வித்தியாசமான வழிபாடு

கற்குவைக்கு வழிபாடு

பழமைக்கும் தொன்மைக்கும் இலக்கணமாய் திகழும் சேலம் மாவட்ட கிராமங்களில், பழங்காலம் தொட்டு இன்றளவிலும் பல்வேறு வினோத விழாக்களும், சடங்குகளும் நடந்தேறி வருகின்றன.

இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், மல்லியகரை அடுத்த அரசநத்தம் ஊராட்சி கோவிந்தராஜாபாளையம், ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரம் மற்றும் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த (கல் தச்சர்கள்) மக்கள், இறந்து போனவர்களின் நினைவாக முன்னோர்கள் வழியில், ‘கற்குவை’ அமைத்து வழிபாடு நடத்தும் வியப்பூட்டும் பழக்கத்தை பழங்காலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.

உழைத்து ஓய்ந்து மாண்டுபோகும் முன்னோர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடலை அடக்கம் செய்யும் இந்த கிராம மக்கள், அவர்களின் நினைவாக, மயானத்தையொட்டி காணப்படும் சமதளமான இடத்தை தேர்வு செய்து, மிகவும் உறுதியான கருங்கற்களை சேகரித்துக் கொண்டு வந்து அடுக்கி வைக்கின்றனர்.

உறவினர்களின் நினைவாக தொடர்ந்து கற்களை அடுக்கி வைத்து, கோபுரம் போல அமைத்து பழங்கால ஈமச்சின்னமான ‘கற்குவைகள்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். குறிப்பிட்ட உயரத்தை அடைந்து விட்ட கற்குவைகளுக்கு அருகே புதிய கற்குவைகளை உருவாக்குகின்றனர். புதிய தொழில் துவங்கும் போதும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை துவங்குவதற்கு முன்பும், இறந்து போன முன்னோர்களை நினைவுகூர்ந்தும் ‘கற்குவைகளுக்கு’ வழிபாடு நடத்துவதை தொன்று தொட்டு வழக்கமாக தொடர்ந்து வருகின்றனர்.

பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி, தனது சந்ததியினர் செழிப்பாக வாழ்வதற்காக சேர்த்து வைத்து விட்டு, காலத்தின் கட்டாயத்தால் இறந்து போகும் பெற்றோர்கள், முன்னோர்கள் நினைவாக ‘கற்குவைகளை’ உருவாக்கி வழிபடுவதை, மக்கள் பழங்காலம் தொட்டு  இன்றளவும் தொடர்ந்து வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

வௌவால்களுக்கு வழிபாடு

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே, பெரியாண்டிச்சி அம்மன் கோயில் மரங்களில் வாழும் வௌவால்களையும் தெய்வக் குழந்தைகளாகக் கருதி இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை தருணத்திலும் கூட, இப்பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வௌவால்களை காத்து வருகின்றனர். அயோத்தியாப்பட்டணம்-பேளூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது, அக்ரஹார நாட்டா மங்கலம் வௌவால் தோப்பு கிராமம். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், ஏரிக்கரையின் அடியில் அமைந்துள்ள பழமையான பெரியாண்டவரை காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோயில் வளாகத்தில் புளியமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. ஏறக்குறைய அரை ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து கிடக்கும் இந்த புளியமரங்களில், 100 ஆண்டுகளுக்கு மேலாக, நூற்றுக்கணக்கான ‘பழந்தின்னி’ வௌவால்கள் கூட்டமாக வாழ்ந்துவருகின்றன. இரவு நேரங்களில் வெகு தூரத்திற்கு இரைதேடி செல்லும் வௌவால்கள் திரும்பி வந்து, பகல் நேரத்தில் இந்த மரங்களில் தொங்கியபடி ஓய்வெடுக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வௌவால் தோப்பு’ என்றே பெயர் பெற்றுள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெயராமல் கோயில் மரங்களில் கூட்டமாக வாழ்ந்து வரும் வௌவால்களை சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாத்து வருவதோடு, காவல் தெய்வமான பெரியாண்டவருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தும் போது வௌவால்களையும் வழிபடுகின்றனர்.தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் வௌவால்களை கிராம மக்கள் துன்புறுத்தாமல் வளர்த்து வருவதோடு, வௌவால்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தீபாவளி பண்டிகை தருணத்திலும் கூட பட்டாசு வெடிப்பதை தவிர்த்து

வருவது பாராட்டுதலுக்குரியதாகும்.

இது குறித்து வௌவால் தோப்பு கிராமத்தை சேர்ந்த சிலர் கூறியதாவது, ‘பெரியாண்டிச்சி அம்மன் கோயில் மரத்தில் வாழ்ந்து வரும் வௌவால்களையும் தெய்வக் குழந்தைகளாகவே கருதுகிறோம். அம்மனை வழிபடும்போது வௌவால்களையும் வழிபடுகிறோம். வௌவால்களுக்கு வெடிச்சத்தமும், புகையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தீபாவளி தருணத்திலும் கூட பட்டாசு வெடிப்பதில்லை.

ஒருமுறை சிலரின் துன்புறுத்தலுக்குள்ளான வௌவால்கள், இங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டன. மீண்டும் கோயில் மரத்திற்கு வௌவால்களை அழைத்து வருவதற்காக, பம்பை, உடுக்கை முழங்க, பொங்கல் வைத்துச் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினோம். எங்கள் வேண்டுதலுக்கு கிடைத்த பலனாக, ஓரிரு நாட்களிலேயே வௌவால்கள் மீண்டும் எங்களது கிராமத்திற்கு திரும்பி வந்துவிட்டன’ என்றனர்.

பெரியார் மன்னன்

Related Stories: