சூரிய தீர்த்தம், ஆதித்யேசுவரங்கள் என்றால் என்ன?

சூரியன் சிவவழிபாடு செய்வதற்கு முன்பு தீர்த்தம் நீராடுவதற்கென அமைத்த தீர்த்தங்களே சூர்ய தீர்த்தங்கள், சூரிய புஷ்கரணி எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.தொன்மைக் காலமுதலே சூர்ய தீர்த்தங்கள் மிகவும் சிறப்புடன் விளங்கி வந்ததை பழந்தமிழ் நூல்களில் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் சோமகுண்டம், சூர்ய குண்டம் எனும் தீர்த்தங்கள் பற்றிய குறிப்பு உள்ளது.திருவெண்காட்டில் சோமதீர்த்தம், சூர்ய தீர்த்தம். அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன.  இந்தச் சூர்ய தீர்த்தத்தின் கரையில் சூரியன் அமைத்து வழிபட்ட சூரியலிங்கம் அமைந்துள்ளது. இந்த மூன்று குளங்களிலும் நீராடி வெண்காடரை வழிபட்டால் பிறவி வினைகள் நீங்கி குழந்தைச் செல்வம் உண்டாகும் என்பது தமிழ் மறையின் வாக்காகும்.

காஞ்சிபுரத்தில் சூரியனும் மற்றைய எட்டு கிரகங்களும் தீர்த்தம் அமைத்து  சிவபெருமானை வழிபட்டனர் என்பர். சூரியனுக்குப் பருதி என்பது பெயராதலின் அவனால் இங்கு அமைக்கப்பெற்ற தீர்த்தம் பருதிக்குளம் என்றழைக்கப் பெற்றது.நாட்டியத்தான்சூடி, திருமீயச்சூர், திருக்கோலக்கா (திருத்தாளமுடையார் கோயில்) ஆகிய திருத்தலங்களில் சூரியன் அமைத்த திருக்குளங்கள் சிறப்புடன் உள்ளன.திருச்செம்பொன்பள்ளி என்னும் செம்பொன்னார்கோயிலில் சூரியன் அமைத்த தீர்த்தம் சூர்ய புஷ்கரணி  என்று அழைக்கப்படுகின்றது. தாமரை மலர்கள் நிறைந்த இத்தீர்த்தம் ஆலயத்தின் தெற்கில் அமைந்துள்ளது.

இன்னும் ஏராளமான தலங்களில் சூர்ய தீர்த்தம் சிறப்புடன் திகழ்கின்றன. இவற்றில் இயலுமானால் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களிலும், அல்லது கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளிலாவது சூரிய ஓரையில்  நீராடி சூரியனை வழிபட்டு அவனுக்கு அர்க்கியம் நமஸ்காரம் செய்து பின்னர் சிவபெருமானை வழிபட்டால் பூர்வஜென்ம வினைகள் நீங்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். சொத்துக்கள் சேரும், தாய் தந்தையர்க்கு ஆயுள் கூடும் என்று ஆன்றோர் கூறுவர்.இந்த தீர்த்தங்களில் சூர்ய ஓரையில் மூழ்க இயலாவிட்டாலும் உதயத்தின் போதே உச்சி வேளையிலோ மூழ்க வேண்டும். சூரியனையும், சிவபெருமானையும் தாமரை புஷ்பங்கள் கொண்டு அர்ச்சிப்பது சிறந்த பலனை தருமென்பர்.

ஆதித்தன் என்பது சூரியனுக்கு உரிய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும். அவன் காஸ்யபனின் மனைவியான அதிதியின் புதல்வன் ஆதலால் ஆதித்யன் எனப்பட்டான்.

அத்தகைய ஆதித்தியன் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற இடங்கள் ஆதித்யபுரங்கள் எனவும், அவனால் வழிபடப்பட்ட சிவலிங்கம் ஆதித்யேசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றன.இதுவுமன்றித் தம்மை சூரியனின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொண்ட சோழர்கள் ஆதித்தியன் என்ற பெயரைச் சிறப்பாகச் சூட்டிக் கொண்டனர். மேலும் சூரியனின் பல்வேறு பெயர்களான ரவி, மார்தாண்டன் முதலிய பெயர்களையும் இட்டுக் கொண்டனர்.

ஆதித்த சோழன், ஆதித்த கரிகாலன், ஆதித்தன் கோதைப்பிராட்டி கண்டராதித்தன் பாஸ்கரமார்தாண்டன் போன்றுவரும் சோழர்கால மன்னர்களின் பெயர்கள் இங்கு எண்ணத்தக்கதாகும். இவ்வகையில் ஆதித்யன் என்று பெயர் பூண்ட சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களும் ஆதித்யேசுவரங்கள் என்றே அழைக்கப்பெற்றன எடுத்துக்காட்டாக திருப்புறம்பயம் எனுமிடத்தில் முதலாம் ஆதித்யசோழன் 9 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஆலயம் ஆதித்யேசுவரம் என்றழைக்கப்பட்டதை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

சோழர்களின் திருப்பணியான திருத்தேவூர் ஆலயமும் கல்வெட்டுகளில் ஆதித்யேசுவரம் என்றே குறிக்கப்படுகிறது.

திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் என வழங்கப்படும் களந்தை 9 ஆம் திருமுறையுள் திருவிசைப்பா பாடல் பெற்ற திருத்தலமாகும். இது அந்தாளில் களந்தை ஆதித்யேசுவரம் என்று வழங்கப்பெற்றது. இங்குள்ள பெருமான் இந்நாளில் அழகிய நாத சுவாமி என்றழைக்கப்படுகின்றார். இக்கோயில் பெருமானை இக்கோயில் கல்வெட்டு

களில் ஆதித்யேசுவர் என்றே குறித்துள்ளனர். அம்பிகை சூரியனின் ஒளிமண்டல பிரபையை விளக்கும் வகையில் பிரபாநாயகி என்றழைக்கப்படுகின்றாள். இதுவும் ஆதித்தசோழனால் கட்டப்பட்டதென்பர்.

இவைகளேன்றி ஆதித்தன் என்ற பெயர் பூண்ட மன்னர்கள் வீரமரணம் எய்தியபோது அவர்களுக்கு அமைக்கப்பெற்ற சமாதிக் கோயில்களும் ஆதித்யேசுவரம் என்றே அழைக்கப் பெற்றன. இவ்வாறு பலவகைளில் ஆதித்யேசுவரங்கள் எனும் சிவாலயங்கள் தென்னாட்டில் பரவலாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

 - எஸ்.கிருஷ்ணஜா

Related Stories: