ஊர் காக்கும் தெய்வம் உய்யாலி அம்மன்

தலைநகர் சென்னை மாநகருக்கு தென் மேற்கே சுமார் 25கி.மீ. தொலைவில் உள்ளது திருநீர்மலை. 108 வைணவ திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இதற்கு அருகில் உள்ள முடிச்சூர் வித்யாம்பிகை ஆலயத்திலிருந்து, சுமார் 7கி.மீ.தொலைவில் ஒரு தனி வனத்தில் அருள்மிகு அன்னை “உய்யாலி அம்மன்” ஆலயம் உள்ளது. உய்யாலி அம்மன் கோயில் கொண்டுள்ள இடத்தில் ஆலய விமானம் கிடையாது. முற்றிலும் கல்லால மரத்தின் வேர்கள் பதிந்து சடாமுடிபோல் செடிகள், மலர்கள் விரிந்து காணப்படுகின்றன. பொதுவாக, ஒரு கட்டிடத்தில் புதர், செடி, கொடிகள் முளைத்தால் விரிசல் ஏற்படும்.

ஆனால், கல்லால மரத்தால் சூழப்பட்டாலும் கருவறை அப்படியே விரிசல் இல்லாமல் உள்ளது. இக்கருவறையின் கீழ் உள்ள பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அன்னை காட்சியளிக்கிறாள். அம்பிகை கருவறை இடபாகத்தில், ஒன்றரை அடி அகலம் கொண்ட ஆதிகாலத்துச் சுயம்பு ஒன்று புராதன சின்னமாக வளங்குகிறது. மூலவர் அன்னை உய்யாலி அம்மன் 5 அடி உயரத்தில் கம்பீரமாக சதுர்புஜங்களுடன் உடுக்கை, சூலாயுதம், சிலம்பத்துடன் சாந்த ஸ்வரூபியாக அருளாட்சி புரிகின்றாள்.

ஆலயத்துள் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் மகா கணபதியும் பால முருகனும் அமர்ந்துள்ளனர். மண்டபத்தின் வலப்புறத்தில் வெளியே நாகதேவி வீற்றிருக்கிறாள். முன் மண்டபம் அழகிய தோற்றத்தில் நவீனமாகக் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தின் வடப்புறத்தில் ஆதிகாலத்துக் கல் வெட்டுப் பட்டய மொன்று திருநீர்மலை ரங்கநாதர் ஆலயத்திற்கும், உய்யாலித் தாய்க்கும் உள்ள தொடர்பைக் குறிக்குமுகத்தான் கல்வெட்டு எழுத்தில் பொறிக்கப்பட்டு வனத்தில் உள்ளது.

அதன் அருகில் முற்காலத்தில் ஒரு குளம் இருந்ததாகவும், அதில் அன்னையின் தேர் முழுகி அழுந்திக் கிடப்பதாகவும் செவிவழிச் சான்றுகள் கூறுகின்றன. தேர் அழுந்தி பலகாலம் ஆகிவிட்டது. அந்த இடம் யாராலும் கைப்பற்ற முடியாமல் அடர்ந்த வனமாக உள்ளது. இக்கோயில், கட்டிடம் பாண்டிய மன்னனால் கல் கொண்டு கட்டப்பட்டது, என்பதற்குச் சான்றாகக் கல்லில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்துக் கொடி மரத்தின் அடிக் கட்டை மட்டும் தற்பொழுது ஆலயத்தின் நடுவில் அமைந்துள்ளது. ஆலயச் சுவர்கள் கருவறை மற்றும் உள் மண்டபம் மட்டும் நான்கு அடி உயரமுள்ள கருங்கற்களால் அடுக்கிக் கட்டப்பட்டுள்ளது. இங்கு அருள்புரியும் அன்னை உய்யாலி அம்மனுக்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. நீர் சூழ்ந்த மலை என்று பொருள்படும் திருநீர்மலையில் ரங்கநாதப் பெருமான் திருக்கோயில் கொண்டிருக்க, அவரின் திரு அவதாரமான நீர் வண்ணப் பெருமாள் கீழே கோயில் கொண்டுள்ளார்.

அதற்கு வடக்குப் புறத்தில் ஒரு கிராமமும், வனப்பிரதேசமும் இருந்தது. அங்குதான் கிராமத்து தேவதையான உய்யாலி அம்மனும் கோயில் கொண்டிருந்தாள். அன்னையை கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். ஏழைக் கிராம மக்களால் உய்யாலி அம்மனின் ஆலயத்தைச் சிர மேற்கொண்டு கட்ட முடியவில்லை. அன்னையே தனது இருப்பிடத்தைக் கட்டத்துவங்கி முடிக்கும் வேளையில், இரண்டு செங்கற்கள் குறைவாக இருந்தது. அருகில் திருநீர் மலையை எட்டிப் பார்க்கையில், ரங்கநாதரும் தனக்கு மதில்சுவர் கட்டிக் கொண்டிருந்தார்.

அன்னை நேராக அவரிடம் சென்று ‘எனது இருப்பிடம் கட்டும் வேலையில் இரண்டு செங்கற்கள் குறைவாக உள்ளது. அதை எனக்குத் தற்போது கொடுத்தால் பிறகு உனக்கு வாங்கித் தருகிறேன்!” என்று கேட்டாள். உலகத்தையே அளந்த பெருமானின் மனது, அன்று மட்டும் ஏனோ விசாலமடையவில்லை. கருணை காட்டவில்லை. “எனக்கே கல் போதாத நிலை. உனக்கு இரண்டு கல்லைத் தூக்கிக் கொடுத்து விட்டால் நான் என்ன செய்வது? எனது மதில்சுவர் உடைந்து போய் காட்சிதருமே! எனவே, தற்போது தருவதற்கில்லை” என்று மறுத்து விட்டார்.

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர் மனம் இளகவில்லை. இரண்டு கல் தர மறுத்த ரங்கநாதரைப் பார்த்து கடும் சினம் கொண்ட அன்னை, “ரங்கநாதா! உன்தாய் நான். இன்று எனக்கிரு கல் தர மறுத்து உன்னைப் படைத்த தாய்க்கு உணவு, உறைவிடம் அளிக்காது. சுயநலக்காரனாக மாறிவிட்டாய்.

ஆகவே, உனது மதில்சுவர் முடிவடையாத பின்னமாகவே என்றும் காட்சி தரட்டும். உன், சொற்படி உடைந்த மடையாய்க் காட்சி தரட்டும்” என்று சாபம் இட்டு விட்டு திரும்பி வந்து வனத்தில் அமர்ந்தாள். அப்போது அவள், “இன்று முதல் என்னை வழிபடுபவர்களுக்கு கேட்கும் வரம் தந்தருள்வேன். வீடு பேறும் தருவேன். நாக ரூபத்தில் என்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்வாழ்வு அருளுவேன்!” என்று கம்பீரமான தோற்றமும் கனிவான பார்வையும் கொண்டு கூறியவள், சூலாயுதபாணியாக திருநீர் மலை அருகே அமர்ந்து கோயில் கொண்டாள். ரங்கநாதர் கல் தர மறுத்து அன்னை சாபமிட்ட இடம் இன்னும் உடைந்த மடை என்ற பெயரில் உள்ளது.

இன்று இவ்விடம், கரைமாநகர் என்றழைக்கப்படுகிறது. உய்யாலி அன்னை ஆலயத்திற்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிள்ளை வரம் வேண்டி நாகர் வழிபாடும், நாகதோஷ பரிகாரமும் பெற பக்தர்கள் வருகிறார்கள். இங்கு ஆடிமாதம், மார்கழி மாதம், நவராத்திரி மற்றும் பெளர்ணமி தினங்கள் விசேஷ தினங்களாகும்! ஊர் காக்கும் தெய்வமாக உய்யாலி அம்மன் திகழ்வதால் ஊர் மக்கள் உள்ளன்போடு அவளை வழிபட்டுப் பரவசமடைகிறார்கள்.

டி.எம்.ரத்தினவேல்

Related Stories: