கிறிஸ்துவின் அருட்பொழிவுத் திருப்பணி

கிறிஸ்தவம் காட்டும் பாதை

(லூக்கா 10:1-11) அருட்பொழிவுப் பணி

அருட்பொழிவு (Ordination) என்பதின் நேரடிப் பொருள் ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வருதல் என்பதாகும். அதுவும் சமயப்பணியில் அதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளப் பயிற்சியை நிறைவு செய்த பின், ஒருவருக்கு அளிக்கப்படுவதுதான் அருட்பொழிவு. இன்றையத் திருச்சபைச் சூழலில் அருட்பொழிவு என்பது அதைப் பெறுபவருக்கு ஒரு பட்டத்தையும், பொறுப்புகளையும், கடமைகளையும் அத்தோடு கட்டமைப்பு சார்ந்து அதிகாரத்தையும் அளிக்கிறது.

அதே சமயம், அதே கட்டமைப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை வரம்புக்குட்படுத்துவதுடன் அளிக்கப்பட்ட அதிகாரத்தை நீக்கும் மேலதிகாரம் கொண்டதாகவும் உள்ளது. கிறிஸ்துவின் திருப்பணி என்பது இன்றைய நிறுவன அமைப்பு சார்ந்த பணிகளிலிருந்து வேறுபட்டிருந்ததை நற்செய்தி நூல்களின் வழியாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவின் திருப்பணி என்பது இறையரசுப் பணி அல்லது கடவுள் இராஜ்யப் பணி எனலாம்.

(மாற்கு 1: 15) இறையரசு என்பது அதிகாரங்கள் மற்றும் சட்டங்களால் உருவாக்கப்படுவதில்லை. மாறாக அது இறை நம்பிக்கை மற்றும் கொள்கைகளால் உருவாக்கப்படுவது. இறையரசின் கொள்கைகளை மக்கள் எந்தக் கட்டாயத்தின் பேரிலோ அல்லது யாருடைய வற்புறுத்துதலின் பேரிலோ இல்லாமல் தங்கள் சொந்த விருப்பத்தில் மனதார ஏற்று தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதே இறையரசு ஆகும். இவ்வாறு இறையரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஒப்படைப்புடனும் உறுதியுடனும் பிறரிடம் எடுத்துச் செல்வதுதான் திருப்பணி.

இயேசு கிறிஸ்துவின் திருப்பணி மாதிரி

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் குரு (ஆசிரியர்) சீடர் அமைப்பு வழக்கத்தில் இருந்தது. முழுக்குமுனிவர் யோவானுக்கும் சீடர் இருந்தனர். (யோவான் 1:35) இயேசு கிறிஸ்துவும் தமது திருப்பணிக்கு முதற்கட்டமாகப் பன்னிரெண்டு சீடர்களைத் தெரிவு செய்தார்.

(லூக்கா 9:1) அவர்களைத் தம்மோடு வைத்திருந்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து இயேசு கிறிஸ்துடன் தங்கினர், உணவு உண்டனர் அவருடன் சேர்ந்து பயணித்தனர். இயேசுவும், அவர்களுக்குக் கடவுள்    அரசின் உண்மைகளைக் கற்பித்தார். (மத்தேயு 5-7) அவர்களும் இயேசுவிடம் கேள்விகள் கேட்டு விளக்கங்களைப் பெற்றனர் (மத்தேயு 19:25) இறையரசின் நற்செய்தியை எல்லா மக்களிடத்திலும் விரைவாகப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் மேலும் 72 பேரை தாம் செல்லவிருந்தக் கிராமங்களுக்கு அனுப்பினார். (லூக்கா 10:1)

திருப்பணியாளருக்கு நெறிமுறைகள்

இறையரசுப் பணியில் களமிறங்குபவர்களுக்கு இயேசு கிறிஸ்து, எச்சரிக்கையும் சில நெறிமுறைகளையும் கூறி அனுப்புகிறார். முதலாவதாக இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணி அத்தனை எளிதானதல்ல அதற்கு எதிர்ப்பும் எதிரிகளும் உண்டு. எனவே, எச்சரிக்கையாயிருங்கள் ஆனால், அஞ்சாதீர்கள் என்று கூறி அனுப்புகிறார் (லூக்கா 10:3, 12:32) மேலும், இறையரசுப் பணி சுகவாழ்வை நாடிச் செல்லும் பணி அல்ல என்பதால் ‘‘பணப்பையோ, வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்” என்றார். (லூக்கா 10:4)

அத்துடன் திருப்பணியாளர்கள் சந்திக்கும் மக்களிடம் ‘‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக” என்று கூறவும் அறிவுறுத்தினார். (லூக்கா 10:5). குறிப்பாக சிறப்பான உணவைத் தேடி அலையாமல் அவர்கள் சந்திக்கும் வீட்டார் என்ன உணவைப் பறிமாறுகிறார்களோ, அதை மட்டுமே உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார். மேலும், அந்த வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்களைக் குணப்படுத்தவும் கூறினார்.

இறையரசுப் பணியை ஏற்பவரும் உண்டு. அதை எதிர்ப்பவரும் உண்டு. அதை எதிர்ப்பவரிடம் வீண்வம்புக்குச் செல்லாமல் ‘‘இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (லூக்கா 10:11) என்று கூறி அவ்விடம் விட்டு அகன்று போகக் கூறினார். இறையரசுப் பணியை 12 பேர் மற்றும் 72 பேரோடு செய்து முடிப்பதல்ல.

அதில் பலர் இணைய வேண்டி உள்ளதின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ‘‘அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார். (லூக்கா 10:2) இறையரசுப் பணியில் இணைந்திட நீங்கள் தயாரா? கடவுளின், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.

Related Stories: