கேங்கர்ஸ்: விமர்சனம்

அமைச்சர் மதுசூதன ராவை ஏமாற்றி ரகசிய லாக்கரில் ஹரீஷ் பெராடி பதுக்கி வைத்திருக்கும் 100 கோடி ரூபாயை கொள்ளையடிக்க சுந்தர்.சி கேங்கர்ஸ் படையை அமைக்கிறார். வடிவேலு, கேத்ரின் தெரசா, பக்ஸ், முனீஷ்காந்த், காளை கூட்டணி, 100 கோடி ரூபாயை லபக்கியதா? சுந்தர்.சி ஏன் ஹரீஷ் பெராடியை பழிவாங்க துடிக்கிறார் என்பது மீதி கதை. மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் சுந்தர்.சி – வடிவேலு காம்போ ரசிகர்களை ஏமாற்றவில்லை. வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளனர். ‘நோ லாஜிக், ஒன்லி மேஜிக்’ என்று பழைய டெம்ப்ளேட்டையே புதிதாக கொடுத்துள்ளனர். வடிவேலுவின் 2ம் பாதி காட்சிகள் காமெடி சரவெடி.

இயல்பாக நடித்துள்ள சுந்தர்.சி, டைரக்‌ஷனில் ‘காமெடி கில்லி’ என்று மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது மனைவி வாணி போஜனின் கடைசி காட்சி உருக வைக்கிறது. லாக்கரை திறக்க வரும் சார்லஸ், நாத்தனாருக்கு நீதி கேட்டு தியேட்டரில் லந்து செய்யும் பெண் என்று, பல்வேறு கெட்டப்புகளில் கலக்கும் வடிவேலு, படத்தை தாங்கி நிற்கிறார். தவிர விமல், முனீஷ்காந்த், மைம் கோபி, அருள்தாஸ், ஹரீஷ் பெராடி, பக்ஸ், காளை, சந்தானபாரதி, விச்சு, மதுசூதன ராவ், வெங்கட் ராகவன், ரிஷி, மாஸ்டர் பிரபாகர் ஆகியோர் காட்சிகளுக்கு ஏற்ப நடித்துள்ளனர். சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஆனால், பின்னணி இசையில் பளிச்சிடுகிறார். கிருஷ்ணமூர்த்தியின் கேமரா விளையாடி இருக்கிறது. 2 மணி 40 நிமிட நேரத்தை பிரவீன் ஆண்டனி கத்தரித்து இருக்கலாம். சரவணன் என்ற பெயரில் சுந்தர்.சி செய்யும் ஆள்மாறாட்டம் செம ட்விஸ்ட். கோடை வெயிலுக்கு இதமாக வாய்விட்டு சிரிக்கலாம்.

Related Stories: