சென்னை: இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு, சாந்தினி தமிழரசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியான்ட், சென்ராயன் நடித்துள்ள அட்வென்ச்சர் பேண்டஸி படம், ‘கஜானா’. இதை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியுள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையில் கபிலன், கானா சல்லு பாடல்கள் எழுதியுள்ளனர். பான் இந்தியா படமான இது, வரும் 9ம் தேதி திரைக்கு வருகிறது.
தமிழகத்தில் டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் திருமலை வெளியிடுகிறார். படம் குறித்து வேதிகா பேசுகையில், ‘இந்திய திரையுலகில் இதுபோல் ஒரு அட்வென்ச்சர் படம் வந்தது இல்லை’ என்றார். சாந்தினி தமிழரசன் பேசும்போது, ‘இதில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். வேதிகா நடனத்துக்கு நான் தீவிர ரசிகை’ என்றார். சிறப்பு விருந்தினர் விக்னேஷ் பேசுகையில், ‘தமிழில் 10 ஹீரோக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
அவர்கள் 100 கோடி, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். மற்ற ஹீரோக்களையும், இயக்குனர்களையும் நமக்கு தெரியாது. ரசிகர்கள் சினிமாவை ரசிப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட மனிதரின் ரசிகராக இருக்கக்கூடாது. புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதைகளையும் வரவேற்று ரசிக்கும் சினிமா ரசிகர்களாக இருந்தால்தான் நல்ல படங்கள் நிறைய வரும்’ என்றார்.
