உண்டென்றால் அது உண்டு!

பேய் என்பது கற்பனையா, உண்மையா? பேய் உண்மையில் இருக்கிறதா இல்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?உண்டென்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல முடியும்.பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இருக்கட்டும். பேய் பற்றிய கருத்து தொன்றுதொட்டு தமிழ்நாட்டில் இருந்து வருகிறது, அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே பேய் பற்றிய கருத்து உண்டு, வள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் பேயைப் பற்றிப் பேசியிருக்கிறார்,

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

(குறள் எண் 565)

தன்னைக்காண வருவோர்க்கு நேரம் தராமல்

காக்க வைப்பதும், கண்டால் முகத்தில் கடுகடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பேய் செல்வத்தைக் காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்

 வையத்து அலகையா வைக்கப்படும்.

(குறள் எண் 850)

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், இந்த பூமியில் காணப்படும் ஒரு பேயாகக்

கருதி விலக்கப்படுவான்.பேய் பற்றிய கருத்துகள் தமிழ் மரபில் உண்டு என்பதற்கு இந்தக் குறட்பாக்கள் சான்று,

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய தமிழின் மிகப் பழைய சங்க இலக்கியத்திலேயே பேய்களைப் பற்றிய செய்திகள் உண்டு. பதிற்றுப்பத்து, புறநானூறு, சிறுபாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி,

நற்றிணை போன்ற நூல்களில் ஆங்காங்கே பேய்களைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்க முடிகிறது.சிலப்பதிகாரம் சதுக்க பூதம் என்றொரு பூதத்தைப் பற்றிப் பேசுகிறது, சதுக்கம் என்பது நான்கு வீதி சேரும் இடம்.

அங்கே ஒரு பூதம் இருக்குமாம். தர்ம நெறி தவறி நடக்க வேண்டும் என்று யாருக்கேனும் மனத்தில் ஓர் எண்ணம் வந்தாலே போதும். சதுக்க பூதம் ஓவென்று கத்திக்கொண்டு வந்து அவரை ஊரின் நடுவில் வைத்து அடித்துக் கடித்துத் தின்றுவிடும்.

யாரையெல்லாம் அந்த சதுக்க பூதம் பிடித்துத் தின்னும் என்பது பற்றி சிலப்

பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் ஒரு பட்டியலே தருகிறார்:

`தவமறைந் தொழுகும் தன்மையிலாளர்

அவமறைந் தொழுகும் அலவற்

பெண்டிர்

அறைபோ கமைச்சர் பிறர்மனை  நயப்போர்

பொய்க்கரி யாளர் புறங்

கூற்றாளரென்

கைக்கொள் பாசத்துக்

கைப்படு வோரெனக்

காத நான்கும் கடுங்குர

லெழுப்பிப்

பூதம் புடைத்துணும் பூத

சதுக்கமும்..'

என்பன சிலம்பு வரிகள்.

போலி சாமியார்கள், விலைமகளிர், சூது செய்யும் அமைச்சர்கள், பிறன்மனை நயப்போர், பொய்ச்சாட்சி சொல்வோர், புறம் கூறுபவர்கள் ஆகியோர் சதுக்க பூதத்தால் உண்ணப்படுவார்கள் என்கிறது சிலம்பு. இன்று அந்த பூதம் மறுபடி தன் செயல்பாடுகளைத் தொடங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நம் மனம் ஏங்குகிறது!இந்த சதுக்க பூதத்தைத் தவிர  “கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பலவிதமான பேய்கள் பற்றியும் கூறுகிறது சிலம்பு.மறுபிறவி குறித்தும், முன்வினையின் விளைவுகள் குறித்தும் கூட சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது. இறந்த தேவந்தி, மாதரி, கோவலன், கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அந்த ஆவிகளை வழிபட்டதையும் சிலப்பதிகாரம் சொல்கின்றது.

அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கருதத்தக்கது.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஆறு வகை உயிரினங் களில் ஒன்றாக பேயும் கூறப்பட்டிருக்கிறது.சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் காரைக்கால் அம்மையார் சரிதத்தில் அவர் பேயுருவை வேண்டிப் பெற்றார் என்ற செய்தி உள்ளது.“புனிதவதி” என்ற இயற்பெயருடைய அவர் பரமதத்தன் என்ற வணிகனை மணந்து வாழ்ந்தார். அவர் வேண்டியவாறு சிவபெருமான் அவருக்கு மாங்கனி அருள்வதை ஒரு நிகழ்வின் மூலம் அறிந்த பரமதத்தன் திகைத்தான். அச்சமுற்றான். புனிதவதி ஒரு தெய்வீகப் பெண்மணி என்று கருதி அவரை விட்டு விலகினான்.

வேறோர் ஊரில் இன்னொரு பெண்ணை மணந்து இல்வாழ்க்கை நடத்தி, பெண் குழந்தை பெற்று அக்குழந்தைக்குத் தன் முதல் மனைவியின் பெயரைச் சூட்டி வாழ்ந்து வரலானான்.

கணவனைத் தேடிச் சென்றார் புனிதவதி. ஆனால், அவரைத் தெய்வத்தின் அருள் பெற்றவர் எனக் கருதிய கணவன் பரமதத்தன், அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

கணவன் செயல் கண்டு அதிர்ந்த புனிதவதி, இனி இவ்வுடல் நீக்கிப் பேயுருத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டினார். அடுத்த கணம், புனிதவதியின் உடலில் எலும்பை மூடியிருந்த சதைகள் உதிர புனிதவதி எலும்பாலான பேயுருப் பெற்று காரைக்கால் அம்மையாராக ஆனார்.

தந்தை தாய் இல்லாத சிவபெருமானாலும் அம்மையே எனத் தாயாய்க் கருதி அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் அவர். `பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் ஐயனே உன்னை என்றும் மறவாமை வேண்டும்' என்ற வரத்தை வேண்டிப் பெற்ற பெருமைக்குரியவர்.தமிழில் பேய்களைப் பற்றி மிக அதிக கற்பனைகளையும் தகவல்களையும் தரும் செய்யுள் நூல் என்ற பெருமை கலிங்கத்துப் பரணிக்கே உரியது.முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப்போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் கலிங்கத்துப் பரணி. குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.

அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாமல் இருந்தான், அதனால், சீற்றமடைந்த முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் போரிட்டு கலிங்க நாட்டை வென்றான்.போர்ச் செய்திகள் கலிங்கத்துப் பரணி நூலில் விரிவாகப் பேசப்படுகின்றன. போர்க்களத்தில் நடமாடும் பேய்களின் ஆட்டபாட்டங்கள் விளக்கமாகவும் பல இடங்களில் நகைச்சுவையாகவும் விவரிக்கப் படுகின்றன. இந்நூல் ஜெயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.

பேய்களில் ஊனமுற்ற பேய்களும் உண்டு என்கிறது கலிங்கத்துப் பரணி!பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்றெல்லாம் அருளாளர்களுக்குப் பெயர்கள் வழங்கி வந்ததை ஆழ்வார்களின் வரலாறு சொல்கிறது,‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என மகாகவி பாரதியாரும் பேய் என்ற சொல்லைக் கவிதையில்

ஆண்டிருக்கிறார்.“மனதிற்குக் கட்டளை” என்ற தலைப்பில் மனத்தை பேயாய் உழலும் மனம் என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்.

பேயாய் உழலும் சிறுமனமே!

பேணாய் என் சொல். இன்று முதல்

நீயாய் ஒன்றும் நாடாதே!

நினது தலைவன் யானே காண்.

தாயாம் சக்தி தாளினிலும்

தருமம் என யான் குறிப்பதிலும்

ஓயாதே நின்று உழைத்திடுவாய்

உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

பாலன் தேவராயன் என்ற புலவர்

எழுதிய புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்திலும்

பேய்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு,

`வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லற்படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை

முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி

இத்துன்பச் சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனை வரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடி

விழுந்தோடிட

என்றெல்லாம் வரும் வரிகள் பேய்கள் தரும் துன்பங்களிலிருந்து காப்பாற்றுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்ற வரிகள்தான். மரணத்துக்குப் பின் மனிதர்கள் என்ன ஆவார்கள் என்று சிந்தித்த தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர் மறைமலை அடிகள். “மரணத்தின்பின் மனிதர் நிலை” என்ற தலைப்பிலேயே அவர் ஒரு நூல்

எழுதியுள்ளார்.

மரணத்திற்குப் பின் உள்ள நிலை என்ன என்பதை ஆராய்வது, சென்னை அடையாறில் உள்ள  “பிரம்ம ஞான சபை” என்ற தியசாபிகல் சொசைட்டியின் நோக்கங்களில் ஒன்று, மறுபிறவி, கர்ம வினை போன்றவற்றை ஒப்புக்கொண்ட இயக்கம் அது.மேடம் பிளாவட்ஸ்கி அந்த இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர். இறந்தவர்களின் ஆவியுடன் பேசும் முறை,

யாரேனும் ஒருவரை மீடியமாகக் கொண்டு ஆவியுடன் உரையாடுதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் அமைப்பு அது.வட இந்தியாவில் மிகவும் பிரபலமான துறவி, வங்காளத்தைச் சேர்ந்த அமரர் நிகமானந்தர். அவரது பூர்வாசிரம நாமம் நிர்மலானந்தர் என்பது.

தன் மனைவி சுபலா பாம்பு கடித்து மரணமடைந்தபோது கடும் துயரடைந்தார் நிர்மலானந்தர். சென்னை பிரம்மஞான சபையில் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றறிந்து சென்னைக்கு வந்தார்.மீடியமாகச் செயல்பட்ட ஒருவரின் வழியே தம் மனைவியுடன் பேசினார். தமக்கும் தம் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த சில அந்தரங்கத் தகவல்களை மீடியமாகச் செயல்பட்டவர் சொன்னதைக் கேட்டு வியப்படைந்தார். எனவே மரணத்திற்குப் பின்னும் மனித வாழ்வு வேறு வகையில் தொடர்கிறது என்பதை அறிந்து

கொண்டார்.

பின்னர் இறந்த தம் மனைவியை ஒருமுறையேனும் மறுபடி பார்க்க வேண்டும் என விரும்பினார். அதற்கு வழிசொல்லும் குருமார்கள் யாரேனும் உண்டா என இந்தியா முழுவதும் தேடி அலைந்தார். பின் அதுபற்றி நெறிப்படுத்திய ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்று அவர் குறிப்பிட்ட மந்திரத்தைப் பல லட்சம் முறை ஜபித்தார்.அவருள்ளிருந்து வெளிப்பட்ட அவர் மனைவி, அவர் முன் தோன்றி முன்போலவே அவருக்குக் காட்சி தந்தாள். `நான் உங்களுடனேயே தானே இருக்கிறேன்’ பின் ஏன் இந்தத் துயரம்? என்று கேட்டுவிட்டு மறுபடி அவருள் கலந்து மறைந்தாள்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு மனைவி தன்னை விட்டுப் போனாள் என்பதால் ஏற்பட்ட சோகத்திலிருந்து முழுமையாக விடுபட்டார் நிர்மலானந்தர். அவரே பின்னர், துறவுபூண்டு சுவாமி நிகமானந்தர் என்ற துறவியானார். இது நிகமானந்தரின் வரலாறு நமக்குத் தரும் செய்தி.மகான் ஸ்ரீ அரவிந்தரது சகோதரர் பரீன், ஆவி உலக ஆராய்ச்சிகளில் தீவிர நாட்டம் செலுத்தியவர்.ஸ்ரீ அரவிந்தர் சிறைப்பட்டிருந்தபோது அவரின் விடுதலைக்காக வாதாடியவர் வழக்கறிஞர் சித்தரஞ்சன்தாஸ். அவருக்கும் ஆவி உலக ஆராய்ச்சிகளில் ஈடுபாடு இருந்தது.

மகாத்மா காந்தி, `என்ன காரணத்தினாலோ நாம் இறந்தவர்களுடன் மறுபடி தொடர்பு கொள்வதை இயற்கை தடுத்திருக்கிறது, அந்த நியதியை மீறுவது

இயற்கைக்கு விரோதமானது’ எனக் கருத்துத் தெரிவித்ததுண்டு.

ஆனால் `ஆவிகளுடன் பேசுவதற்கென்று ஒருவித முறை இருக்கும் எனில் அதுவும் இயற்கையின்பாற் பட்டதுதானே? எதெல்லாம் சாத்தியமோ அதெல்லாம் இயற்கை தானே? என அந்தக் கருத்துக்கு எதிர்க் கருத்தும் காந்தி வாழ்ந்த காலத்திலேயே சொல்லப்பட்டது.இறந்தவர் ஆவி வடிவில் தோன்றுவது போன்ற காட்சிகள் தமிழ்த் திரைப்படங்களில் நிறைய வந்ததுண்டு. கற்பகம் திரைப்படத்தில் வரும் `மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா? என்ற பாடல் வாலி எழுதி பி.சுசீலா பாடியது.

இறந்துபோன முதல் மனைவியின் ஆவி பாடுவதாக வரும் பாடல் அது.அண்மையில் வெளிவந்த காஞ்சனா போன்ற படங்களெல்லாம் ஆவிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை தான்.பேய்கள்,  ஆவிகள்,  பூதங்கள் போன்றவை பற்றிய செய்திகளெல்லாம் தமிழர் வாழ்வில் தொன்றுதொட்டுக் கலந்தே இருக்கின்றன என்பதும் திருக்குறளிலும் அத்தகைய கருத்துகள் உண்டு என்பதும் சிந்தனைக்குரியது.பேய்களின் இருப்பை நாம் நம்புகி றோமோ இல்லையோ, பேய்கள் பற்றிய கருத்தோட்டம் தமிழ் மரபில் இருக்கிறது என்பது உண்மைதானே?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: