அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

399. நேயாய நமஹ:(Neyaaya namaha)

(சென்ற இதழில் விடுப்பட்ட நாமம்)  (திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421

[பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர்

அளிக்கும் ஸ்ரீ ராமனின் சரித்திரம்)

சரபங்கருக்கு முக்தி அளித்த பின், சரபங்க ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு, லட்சுமணனோடும் சீதையோடும் தண்டகாரண்ய வனத்தினுள் செல்லத் தயாரானான் ராமன். அச்சமயம் ராமனைத் தேடிப் பல முனிவர்கள் அங்கே வந்தார்கள்.அம்முனிவர்கள் யாவரும் வெவ்வேறு விதமான முறைகளில் தவத்தில் ஈடுபடுபவர்கள். சிலர் சூரிய, சந்திரர்களின் ஒளியை மட்டுமே உண்பார்கள். சிலர் கல்லில் படுத்து உடலை வருத்திக் கொள்வார்கள். சிலர் இலைகளை மட்டுமே புசிப்பார்கள். சிலர் அரைக்காத தானியங்களையே உண்பார்கள்.

சிலர் கழுத்தளவு நீரில் தவம் புரிபவர்கள். சிலர் வெட்ட வெளியில் தவம் புரிவார்கள். சிலர் ஈர ஆடை மட்டுமே அணிவார்கள். சிலர் தண்ணீரை மட்டும் உண்பார்கள். சிலர் காற்றை மட்டும் உண்பார்கள். இத்தகைய பல குழுக்களாக இணைந்து வந்த முனிவர்கள் மொத்தமாக ராமன் திருவடிகளிலே சரணாகதி செய்து தங்களது பிரார்த்தனையை ராமனிடம் முன்வைத்தார்கள்.

“ஸோயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ வானப்ரஸ்த கணோ மஹான்

த்வந்நாத: அநாதவத் ராம ராக்ஷஸை:

வத்யதே ப்ருசம்”

“ஸ்ரீ ராமா! காட்டில் வசிக்கும் முனிவர்களான நாங்கள் அரக்கர்களாலே மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். ராவணனைச் சேர்ந்த அரக்கர்கள் பல முனிவர்களைக் கொன்று விட்டார்கள். உனது தொண்டர்களான நாங்கள் இன்று அநாதை

களைப் போல் இருக்கிறோம்.”

“பரா த்வத்தோ கதிர் வீர ப்ருதிவ்யாம் நோபப்தயதே

பரிபாலய நஸ் ஸர்வான் ராக்ஷஸேப்யோ ந்ருபாத்மஜ”

“ராமா! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை.

ஆகையினால் அந்த அரக்கர்களிடம் இருந்து எங்கள் அத்தனை பேரையும் நீ தான் காத்தருள வேண்டும்!”

என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள்.

“இருளிடை வைகினேம் இரவி தோன்றினாய்

அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார்”

என்று இக்காட்சியைப் பாடுகிறார் கம்பர். “ராமா! நாங்கள் இருளில் வாடி இருந்த நேரத்தில் கதிரவன் போல் நீ தோன்றி இருக்கிறாய். துயராகிய இருளைப் போக்கி, ஒளிதந்து எங்களுக்கு நீ அபயம் நல்க வேண்டும்!” என்று முனிவர்கள் ராமனிடம் கோரினார்கள்.அப்போது ராமன் அவர்களைப் பார்த்து, “ஏன் என்னிடம் வந்து பிரார்த்தனை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“நைவம் அர்ஹத மாம் வக்தும் ஆஜ்ஞாப்யோஹம் தபஸ்வினாம்”“முனிவர்களே! அடியேன் உங்களின் தொண்டன். நீங்கள் ஆணையிட்டால், அதை நடத்துபவன் நான். அடியேனுக்கு ஆணையிடாமல், நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கட்டளை இடுங்கள்! உங்களைத் துன்புறுத்தும் அத்தனை அரக்கர்களையும் நான் அழிப்பேன்! இது உறுதி!”

“பிதுஸ்து நிர்தேசகர: ப்ரவிஷ்டோஹம் இதம் வனம்

பவதாம் அர்த்தஸித்யர்த்தம் ஆகதோஹம் யத்ருச்சயா

தஸ்ய மேயம் வனே வாஸோ பவிஷ்யதி மஹாபல:”

“நான் என் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காகக் காட்டுக்கு வரவில்லை. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நல்லோர்களான உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே காட்டுக்கு வந்துள்ளேன். உங்களுக்குத் தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன். எனது வீரத்தையும் எனது தம்பியின் பராக்கிரமத்தையும் விரைவில் நீங்கள் காண்பீர்கள். எப்போது நீங்கள் கட்டளை இட்டு விட்டீர்களோ, இனி அதை அப்படியே நிறைவேற்றாமல் நான் ஓய மாட்டேன். வருந்தாதீர்கள்!” என்று சொல்லி முனிவர்களைத் தேற்றினான் ராமன்.

இதிலிருந்து பக்தர்களும் நல்லோர்களும் இடும் கட்டளையைப் பின்பற்றி நடப்பவனாக ராமன் இருக்கிறான் என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா?

‘நேய:’ என்றால் வழிநடத்தப்படுபவர் என்று பொருள். பக்தர்களுக்கு வசப்பட்டு, அவர்களின் சொல்படி நடந்து, அந்த பக்தர்களாலேயே வழிநடத்தப் படுவதால், ஸ்ரீ ராமன் ‘நேய:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.“நேயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நற்காரியங்களை ராமன் நடத்தி முடித்துத் தருவான்.

401. அநயாய நமஹ:(Anayaaya namaha)

ராம ராவணப் போரின் இரண்டாம் நாள். ராவணனுக்கும் லட்சுமணனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. அப்போது பிரம்மா தந்த பாணத்தால் லட்சுமணனின் நெற்றியில் அடித்தான் ராவணன். அதனால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தான் லட்சுமணன். ஆனால் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த லட்சுமணன், தனது பாணங்களால் ராவணனின் பத்து வில்லையும் முறித்து, மேலும் மூன்று பாணங்களை ராவணன் மேல் வீசினான்.லட்சுமணனின் பாணங்களால் தாக்கப்பட்டு ராவணன் மயங்கிக் கீழே விழுந்தான். சிறிது நேரம் கழித்து ரத்தத்தில் குளித்தவன் போல் எழுந்த ராவணன், பிரம்மா தந்த சக்தி ஆயுதத்தை லட்சுமணனின் மார்பை நோக்கி எய்தான்.

லட்சுமணன் அதைத் தடுப்பதற்காகப் பல பாணங்களை எய்த போதும், அந்தச் சக்தி ஆயுதத்தைத் தடுக்க முடியவில்லை. அது நேராக

லட்சுமணனின் மார்பில் பாய்ந்துவிட்டது. மயங்கிக் கிடந்த லட்சுமணனைப் பார்த்த ராவணன், “இவன் மிகப் பெரிய வீரனாகவும் பலசாலியாகவும் இருக்கிறான். இவன் மீண்டும் எழுந்து வந்தால் நம்மையும் நமது சேனையையும் அழித்து விடுவான். எனவே மயங்கி இருக்கும் நிலையிலேயே இவனைச் சிறை

பிடித்துக் கொண்டு சென்று விடுவோம்!” என்று முடிவெடுத்தான்.

தனது இருபது கைகளாலும் லட்சுமணனைத் தூக்கப் பார்த்தான் ராவணன். என்ன ஆயிற்று? வால்மீகி மற்றும் கம்பரின் வார்த்தைகளைக் கொண்டு அதை அனுபவிப்போம்:

“ஹிமவான் மந்தரோ மேருஸ் த்ரைலோக்யம் வா ஸஹாமரை:

சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:”

என்கிறார் வால்மீகி. இமயமலை, மந்தரமலை, மேருமலை ஆகிய மலைகளையும், மூன்று உலகங்களையும், ஒட்டு மொத்த தேவர்

களையும் தூக்கவல்ல ராவணனுடைய கரங்களால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை. இதை அப்படியே கம்பர்,

“தொடுத்த எண்வகை மூர்த்தியைத் தூக்கி வெண்பொருப்பொடு

எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையோன்”

என்று பாடுகிறார்.

ஏன் ராவணனால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை?

“சக்த்யா ப்ராஹ்ம்யாபி ஸௌமித்ரிர் நாடிதஸ்து ஸ்தனாந்தரே

விஷ்ணோர் அசிந்த்யம் ஸ்வம் பாகம் ஆத்மானம் ப்ரத்யநுஸ்மரத்”

என்று வால்மீகியும்,“அடுத்த நல்லுணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்

உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே!”

என்று கம்பரும் இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

லட்சுமணன் ராவணனால் தாக்கப்பட்டு விழுந்து கிடப்பது வெறும் நாடகமே ஆகும். மனித சுவபாவத்தை அனுசரித்து அவதாரம் செய்திருப்பதால், மனித இயல்பை ஒட்டி மயங்கி இருப்பது போல் நடிக்கிறான் லட்சுமணன். உண்மையில் அவனது உள்ளுணர்வும் நல்லறிவும் நீங்கவில்லை. எனவே ராவணன் லட்சுமணனைத் தூக்க வரும் போது, தானும் ராமனுடைய ஒரு பகுதியே என்று தியானித்தானாம் லட்சுமணன்.

தசரதன் செய்த வேள்வியில் கிடைத்த பாயசம் சாட்சாத் திருமாலின் வடிவம். அந்தப் பாயசத்தின் கால் பகுதியிலிருந்து தோன்றியவன் லட்சுமணன். அதனால் அவனுக்குள் திருமாலின் அம்சமும் உண்டு. ஆதிசேஷன், திருமால் ஆகிய இருவரும் சேர்ந்த அவதாரமே லட்சுமணன். எனவே ராவணன் தன்னைத் தூக்கப் பார்த்த போது, தன்னை ராமனின் ஒரு பகுதியாக நினைத்துக் கொண்டான் லட்சுமணன். அதனால் ராவணனால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. தீய சக்திகளாலும், ராவணனைப் போன்ற

அரக்கர்களாலும் ராமனை அசைக்கவே முடியாது என்பது தாத்பரியம்.

‘நய’ என்றால் இழுத்துக் கொள்ளுதல். ‘அநய:’ என்று இழுத்துக் கொள்ள முடியாதவர். தீய சக்திகளால் இழுக்க முடியாதவனாக, அசைக்க முடியாதவனாக ஸ்ரீ ராமன் திகழ்வதால், ‘அநய:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 401-வது திருநாமம்.“அநயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், என்றுமே தீய சக்திகளுக்கு வசப்படாமல் நல்வழியில் வாழ்வதற்கு ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

402. வீராய நமஹ:(Veeraaya namaha)

இரண்டாம் நாள் போரில், மாலைப் பொழுதில் நிராயுதபாணியாக நின்ற ராவணனைப் பார்த்து, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று ராமன் சொன்னவாறே, தலைகுனிந்த நிலையில் ராவணன் போர்க் களத்தில் இருந்து தனது அரண்மனையை நோக்கி நடந்தான்.

“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான்”

என்று கம்பர் இக்காட்சியைப் பாடுகிறார். திக் கஜங்களாகிய எட்டு யானைகளை வென்ற ராவணனின் மார்பு, அனுமனால் தாக்கப்பட்டு வலிமை இழந்திருந்தது. கைலாசத்தை ஆட்டிய ராவணனின் தோள்கள் லட்சுமணனைத் தூக்க முடியாமல் அவமானப்பட்டன. நாரதருக்கு இணையாக வீணை வாசித்து, சாமகானம் செய்த ராவணனின் நாவால், இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்று ராமன் சொன்ன போது பதில் பேச முடியவில்லை. ராவணனின் கர்வத்துக்கு அடையாளமாய் இருக்கும் பத்துக் கிரீடங்களும் ராம பாணங்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்து விட்டன. சிவபெருமான் தந்த வாளையும் ராமன் பாணத்தால் உடைத்து விடுவானோ என அஞ்சி வாளையே ஒளித்து வைத்து விட்டான் ராவணன்.

இப்படி மார்பின் வலிமை, தோள் வலிமை, நா வன்மை, கிரீடங்கள், வாள் மட்டுமின்றி வீரத்தையும் போர்க்களத்திலே விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் சென்றான் ராவணன்.

தேரில் ஏறிப் போர்க்களத்துக்கு வந்தவன் இப்போது தரையில் நடந்தபடித் திரும்புகிறான். திசைகளை எல்லாம் செருக்கோடு பார்த்தபடிப் போருக்கு வந்தவன், நிலத்தைப் பார்த்தபடி இலங்கை திரும்புகிறான்.ராவணனின் பாட்டனான மால்யவான் என்ன ஆயிற்று என்று கேட்க, அதற்கு ராவணன்,“முப்புரம் முருக்கச் சுட்ட மூரி வெஞ்சிலையும் வீரன்

அற்புத வில்லுக்கு ஐய அம்பெனக் கொளலும் ஆகாஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒருபொருள் இல்லை வேதம்தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா!”

என்று பதில் சொன்னான். “ஏதோ கூனி முதுகில் மண் உருண்டை எய்வது போல் அநாயாசமாகப் பாணங்களைத் தொடுத்து என்மீது எய்தான் ராமன். முப்புரங்களை எரிக்கப் பரமசிவன் பயன்படுத்திய வில்லைக் காட்டிலும் ராமனின் வில் வலிமை மிக்கது. வேதமே பொய்த்தாலும், ராமனின் வில் பொய்க்காது. அவனது கரவேகமும் சரவேகமும் என் கண்ணில் நிற்கின்றன!” என்றான் ராவணன்.அன்று இரவு முழுவதும் ராமனின் பாணங்களைப் பற்றிய எண்ணம் ராவணனை வாட்டியதாக வால்மீகி வர்ணிக்கிறார்.

“மாதங்க இவ ஸிம்ஹேன கருடேனேவ பன்னக:

அபிபூத: அபவத் ராஜா ராகவேண மஹாத் மனா”சிங்கத்தால் தாக்கப்பட்ட யானை போலவும், கருடனால் தாக்கப்பட்ட பாம்பு போலவும், ராமனால் தாக்கப்பட்ட ராவணன் கொட்டம் அடக்கப்பட்டவன் ஆனான்.“ப்ரஹ்மதண்ட ப்ரகாசானாம் வித்யுத் ஸத்ருச வர்சஸாம்ஸ்மரன் ராகவ பாணானாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:”முனிவர்களின் சாபம் போல் தப்பாது பலன் தருவதும், வசிஷ்டரின் தண்டம் போல் மகிமை கொண்டதும், மின்னலைப் போல் ஒளிவீசுவதும், ஊழிக் கால நெருப்பு போல் வெப்பம் மிக்கதுமான ராம பாணத்தை நினைத்து நினைத்து, மனம் வெம்பி மிகவும் வருந்தினான். அதன் பின்னர் தான், கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு வந்தான் ராவணன்.

இப்படி அரக்கர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் தரக்கூடிய வீரம் மிக்கவனாக ராமன் திகழ்வதால் ‘வீர:’ என்று அழைக்கப்படுகிறான். ‘வீர:’ என்றால் அரக்கர்களுக்கு பயம் உண்டாக்கக் கூடிய வீரம் மிக்கவர் என்று பராசர பட்டர் விளக்கவுரை வழங்கியுள்ளார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 402-வது திருநாமம்.“வீராய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் வீரம் மிக்கவர்களாக விளங்கும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

403. சக்திமதாம் ச்ரேஷ்டாய நமஹ:(Shakthimathaam Sreshtaaya namaha)

சிவ தனுஸ்ஸை முறித்துச் சீதா தேவியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, அயோத்தி நோக்கி ராமன் திரும்பி வந்த போது, அந்தப் பிரம்மாண்டமான கல்யாண ஊர்வலத்தைப் பரசுராமர் வழிமறித்தார். “ராமா! நீ சிவபெருமானின் வில்லை முறித்த செய்தியைக் கேட்டு மகேந்திர மலையில் இருந்து உன்னைத் தேடி வந்துள்ளேன்! உன்னுடைய வலிமையைப் பரிசோதிக்க விழைகிறேன்! இதோ என்னிடம் உள்ள விஷ்ணுதனுஸ்ஸை வாங்கி நாண் ஏற்றிக் காட்டு! அவ்வாறு நாண் ஏற்றினால் உன்னை வீரன் என ஏற்கிறேன். அதன்பின் நாம் இருவரும் மல்யுத்தம் செய்து யார் பலசாலி என்று முடிவு செய்து கொள்ளலாம்! முதலில் என்னோடு மோத உனக்குத் தகுதி உள்ளதா இல்லையா என்பதை இந்த வில்லில் நாண் ஏற்றுவதன் மூலம் காட்டுக!” என்று ராமனை நோக்கி முழங்கினார் பரசுராமர்.

பரசுராமர் முகத்தில் தீப்பிழம்பு போல் பொங்கி வரும் கோபத்தைக் கவனித்த தசரதன், நெஞ்சுருகிக் கைகூப்பி, “முனிவர் பெருமானே! ராமன் தான் எனது உயிர்! அவன் இல்லாவிடில் நாங்கள் யாருமே வாழமாட்டோம்! அவனைப் போய்ப் போருக்கெல்லாம் அழைக்காதீர்கள்!” என்று மன்றாடினான். ஆனால் பரசுராமர் அதைப் பொருட்படுத்தாமல், “ராமா! இந்த வில்லில் நீ நாண் ஏற்றினாயானால், என்னோடு மோதும் தகுதி உனக்கு உள்ளது என்று பொருள். அதன்பின் நாம் மோதலாம்!” என்றார்.

ராமன் தனது தந்தை தசரதனை வணங்கி விட்டு, பரசுராமரைப் பார்த்து, மெல்லிய குரலில், “நான் வீரம், ஆற்றல் இல்லாதவன் என எண்ணி ஏதேதோ பேசி விட்டீர்கள். எனது தேஜஸ்ஸையும் பராக்கிரமத்தையும் இப்போது காண்பீர்கள்!” என்று சொல்லிப் பரசுராமர் கையில் இருந்து வில்லை வாங்கிக் கொண்டான்.அனாயாசமாக அதில் நாண் ஏற்றிய ராமன், அந்த வில்லில் அம்பையும் பூட்டி, “பரசுராமரே! இந்த ராமன் ஒரு பாணத்தைப் பூட்டிவிட்டால், அது வீணாகக் கீழே விழுந்ததில்லை. இப்போது நீங்கள் தந்த விஷ்ணு தனுஸ்ஸில் அம்பைப் பூட்டிவிட்டேன். இதை எய்வதற்கு ஓர் இலக்கு தாருங்கள். நீங்கள் எனது குருவான விச்வாமித்ர முனிவருக்கு உறவினர், வேதம் கற்றவர், தவம் புரிந்து உயர்ந்த முனிவர். உங்கள் மீது பாணம் போட எனக்கு விருப்பமில்லை. அதனால் பாணத்துக்கு வேறோர் இலக்கு தாருங்கள்!” என்று பரசுராமரிடம் சொன்னான்.

ராமனது சாகசத்தைக் கண்ட பரசுராமர், தனது பொலிவு, வீரியம், கர்வம் அனைத்தையும் இழந்தவராய், “ராமா! எனது தவ வலிமையையே இலக்காகத் தருகிறேன்! உன் பாணத்தால்

என் தவ வலிமையைத் தாக்கி எடுத்துக் கொள்!” என்றார். ராமனும் அவ்வாறே செய்தான்.அதன்பின் ராமனிடம் இருந்து விடைபெறும் முன், பரசுராமர் ராமனைப் பார்த்து, “ராமா! உன்னிடம் தோற்றதை அவமானமாக நான் எண்ணவில்லை. நீ பரமாத்மாவாகிய திருமாலின் பூரண அவதாரம். நான் அந்த இறைவனுடைய ஒரு சக்தியைக் குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெற்று வந்த ஆவேச அவதாரமே ஆவேன். பூரண அவதாரமான உன் முன்னே ஆவேச அவதாரமான என்னால் நிற்க முடியாது.

இந்த வில்லின் நாணை நீ ஏற்றியதன் மூலம் நீயே பரமாத்மா, திருமால் என்பதை உணர்ந்தேன். உனக்கு மங்கலம் உண்டாகுக. வலிமை மிக்க தேவர்கள் அத்தனை பேரும் மொத்தமாக இணைந்து வந்தாலும் கூட உன்னை வெல்ல முடியாது. இதோ தேவர்கள் கூடி வந்து உனது வீரத்தை வியந்து துதிக்கிறார்கள், பார்! உனக்கு நிகரான வரும் இல்லை, உன்னை விட மேம்பட்டவரும்

இல்லை!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார். இதை வர்ணிக்கும் வால்மீகியின் சுலோகங்கள்:

“அக்ஷயம் மதுஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸுரோத்தமம்”

“ஏதே ஸுரகணாஸ் ஸர்வே நிரீக்ஷந்தே ஸமாகதா:

த்வாம் அப்ரதிம கர்மாணம் அப்ரதி த்வந்த்வம் ஆஹவே”

ஆக, வலிமை மிக்கவர்கள் என்று சொல்லப்படும் தேவர்களாலும் போற்றப் படுபவனாக, வலிமை மிக்கவர்கள் அனைவரை விடவும் உயர்ந்த வலிமை மிக்கவனாக ராமன் விளங்குவதால், ‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்று அழைக்கப் படுகிறான். ‘சக்திமான்’ என்றால் சக்தி மிக்கவன். ‘சக்திமதாம்’ என்றால் சக்தி மிக்கவர்களுக்கு எல்லாம். ‘ச்ரேஷ்ட:’ என்றால் மிகப்பெரியவர், உயர்ந்தவர். ‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்றால் சக்திமான்களை விடவும் உயர்ந்த சக்தி மிக்கவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 403-வது திருநாமம்.“சக்திமதாம் ச்ரேஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்ரீ ராமன் சக்தி கொடுத்தருள்வான்.

404. தர்மாய நமஹ:(Dharmaaya namaha)

ஒரு வார காலம் நடைபெற்ற ராம ராவணப் போரின் ஐந்தாம் நாளில், லட்சுமணனுக்கும் ராவணனின் மகனான இந்திரஜித்துக்கும் கடும் போர் நடந்தது. விபீஷணன் லட்சுமணனுக்கு

உறுதுணையாக இருந்து, அவ்வப்போது இந்திரஜித் செய்யும் மாயங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.“இரவுப் பொழுது வந்து விட்டால் இந்திரஜித் பல மாயங்கள் செய்யத் தொடங்கி விடுவான்! இப்போது பகல் வேளை! சூரியன் இருக்கும் போதே இவனை விரைந்து அழித்து விடுங்கள்!” என்று லட்சுமணனுக்கு விபீஷணன் ஆலோசனை சொன்னான்.

அடுத்த நொடியே லட்சுமணனின் வில்லில் இருந்து பாணங்கள் மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து இந்திரஜித்தின் சேனை, தேர்ப்பாகன், தேர், குதிரைகள் ஆகியவற்றை அழித்தன. தேரை இழந்த இந்திரஜித், திடீரென வானில் மறைந்தான். மறைந்திருந்தபடி லட்சுமணன் மீது கல்மழை பொழியத் தொடங்கினான்.இந்திரஜித் எங்கே ஒளிந்திருக்கிறான் என அறிய முனைந்த லட்சுமணன், வானில் அனைத்துத் திசைகளையும் நோக்கி அம்புகளைத் தொடுத்தான். ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமப் பெருமாளின் திருவடிகள் எப்படி அனைத்துத் திசைகளையும் வியாபித்ததனவோ, அது போல் லக்ஷ்மணனின் பாணங்கள் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன.

வானில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரஜித்தை அந்த பாணங்கள் தாக்கியதால், அவனது உடலிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து வந்தது. இருண்ட மேகத்துக்கு நடுவே செவ்வானம் தெரிவது போல், லட்சுமணன் வானில் வீசிய பாணங்களுக்கு மத்தியிலே இந்திரஜித்தின் சிவந்த ரத்தம் சிந்துவதைக் கண்டான் லட்சுமணன். இதைக் கம்பர்,“மறைந்தன திசைகள் எங்கும் மாறுபோய் மலையும் ஆற்றல்குறைந்தனன் இருண்ட மேகக் குழாத்திடைக் குருதி கொள்மூஉறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம்நிறைந்தவன் கண்டான் காணா இனையதோர் நினைவதானான்”என்று பாடுகிறார்.

சிவந்த ரத்தம் வானில் இருந்து சிந்துவதைக் கொண்டு இந்திரஜித் ஒளிந்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான் லட்சுமணன். இந்திரஜித்தின் வில்லை முறிக்க நினைத்தான் லட்சுமணன். ஆனால் விபீஷணனோ, “இவன் சிவபெருமான் தந்த வில்லை ஏந்தி இருக்கிறான். அதை உடைப்பது கடினம்!” என்று லட்சுமணனிடம் சொன்னான். அதைக் கேட்ட லட்சுமணன், வில்லைப் பிடித்திருந்த இந்திரஜித்தின் கையையே தனது பாணத்தால் அறுத்தெறிந்தான்.

கையிழந்த பின்னும் இந்திரஜித், “உன்னை அழிக்காமல் நான் மடியமாட்டேன்!” என்று லட்சுமணனை நோக்கிச் சபதம் செய்து, காற்று, இடி, மின்னல் போல வடிவங்கள் கொண்டு மாயப் போர் புரிந்தான். அப்போது லட்சுமணன் தனது வில்லில் பாணத்தைப் பூட்டி, ஐந்த்ராஸ்திரத்துக்குரிய மந்திரத்தை ஜபித்து,

“தர்மாத்மா ஸத்யஸந்தச்ச ராமோ தாசரதிர் யதி

பௌருஷே சாப்ரதி த்வந்த்வ: சரைனம் ஜஹி ராவணிம்”

என்று சொல்லி அதை இந்திரஜித் மேல் ஏவினான். இதன் பொருள் - “தசரதனின் மகனான ஸ்ரீ ராமன், தருமமே வடிவெடுத்தவராகவும், வாய்மையைக் கடைபிடிப்பவராகவும், வீரத்தில் ஒப்பற்றவராகவும் இருப்பது உண்மையானால், ஏ பாணமே! நீ இந்திரஜித்தை அழித்துவிடு!

”ராமன் தர்மாத்மா என்பதில் மாற்றுக்கருத்து இருக்க

முடியுமா லட்சுமணன் சொன்னபடியே அந்த பாணம் இந்திரஜித்தின் தலையை

அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. இங்கே ராமனை

தர்மாத்மா என்று இரண்டு காரணங்களால்

குறிப்பிட்டிருக்கிறான் லட்சுமணன். ஒன்று,

தர்மாத்மா என்றால் அறநெறியே வடிவெடுத்

தவர் என்று பொருள்.

மற்றொரு பொருள் என்னவென்றால், வடமொழி இலக்கணப்படி ‘தாரணாத் தர்ம:’ என்று சொல்வார்கள். எல்லாவற்றையும் எது தாங்கி நிற்கிறதோ அதற்குத் தருமம் என்று பெயர். (தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - அறத்தைத் தாங்குவோரை அறம் தாங்கும் என்ற ரீதியில் தான் அறநெறியும் தர்மம் என்றழைக்கப்படுகிறது.) செல்வச் செழிப்பு முதல் முக்தி வரை அனைத்து நன்மைகளையும் தந்து அனைவரையும் தாங்கி நிற்பவன் ஸ்ரீ ராமன். அந்தக் காரணத்தாலும் அவனை தர்மாத்மா என்று இங்கே லட்சுமணன் சொல்லி இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் செல்வச் செழிப்பு, முக்தி உள்ளிட்ட அனைத்து வித நன்மைகளையும் அருளி, அனைவரையும் தாங்கி நிற்பதால், (‘தாரணாத் தர்ம:’ - தாங்கி நிற்பவர்க்கு தர்மம் என்று பெயர்) ராமன் ‘தர்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘தர்ம:’ என்றால் (இவ்விடத்தில்) தாங்கி நிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 404-வது திருநாமம்.(ராமன் அறநெறிகளைக் கடைப்பிடித்ததால், தர்ம: என்று அழைக்கப்படுவதாக இங்கே பொருள் உரைக்கலாமே என ஐயம் எழலாம். ஆனால் ராமன் அறநெறி வழுவாது இருக்கும் பண்பு அடுத்த திருநாமத்தில் சொல்லப்

படுகிறது.)‘‘தர்மாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீ ராமன் என்றென்றும் தாங்கி நிற்பான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: