ய வேண்டும் என்று ஆழ்வார் திருநகரி அழைத்துச் சென்றார்.

அப்பொழுது அங்கே மணவாளமாமுனிகள் குருவான திருவாய்மொழிப் பிள்ளை இருந்தார். அவர் இந்த குழந்தையின் முகத்தையும், அங்க லட்சணங்களையும், ரேகைகளையும் பார்த்து, “இது வைணவ மரபை வளர்க்க வந்த குழந்தை” என்பதைப் புரிந்துகொண்டு தமது சீடரான மணவாளமாமுனிகளிடம் அனுப்பி திருவிலச்சனை செய்யச் சொன்னார்.

மணவாள மாமுனிகள் தனது ஆச்சாரியன் கட்டளைப்படி அந்த குழந்தைக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார். பிறகு  அந்த குழந்தை தந்தையுடன் ஊருக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி மணவாள மாமுனிகளிடம் எல்லா விதமான நூல்களையும் கற்றுத்  தேறியது.ஒருநாள், ‘‘நீ ஊருக்குச் சென்று பெருமாளை தரிசித்து விட்டு வரலாமே” என்று மணவாளமாமுனிகள் அனுப்ப, அங்கே அவருடைய பெற்றோர்கள் அழகிய வரதனுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார்கள்.

பெருமாளைச் சேவிக்கச்  சென்ற அவர், ‘‘தான் ஒரு சாதாரண வாழ்க் கையை வாழ விரும்பவில்லை”என்று பிரார்த்தனை செய்ய, அப்பொழுது சுவாமி அங்கே அர்ச்சகர் மூலம் அருளப்பாடிட்டு, ‘‘நீ  கவலைப்பட வேண்டியதில்லை. உமக்கு சந்நியாச ஆசிரமம் வழங்கினோம்” என்று சொல்லி துவராடை, முக்கோல் அளித்து,” இங்கு ஒரு ஜீயர் மடத்தை ஏற்படுத்தி வைணவத் தொண்டு செய்துகொண்டிருக்க வேண்டும்” என்று நியமித்து அருளினார்.

அவ்வாறு அவர் கோயில் காரியங் களையும் வைணவ தத்துவங்களையும் வளர்த்துவந்த பொழுது, கோயில் கேரள மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.ஒரு நாள் மன்னன், இந்தக்  கோயிலுக்கு வந்து ஜீயரைக் கண்டு, நிறைய நிலங்களையும் கோயில் நிர்வாகத்தையும் ஜீயரிடம் சாசனம் செய்துகொடுத்தான்.. அன்று முதல் அந்த மடம் வானமாமலை ஜீயர் மடம் என்று வழங்கப்பட்டது.அதன் பிறகு தமது குருவைக் காண ஆழ்வார் திருநகரிக்குச்  சென்றார். மணவாள மாமுனிகள் இவருடைய சந்நியாச கோலத்தைக் கண்டு,” “உமக்கு பிறகு ஒருநாள் நாம் சந்நியாசம் தரலாம் என்று இருந்தோம். ஆனால், நீர் முந்திக் கொண்டுவிட்டீர்” என்று சொல்லி அவருக்கு பொன்னடிக்கால்  ஜீயர் என்ற பட்டப் பெயரையும் அளித்தார்.

அது மட்டுமின்றி மனவாள மாமுனிகள் எட்டுத் திசைகளிலும்  வைணவத்தை வளர்ப்பதற்காக அஷ்டதிக்கஜங்கள் என்று எட்டுப் பேரை நியமித்தார்.இவர் ஒருநாள் வானமாமலை பெருமாளை தரிசனம் செய்தபோது, அந்த பெருமாளோடு இருந்த லட்சுமி நாராயண விக்கிரகம் அர்ச்சகர் மூலமாக இவர் கைக்கு வந்தது.‘‘இதனை  ஜீயர் மட திருஆராதனைப்  பெருமாளாகக் கொண்டு, வழிவழியாக வானமாமலை குரு பரம்பரையை வளர்த்துவாரும்”என நியமித்தார்.

இவர் ஜீயர் பொறுப்பு ஏற்றபோது, வானமாமலை கோயிலில் தாயார் சந்நதி இல்லாமலிருந்தது. அதற்காக ஜீயர் கவலைப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருப் பதியில் உள்ள தாயாரை எழுந்தருளச் செய்து இங்கே சந்நதி அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், இவர் திருப்பதிக்குச் சென்றார்.அதே நேரத்திலே திருமலையில் ஒரு தாயார் இருந்தார்.

அந்தத் தாயாரைப் பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவம் செய்வதற்காகப் பட்டர்கள் யோசித்துக் கொண்டிருந்தபொழுது, அவர்கள் கனவிலே பெருமாள் தோன்றி, ‘‘நமக்கு இங்குத் திருமணம் வேண்டாம். ஏற்கனவே நம்முடைய திருமார்பில் அலமேலுமங்கை தாயார் இருக்கிறார். இன்னும் சில தினங் களில் இங்கே வானமாமலை ஜீயர் வருவார். அவரிடம் இந்தத்  தாயாரை அனுப்பி வையுங்கள்” என்று கட்டளையிட்டார்.

அதைப்போலவே ஜீயர் வந்தவுடன் அவரோடு தாயார் வானமாமலைக்கு எழுந்தருளினார்.இந்த தாயாருக்குத் தனிச்சந்நதி அமைத்து தெய்வநாயகப்  பெருமாளுக்குத் திருமண வைபவத்தை நடத்தி வைத்தார்.பெரியாழ்வார் போலவே இவரும் பெருமாளுக்குப் பெண்பார்த்து திருமணம் செய்து வைத்ததால் இவரும் வானமா மலைப் பெருமாளின் மாமனார் என்ற அந்தஸ்தைப்  பெற்றார். அந்த தாயாருக்கு ஸ்ரீவரமங்கை நாச்சியார் என்று பெயர். ஜீயருக்கு  ஸ்ரீவரமங்கைமுனி என்று பெயர்.

இந்தக்  கோயிலை மிகவும் விஸ்தாரமாகக்  கட்ட வேண்டும் என்பதற்காக தம்முடைய குருவான மணவாளமாமுனிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வடநாட்டு யாத்திரை தொடங்கும் பொழுது மணவாள மாமுனிகள், தம்முடைய உபதண்டம், திருவாழி (மோதிரம்), தம்முடைய குருவான திருவாய்மொழிப் பிள்ளையின்  திருவடிநிலைகள் முதலியவற்றை இவருக்கு அளித்தார். இன்றும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில், 600 ஆண்டுகள் பழமையான மணவாள மாமுனிகள் அணிந்திருந்த அந்த மோதிரத்தை, வானமாமலை ஜீயர் அணிந்துகொண்டு தீர்த்தத்தை வழங்குவார்.

ஸ்ரீவானமாமலை மடத்தின் 31-வது ஜீயராக ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் இருக்கிறார்.புரட்டாசி புனர்பூசம் அன்று வானமாமலை மடங்களில் (சென்னை திருவல்லிக்கேணியிலும் உண்டு) முதல் ஜீயரான  பொன்னடிக்கால் ஜீயரின் அவதார உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

Related Stories: