திருக்குறளில் பனைமரம்!

குறளின் குரல்: 164

ஒரு பொருளை மிகப் பெரியது என்று சொல்வதற்கு `பனையளவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். சிறிய பொருளைச் சொல்லும்போது `தினையளவு’ என்கிறார். திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என முப்பாலிலும் பனை வருகிறது. ஒவ்வொரு பாலிலும், ஒவ்வொரு குறளில் பனை இடம்பெறுகிறது.மூன்று பால்களிலும் பனை இடம்பெற என்ன காரணம்? திருவள்ளுவரின் நன்றியுணர்ச்சிதான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

திருவள்ளுவர் பனைமரத்திடம் நன்றியுணர்ச்சி கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்தக் காலத்தில் அவர் தாம் எழுதிய திருக்குறள் முழுவதையும் எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலையில் தானே எழுதியிருப்பார்? பல நூற்றாண்டுகள் தாண்டியும் பேசப்படப் போகிற தமது திருக்குறள் என்ற ஒப்பற்ற நூலைப் பனைமரத்தின் பனையோலை மட்டும் இல்லாதிருந்தால் அவர் பதிவு செய்திருக்க முடியுமா?நாமும்கூடப் பனைமரத்திற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். பனையால் அல்லவோ நாம் உலகப் பொதுமறையான வள்ளுவம் கிடைக்கப்பெற்றோம்?

அறத்துப்பாலில் 104வது குறளிலும், பொருட்

பாலில் 433வது குறளிலும், இன்பத்துப்

பாலில் 1282வது குறளிலும் பனை குறிப்பிடப்படுகிறது.

“தினைத்துணை நன்றி செயினும்

பனைதுணையாக் கொள்வர் பயன்தெரி வார்.”

(அதிகாரம்: 11 - செய்ந்நன்றி அறிதல்,

குறள் எண்:104)

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும்,

 உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்கள்.

“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.”

(அதிகாரம்: 44 - குற்றங்கடிதல்,

குறள் எண்: 433)

பழிபாவங்களுக்கு அஞ்சி, நாணும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும்கூட,

அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வார்கள்.

“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.”

(அதிகாரம்:129-புணர்ச்சி விதும்பல்,

குறள் எண்:1282)

காதல் பனையளவு மிகப் பெரிதாகுமானால், வாழ்க்கைத் துணையோடு தினையளவு மிகச் சிறிதாகக் கூட ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். பனையைப் பற்றிச் சொல்லும் மூன்று குறட்பாக்களிலும் பெரியது என்பதைச் சித்தரிக்கவே பனையை உவமையாக்குகிறார், வள்ளுவர். திருவள்ளுவர் காலந்தொட்டே பனை தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டது. பனையை மையமாகக் கொண்டு வழங்கப்படும் திருத்தலங்கள் பல உண்டு. தாலம் என்றால் பனை என்பதால் அந்தத் திருத்தலங்களில் உறையும் ஈசனைத் தாலம் என்ற சொல்லோடு தொடர்பு படுத்தி அழைப்பதுண்டு. திருப்பனங்காடு (தாலபுரீஸ்வரர்), திருப்பனந்தாள் (தாலவனேஸ்வரர்), திருப்பனையூர் (தாலவனேஸ்வரர்), பனையபுரம் (பனங்காட்டீஸ்வரர்) ஆகிய

ஊர்களில் உறையும் இறைவனின்

திருநாமங்கள் அத்தகையவை.

திருவத்திபுரம் சிவன்கோவிலில், பனையே தலவிருட்சம். திருவத்திபுரம் என்பது இன்று செய்யாறு என்று அழைக்கப் படும் திருத்தலம். சமணர்கள் சம்பந்தரிடம் `இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண்பனைகள் பல உள்ளன. அந்த ஆண் பனைகளைக் காய்க்கும் பெண் பனைகளாக ஆக்க முடியுமா?’ என்று சவால் விட்டார்கள். அவ்விதம் செய்தால் தாங்கள் சமண மதத்தைக் கைவிட்டு, சைவ சமயத்தை ஏற்பதாகவும் கூறினார்கள். எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானின் அருள்மேல் சந்தேகமில்லாத தீவிர நம்பிக்கைகொண்ட சம்பந்தர் சவாலை ஏற்றார். ‘‘பூத்தேர்ந்தாயன்’’ என்று துவங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

கடைக்காப்பாகிய பதினோராம் பாடலில்

`குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்

அரும்பு கொன்றை அடிகளை,

பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்

விரும்பு வார்வினை வீடே’.

என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறியது. இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக் கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் பனை மரங்கள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். பாகவதத்தில் கண்ணனின் அண்ணனாக வரும் பலராமன் பனைக்கொடி ஏந்தியவனாகக் கூறப்படுகிறான். பலராமன் தேரின்மேலே பறந்த கொடியில் பனைமரத்தின் சித்திரம் வரையப்பட்டிருந்தது என்கிறது பாகவதம். தமிழின் பழைய இலக்கியங்களில் பனை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணைப் பாடல் ஒன்றில் ‘மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை’ என்ற வரி இடம்பெற்றுள்ளது.

திருக்குற்றாலத் தலபுராணத்தில் ‘சோலையாண் பனையும் வேதக் கதவமும் தொழும்பு கொண்ட வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி’ என்று பனைமரம் புகழப்படுகிறது. மடல் ஊர்தல் அல்லது மடலேறுதல் என்பது சங்க காலத்தில் இருந்த ஒரு வழக்கம். தலைவன், தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மேற்கொள்வதே மடலேறுதல். காதலில் தோல்வியுற்ற தலைவன், ஊரில் உள்ள அனைவரும் தன் காதலை உணரும்பொருட்டு மடலேறுவான்.

உடலில், சாம்பலைப் பூசிக் கொள்வான். யாரும் சூடாத எருக்க மலர்களைச் சூடிக் கொள்வான். பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரையில் ஏறிச்செல்வான். தன் காதலியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்வான் அவன். பெற்றோர் பெண்தர மறுக்கும்போது தலைவன் இப்படிச் செய்வது வழக்கம். ஆடவர் மட்டுமே மடலேறுவார்கள், பெண்கள் மடலேறும் வழக்கமில்லை. பனைமடலான குதிரையில் ஒரு முறை மடலேறிய தலைவன் பிறகும் தனக்குப் பிடித்த பெண்ணுடன் மணம் நிகழவில்லை என்றால் மறுபடி மடலேறுவதில்லை, தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

ஆக பனைமரம் காதலனையும், காதலியையும் சேர்த்து வைக்கும் கடைசி உபாயமாகப் பழந்தமிழகத்தில் பயன்பட்டிருக்கிறது. சங்க காலத்தைச் சார்ந்த சத்திமுத்தப் புலவர் எழுதிய பாடலொன்று அதில் வரும் ஓர் அழகிய உவமைக்காகப் பெரும்புகழ் பெற்றது. தன் மனைவியைப் பிரிந்து வேற்றூரில் குளிரால் வாடிக்கொண்டிருக்கும் கவிஞர் மேலே பறந்துசென்ற நாரையைப் பார்க்கிறார். அந்த நாரையிடம் தம் நிலையைச் சொல்லி அதைத் தன் மனைவியிடம் தூதாக அனுப்புகிறார். அவ்விதம் நாரைவிடு தூதாக அமைந்த பாடல் இதோ:

`நாராய் நாராய் செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரி

யாடி வடதிசைக் கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

இந்தப் பாடலில் பிளந்த பனங்கிழங்கை நாரையின் அலகிற்கு உவமையாக்குகிறார் கவிஞர். சங்கப் பாடல்களில் கிடைக்கும் மிகச் சிறந்த உவமைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களுக்குக் காலம்காலமாய் எத்தனையோ பயன்களைக் கொடுத்திருக்கும் பனைமரம் புலவர்களுக்கு உவமையாகவும் பயன்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தாங்கள் யார் என்று அறிவிக்க ஒவ்வோர் அடையாளப் பூவைச் சூடி வந்தார்கள். சேரர்கள் பனம்பூவையும், சோழர்கள் ஆத்திப் பூவையும், பாண்டியர்கள் வேப்பம்பூவையும் சூடியதாகத் தமிழ் இலக்கியம் பேசுகிறது.

பனைமரமே தான் செய்யும் உதவிகளைச் சொல்லிப் பேசுவதாக, வித்தியாசமான உத்தியில் அமைந்த பழைய நாட்டுப் பாடல் ஒன்று உண்டு. அதன் சில பகுதிகள் இதோ:

`பனைமரமே! பனைமரமே!

ஏன் வளர்ந்தாய் பனைமரமே?

நான் வளர்ந்த காரணத்தை

நண்பர்களே கேளுங்கள்!

படுக்கப்பாய் நானாவேன்,

பாய்முடையத் தோப்பாவேன்,

வெட்டநல்ல விறகாவேன்,

வீடுகட்ட உதவிடுவேன்,

பசித்து வருவார்க்குப்

பனம்பழமும் நான்தருவேன்,

பாலர் பெரியோர்க்குப்

பனம்பதநீர் நான்தருவேன்,

சித்திரைக் கோடையிலே

சிறந்தநல்ல நுங்காவேன்,

காளையர்க்கும் கன்னியர்க்கும்

களைதீர்க்கும் விசிறியாவேன்’.

என்று இன்னும் பல வகைகளில் தன் பெருமைகளை அடுக்குகிறது தலைநிமிர்ந்து நிற்கும் பனைமரம்.பனைமரத்தை ஒட்டிய பல பழமொழிகளும் தமிழில் வழங்கப்படுகின்றன. ‘பனைமரத்தடியில் நின்று பாலைக் குடித்தாலும் அதைப் பால் என்று யார் நம்புவார்கள்? ‘‘கள்” குடித்ததாய்த் தான் கருதுவார்கள்’. என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே உண்டு. பாலைக் குடிப்பதனால் சந்தேகம் வரும் வகையில் அதைப் பனைமரத்தின் கீழ் நின்று குடிப்பானேன், தள்ளிநின்று குடிக்கலாம் அல்லவா? அதுபோல் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் வெளிப்படையாகவும் சந்தேகம் எழாத வகையிலும் செய்ய வேண்டும் என்பதற்கே இந்த உதாரணம் சொல்லப்படுகிறது.

`நிந்தையிலாத் தூயவரும்

நிந்தையைச் சேரில் அவர்

நிந்தையது தம்மிடத்தே

நிற்குமே - நிந்தைமிகு

தாலநிழல் கீழிருந்தான்

தண்பால் அருந்திடினும்

பாலதெனச் சொல்லுவரோ பார்’.

என நீதி வெண்பா என்ற செய்யுள் நூலில் ஒரு வெண்பா உண்டு. நீதிவெண்பா நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனால், பனைமரத்தின் கீழிருந்து பால் அருந்தக் கூடாது என்பது ஏன் என அழகாக அவர் விளக்குகிறார். தால மரம் என்பது பனை மரத்தின் மற்றொரு பெயர். கெட்டவர்களுடன் தூயவர்கள் சேர்ந்திருந்தால், அவர்களையும் கெட்டவர்களாகவே நினைப்பார்கள் எனக் கூறி எச்சரிக்கிறார் அவர். ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்றும் ஒரு பழமொழி தமிழில் உண்டு. `பனை ஏறி விழுந்த வனைக் கடா ஏறி மிதித்தது போல’ என்றும், `பனையிலிருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல’ என்றும் `பனை மட்டையில் மழை பெய்தது போல’ என்றும், `காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல’ என்றும் பனைமரத்தை மையமாக வைத்து, பாரம்பரியமான உவமைகளையும் நாம் காலம் காலமாகக் கையாண்டு வருகிறோம்.

பனை ஓலைகளால் குடில் அமைத்துக் கொண்டு அங்கு வாழும் வழக்கம் அன்றுதொட்டு இன்றுவரை இருக்கிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில், இன்றும் கூட நமக்குப் பயன்படுவது பனையோலையால் செய்யப்பட்ட விசிறிகள்தான். முன்பெல்லாம் வீட்டு உத்திரம் செய்யவும், தூண் செய்யவும் பனைமரங்கள் தான் பயன்பட்டுவந்தன. பழங்காலத்தில் பெண்கள் காதணியாகப் பனைஓலையைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கருப்பட்டி என்று சொல்லப்படும் பனை வெல்லம், பனங்கல்கண்டு போன்றவை உடலுக்குக் குளுமை தருவன. பனை சார்ந்த பொருட்கள் பலவற்றிற்கும் பற்பல மருத்துவக்குணங்கள் உள்ளன. இப்படி ஏராளமான பயன்களைத் தரும் பனைமரம் கற்பக விருட்சம் என்றே போற்றப்படுகிறது.

ஏரிகளையும், குளங்களையும் கரையில் மண் அரிப்பு ஏற்படாமல் காலம் காலமாய்க் காத்து நிற்பது பனைமரங்கள்தான். நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை நார், பனை ஓலை என்றிப்படி பனைமரத்தின் எல்லா பாகங்களும் நமக்குப் பயன்தருவதால்தான், அது தமிழகத்தின் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வாழை மரம்கூட அதன் எல்லாப் பகுதிகளாலும் பயன்பட்டாலும், வாழைமரத்தின் ஆயுள் குறைவு. ஆனால் பனைமரம் நூற்றியிருபது ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

கடும் வறட்சிப் பிரதேசங்களிலும் தானாகவே வளர்ந்து உயர்ந்து நிற்பவை பனை மரங்கள். அதற்குத் தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ‘சூழல் எப்படி இருந்தாலும்தான் என்ன? அதைப் பற்றிக் கவலைப் படாமல், மனத்தில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு உயர்ந்து வளர வேண்டும்.’ என்கிற நேர்மறைச் சிந்தனையின் குறியீடாகவும் நாம் பனைமரத்தைக் கொள்ளலாம். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என மூன்று பால்களிலும் உவமையின் பொருட்டாகப் பனைமரத்தைப் பயன்படுத்தியுள்ள வள்ளுவர், நம் மனத்தில் பனையளவு உயர்ந்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: