ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

‘‘பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன்தானே? என்றார். அவரோ, நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது, வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ‘‘இம்மனிதனை எனக்குத் தெரியாது’’ என்று ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘‘உண்மையாகவே நீயும் அவனைச் சேர்ந்தவனே, ஏனெனில், உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக் கொடுக்கிறது’’ என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ‘‘இந்த மனிதனை எனக்குத் தெரியாது’’  என்று சொல்லி சபிக்கவும், ஆணையிடவும் தொடங்கினார்.  உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது  ‘‘சேவல் கூவும்முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்’’ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். - (மத்தேயு 26:69-75)

நாத்திகர் மாநாடு ஒன்று நடந்தது. கடவுள் இல்லை என்று பல்வேறு நாத்திகர்கள் எழுதிய ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிறிஸ்தவர் உள்ளே சென்று ‘‘எல்லாப் புத்தகங்களிலும் தலைசிறந்த புத்தகம், மேலான புத்தகம் இந்த வேதப் புத்தகமே’’ என்று சொல்லி மற்ற புத்தகங்களுக்கு மேலாக வைத்தார். இதைக்கண்டு கோபப்பட்ட ஒரு நாத்திகர், வேதப்புத்தகத்தை எடுத்து எல்லாப் புத்தகங்களுக்கும் கீழாக அடியிலே வைத்தார். கிறிஸ்தவர் அதைக்கண்டு மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து, ‘‘வேதம் மேலானது மட்டுமல்ல, எல்லாப் புத்தகங்களுக்கும் ஆதாரமானது, அடித்தளமானது, ‘அஸ்திவாரமானது’ என்பதை நிரூபிக்கும் விதத்தில் இவர் செய்துவிட்டார் என்று கூறினார்.

இதைக்கேட்டு மிகுந்த எரிச்சலடைந்த அந்த நாத்திகர், வேதப் புத்தகத்தை எடுத்து மற்ற புத்தகங்களின் நடுவே சொருகி வைத்தார். அப்பொழுது அந்த மனிதர், ‘‘இதோ இந்த வேதப்புத்தகம் நடுவிலே அச்சாணியைப்போல வைக்கப்பட்டிருக்கிறது. அதைச்சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. ஓடுகிற ஒரு வண்டிக்கு அச்சாணி எப்படித் தேவைப்படுகிறதோ அப்படியே உலக ஓட்டத்திற்கு வேதம் முக்கியமானது என்று அந்த நண்பர் மறைமுகமாகச் சொல்லிவிட்டார் என்றார்.

‘‘ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை. அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். அவரது செயல் மாண்பும் மேன்மையும் மிக்கது. அவரது நீதி என்றென்றும் நிறைந்துள்ளது. அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார். அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். அவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு உணவு அளிக்கின்றார். தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தை தம் மக்களுக்கு அளித்தார். இவ்வாறு தம் ஆற்றல் மிக்க செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை, நீதியானவை, அவர் தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. என்றென்றும் எக்காலமும் அவை நிலை மாறாதவை. உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார். தம் உடன்படிக்கை என்றென்றைக்கும் நிலைக்குமாறு செய்தார். அவரது திருப்பெயர் தூயது. அஞ்சுதற்கு உரியது. ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம். அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவு உடையோர். அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.’’ - (திருப்பாடல்கள் 111:2-10)

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: