குறைகளைப் போக்கும் கோவிந்த நாமம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம்மாழ்வாரின் ஒரு அற்புதமான பாசுரம். இது வேங்கட மலையைப் பற்றியது. ‘‘நீங்கள் திருமலை அப்பனை பார்ப்பது இருக்கட்டும். முதலில் அந்த மலையை வணங்கினாலே போதும். உங்கள் குறையெல்லாம் தீர்ந்துவிடும் என்கிறார்.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,

அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்

சென்று சேர் திருவேங்கட மா மலை,

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

எம்பெருமானைத் தாங்கி அவனோடு உறவுகொண்ட மலை நமக்கும் உறவு என்கிறார்.

வினைகளைச் சுட்டெரிக்கும் மலை

‘‘வேம்” என்றால் வெந்துபோகும். எது வெந்துபோகும்? திருமலைத் தரிசனம் செய்பவர்களின் பாவங்கள் வெந்துபோகும். அப்படி வினைகளைச் சுட்டெரிக்கும் சக்தி வாய்ந்த மலை திருமலை. எம்பெருமானிடம், எல்லையற்ற பக்திகொண்டு, அவனுடைய குணங்களில் ஆழ்ந்து இருப்பவர்கள் ஆழ்வார்கள். அவனை விட்டு சற்றும் பிரியமாட்டார்கள். பிரிந்தால் உயிர் தரிக்க மாட்டார்கள். இப்படி இருக்கக்கூடியவர்களுக்குத்தான் ஆழ்வார்கள் என்று பெயர்.

‘‘உன்னை மறந்து என்னால் வாழ முடியாது’’ என்று சொல்பவர்கள்தான் ஆழ்வார்கள். ‘‘எங்ஙனம் மறந்து வாழ்ந்தேன், ஏழையேன் ஏழையேனே’’ என்று கதறுபவர்கள்  ஆழ்வார்கள். வேங்கடமாமலை திருமலையப்பனை விடாமல் தாங்கிக் கொண்டிருக்கிறது.

 

திருமலை ஆழ்வார்

ஆழ்வார்களைப் போல இந்த மலையும் எம்பெருமானைப் பிரியாமல், அவன் திருவடி நிலைகளை தாங்கிக்கொண்டு இருப்பதால், அந்த மலைக்கு “திருமலை ஆழ்வார்” என்று வைணவத்தில் பெயர். ஆழ்வார்களைத் தொழாமல் நேரே பெருமானைத் தொழுவது வைணவ மரபு அன்று. எனவே ‘‘திருவேங்கட மா மலை, ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்று மலை ஆழ்வார் வணங்கச் சொல்கிறார்.

திருமலை அடிவாரத்திற்கு ‘‘அலிபிரி” என்று பெயர். அங்கேதான், இராமானுஜர் ஒரு வருடகாலம் தன்னுடைய தாய்மாமனும், ஆசாரியருமான பெரிய திருமலை நம்பிகளிடம் இராமாயணம் கேட்டார். அந்த இடத்திலிருந்துதான் படியேறி வேங்கடவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். இப்பொழுது மிகவும் எளிதாக அரை மணி நேரத்தில் திருமலையை அடைந்துவிடலாம்.

ஆனால், அக்காலத்தில் அப்படியல்ல. மலைப்பாதை கடுமையானது. அடர்ந்த காடு, வனவிலங்குகள் குறுக்கீடு, இத்தனையும் கடந்து, செங்குத்தான படிகள் ஏறி திருமலையப்பனைத் தரிசிக்க வேண்டும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான அந்த திருமலையப்பனைத் தரிசனம் செய்வதன் மூலமாக, தங்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் கடுமையான மலைப் பாதையில் ஏறி தரிசனம் செய்வார்கள்.

கவிஞர் கண்ட காட்சி

பல வருடங்களுக்கு முன், ஒரு தமிழ்க் கவிஞர், திருமலை சென்று தரிசித்து வரலாம் என்று நினைத்து மலைப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி அவர் மனதை உருக்கியது. நான்கு மாற்றுத் திறனாளிகள் திருமலையப்பனை நினைத்து, அவனை தரிசிக்க மலை ஏறிக்கொண்டிருந்தார்கள். அதிலே ஒருவருக்குக் கண்ணில்லை. ஒருவரால் நடக்க முடியாது.

அதனால், அவர் கைகளை கொண்டு நடந்துகொண்டிருந்தார். இன்னொருவருக்கு வாய் பேசவில்லை. இன்னொருவருக்கு முதுகு வளைந்து இருந்தது. இந்த நால்வரும் மிகவும் மெதுவாக மலை ஏறிக்கொண்டிருந்தனர். இவர்களைக் கடந்து பலபேர் வேகமாக மலையேறிச் சென்றுகொண்டிருந்தனர். கவிஞர் நினைத்தார், ‘‘நன்றாக வலுவுள்ள தன்னாலேயே இந்த மலைப்பாதையில் ஏறமுடியவில்லையே; இவர்கள் இந்த அளவு ஆர்வத்தோடு பக்தியோடு இருக்கிறார்களே! என்ன பக்தி! இவர்கள் பக்திக்கு மலையப்பன் இரங்காமல் போய்விடுவானா, என்ன?’’ என்று நினைத்தாராம்.

அதிசயம் நிகழ்ந்தது

அப்பொழுது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு மரத்தில் தேன்அடை அடர்த்தியாக இருந்தது. அதிலிருந்து தேன் சொட்டிக்கொண்டிருந்தது. கூன் விழுந்தவர், ‘‘அங்கே பார், தேன் ஒழுகுகிறது’’ என, கூன் நிமிர்த்து, அந்த மரத்தை நோக்கி ஓடினாராம். ‘‘அப்படியா, எங்கே? ஓ! அங்கேயா.?” என்று கண்ணில்லாதவர் கண்பார்வை பெற்று சுட்டிக் காட்டினாராம்.

அதற்குள் கால் இல்லாதவர், கால் சரியாகி, அந்த மரத்தில் ஏறவே ஆரம்பித்து விட்டாராம். வாய் பேசாத ஊமை, ‘‘தேனில் எனக்கும் பங்கு உண்டு. மறந்துவிடாதீர்கள்’’ என்று பேசினானாம். மலையில் நம்பிக்கையோடு ஏறியதும் இத்தனையும் நொடியிலே நடந்துவிட்டதாம். இதோ கவிஞரின் பாடல்.

‘‘கூன் கொண்டு சென்றவன் கூன்

நிமிர்ந்து ஓட,

குருடன் கொம்பில்

தேன் என்று காட்ட, முடவன் அத்தேனை

எடுக்க, அயல்

தானின்ற ஊமை எனக்கென்று கேட்க

தருவன் வரம்

வான் நின்ற சோலை வடமலைமேல் நின்ற

மாதவனே”

இந்த நம்பிக்கையில்தானே தினம் 50,000 பேர் அவனைத் தரிசிக்க திருமலைக்கு வருகிறார்கள்.

திருவேங்கட கலம்பகம்

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்று ஒரு வைணவ அடியார் இருந்தார். அவர் எட்டு பிரபந்தங்களைச் செய்தார். திருமால்மீது அவர் பாடிய இந்த எட்டு பிரபந்தங்களை அஷ்ட பிரபந்தங்கள் என்று இலக்கிய உலகம் ஏற்கும். அஷ்டபிரபந்தம் கற்றவன் அரை பண்டிதன் என்று சொல்லுகின்ற வகையில் மிக அருமையான சமய, இலக்கண, இலக்கிய நுட்பங்கள் நிறைந்த பிரபந்தங்கள் அவை. இதில் திருவேங்கட கலம்பகம் என்று ஒரு நூல். அவர் தன் நெஞ்சோடு உரையாடுவது போல, ஒரு பாடலை திருவேங்கடக் கலம்பகத்தில் செய்திருக்கிறார்.

ஏதாவது வழி சொல்லக்கூடாதா? நெஞ்சு கேட்கிறதாம். ‘‘நான் உய்வடைய வேண்டும் என்றால் என்ன செய்வது? ஏதாவது வழி சொல்லக்கூடாதா?’’

‘‘நல்லது நெஞ்சமே. இன்றாவது என்னிடம் உருப்படும் வழியைக் கேட்டாயே? சரி, நான் வழி சொல்லுகின்றேன்’’ என்று அவர் வழியைச் சொல்லுகின்றார்.

 ‘‘ஆழ்வார்கள் எழுதிய அருந்தமிழ்ப் பாசுரங்களைப் படித்தால் உய்வு பெறலாம். நீ படித்து இருக்கிறாயா?’’

‘‘ஐயோ! இதுவரை படிக்கவில்லையே,’’

‘‘சரி, போகட்டும். இந்த பாசுரங்களை அங்கங்கே பாகவதர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அது உன் காதில் விழுமா? சற்று நேரம் உட்கார்ந்து அந்த ஈரத்தமிழை காது குளிரக் கேட்டு இருக்கிறாயா? அந்த அடியவர்களின் பாதம் பணிந்து வணங்கி இருக்கிறாயா?’’

‘‘இல்லை. அப்படிக் கேட்டதில்லையே’’

‘‘சரி போகட்டும். இராமானுஜர் என்னும் யதிபதி (துறவிகளின் அரசர்) மிகப் பெரிய வைணவ மகான், திருமலைக்கு வந்து பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறாரே, வைணவத்துக்கு ஒரு புதிய எழுச்சியையும் புதுமையான உணர்ச்சியையும் கொடுத்திருக்கிறாரே, அவருடைய திருவடிவாரமாவது பணிந்து இருக்கிறாயா?’’

‘‘இல்லை. இல்லை. நீங்கள் சொல்லித் தான் அவரைப் பற்றி நான் கேள்விப் படுகின்றேன்’’

 ‘‘போனால் போகட்டும். 108 திருப்பதி

களில் மிகச்சிறந்த தலமாகிய இந்த திருவேங்கடத்துக்கு வந்து வணங்கி இருக்கிறாயா?’’

‘‘திருவேங்கடம் போகவில்லையே...’’

‘‘சரி, நீ போக வேண்டாம். அங்காங்கே யாத்திரை போவார்களே, திருவேங்கட யாத்திரை, அப்படி யாத்திரை போகிறவர்களைத் தரிசனம் செய்திருக்கிறாயா?’’

“….!”

“சரி, ஒரு நிமிடம், இருந்த இடத்தில் இருந்தாவது, அந்த திசையைப் பார்த்து மனதால் நினைத்திருக்கிறாயா?’’

‘‘இல்லை, நினைக்கவில்லையே’’

‘‘நெஞ்சே இவை எதையும் செய்யாமல், அந்த அலர்மேல் மங்கை மணாளன் மலர்ப்பதம் எப்படி உனக்குக் கிடைக்கும்?”

“…………….”

“ஆகையினால் இனிமேலாவது நினை. அப்பொழுதுதான் உய்வு பெறலாம்’’

இந்தக் கருத்தை வைத்து ஒரு அழகான பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் திருவேங்கடத்தின் பெருமையைப் பேசுகின்ற பாடல்.

பதின்மர் செந்தமிழைப் படிக்கிலாய் கேளாய்

படித்தபேர் தாளையும் பணியாய், எதிபதி

சரனே சரணமென் றொருகால் இசைக்கிலாய்,

எமதுவேங்கடத்தைத் துதி செயாய்,

இருந்த இடத் திருந்தேனும் தொழுகிலாய்,

வாழி என் மனனே! மதிநுதல் அலர்மேல்

மங்கை நாயகனார்

மலர்ப்பதம் கிடைப்பது எவ்விதமே?

- என்பது பாடல்.

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்திற்குப் ‘‘பதின்மர் செந்தமிழ்’’ என்னும் பெயர் இப்பாடலில் தரப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

முனைவர் புவனை ஸ்ரீராம்

Related Stories: