நல்வேளை தந்தருளும் பரங்கிரிச் செவ்வேள்

இவ்வுலக உயிர்களுக்கு எல்லாம்  தலைவனாய் விளங்கும் சிறப்பினைப் பெற்ற முருகப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளுள் ஒன்றாய் அமைந்திருக்கும் கீர்த்தியைப் பெற்றதாகும். திருமுருகன் உறையும்  திருப்பரங்குன்றம் என்னும் பரங்கிரியின் பெருமையையும் முருகப்பெருமானின் சிறப்புகளையும் பெருமானை வழிபடுவோர் பெரும் அருளையும் பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் பெரிதும் எடுத்தியம்புகின்றது.

பாரோர் போற்றும் பரங்கிரி கிரௌஞ்ச மலையை உடைத்த  வேற்படையை ஏந்திய முருகப் பெருமானின் திருப்பரங்குன்றம், நன்கு  மலர்ந்த துழாய் மாலையையும் செல்வத்தினையும் கருடக் கொடியையும் உடைய திருமாலும் காளை வாகனத்தை உடைய சிவபெருமானும் தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரம்மதேவனும் இப்பிரம்மதேவனிடத்தினின்றும் தோன்றி உலகின் இருளைப்போக்கிய ஆதித்தர் பன்னிருவரும் தேவ மருத்துவராகிய அசுவனி தேவர்களும் மெய்ந் நூல்களை உணர்ந்த வசுக்கள் எண்மரும் திருவாதிரை நாளிற்குரிய உயிர் முதல்வனாகிய சிவபெருமானுடைய பெயராலே சொல்லப்பட்ட  பதினொரு உருத்திரரும் திசையினைக் காக்கும் திசை காவலர் எண்மரும்  ஆகியவர்களும் இவர்கள் அல்லாத அமரரும் தேவரும் அரக்கர்களுமாகிய ஏனையோரும், வேதத்தை உணர்ந்த சிறந்த தவவொழுக்கமுடைய தெய்வ முனிவர்களும், முருகப்பெருமானைக்  காணும்பொருட்டு இம்மண்ணுலகத்தின்கண் வந்து தங்குதற்குரிய இடமாக நின்ற சிறப்பினைக் கொண்டமைந்ததாகும். ஆதலால் இப்பரங்குன்றம் இமயமலையையே ஒத்த சிறப்பினை உடையதாய்ப் போற்றப்படுகின்றது.

அப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுனை, முருகப் பெருமானை வளர்த்தெடுத்த சரவணப் பொய்கையைப் போன்றதாகும். அக்குன்றிலுள்ள மேகங்களின்  முழக்கமானது முருகப்பெருமானின்  பிணிமுகம் எனப்பெறும் யானையினது முழக்கத்தை ஒத்திருந்தது. அந்த யானையின் முழக்கத்தைக் கேட்ட முருகப்பெருமானின் கொடியில் அமைந்துள்ள சேவலானது கூவிற்று; அதனைக் கேட்ட திருப்பரங்குன்றின் யானைகள் பிளிறின; அதனால் அம்மலையின் முகடுகளில் எதிரொலி எழுந்தது; மேலும் அம்மலையின் மீது  முகில்கள் மிக்க மழையைப் பெய்தமையால் சுனைப் பூக்கள் மலர்ந்தன; மலையின் மீது  கொன்றைப் பூங்கொத்துக்கள் பொன்மாலை போன்றிருந்தன.

பாறைகளில் வேங்கைமலர்கள் பரந்து கிடந்தன; காந்தள்கள் மலர்ந்தன; அவற்றிடையே செங்காந்தள் மலர்கள் பரந்தன; இவ்வாறு முருகப்பெருமானின்  திருப்பரங்குன்றம் கார்காலத் தன்மை மிக்கதாய் அமைந்திருந்தது. அம்மலைமீது மலர்ந்திருந்த கடம்பமலரில் அமர்ந்து  தாதூதும் வண்டுகளின் குரல் பண்ணிசை போன்றிருந்தன. மயில்கள் அகவும் குரல் தலைவியரைப் பிரிந்து சென்ற தலைவர்களை காலம் தாழ்த்தாமல் வாருங்கள்! என அழைப்பவர் சொற்கள் போன்று அமைந்திருந்தன.

திருப்பரங்குன்றத்தின்கண் ஒரு பகுதி யில் பாணருடைய யாழிசை எழும்: அதற்கு மாறாகப் பிறிதோர் பகுதியில் பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டுகளினது முயற்சியாலுண்டாகிய வண்டிசை எழும்; ஒருசார் மூங்கிலால் அமைந்த குழலிசை எழும்; அதற்கு மாறாக ஒருசார் தும்பியிசை எழும்; ஒருசார் முழவு முழங்கும்; அதற்கு மாறாக ஒருசார் தலைமைத் தன்மை

யுடைய நெடிய சிகரங்களினின்றும் வீழும் அருவி முழங்கும்; ஒருசார் பாடற் தொழிலில் சிறந்த  நல்ல ஆடல் மகளிர்  ஆடுவர்; அவர்க்கு மாறாக ஒருசார் காற்று அசைந்தவிடத்துப் பூங்கொடிகள் ஆடும்; ஒருசார் பாடினி பாடும் பாலைப் பண்ணினது நிறைகுறைகள் தோன்றும்; அதற்கு மாறாக மயிலின் நிறைகுறை அரிக்குரல் தோன்றும். மலர் களின் மணங்களை அளாவிக்கொண்டு தென்றல் உலாவும் சிறப்புடையது திருப்பரங்குன்றத்தின் சிறப்புடைய வழியாகும்.  

திருப்பரங்குன்றத்தின் அருகில் அமைந்துள்ள மதுரையின் முரசம் கடல் போன்றும் முகில்போன்றும் இடிபோன்றும் முழங்கும். அவ்வாறு முழங்கும் பொழுதெல்லாம் பரங்குன்றத்தில் அதற்கு மாறாக எதிரொலி எழுந்து முழங்கி நிற்கும்; மேலும் நாற்றிசையினும் பரந்த திருப்பரங்குன்றின்கண் எய்தி, உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசைக்கண், முருகப்பெருமான் ஆவியாகக் கொள்கின்ற அகிலிட்டெழுப்பிய நறுமணங் கமழும் புகை, அவ்வவ் விடந்தோறும் மேலே மேலே போதலால், இமையா நாட்டமுடைய தேவர்களும் இமைத்து அந்த இடத்தில் இருந்து  அகலாது நிற்பர். அத்தகைய புகை எழுந்து பரவுதலால் ஞாயிற்றையும் அவ்விடத்தே காண இயலாது.

இதனை,

“ஒருதிறம், பாணர் யாழின் தீங்குர லெழ

 “ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசையெழ

ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ

ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத

ஒருதிறம், மண்ணார் முழவின் இசையெழ

ஒருதிறம், அண்ணல் நெடுவரை

அருவிநீர் ததும்ப ----

மாறட்டான் குன்றம் உடைத்து”

 - என உரைக்கும் பரிபாடல்.

பரங்குன்றில் வழிபடுவோர் உயரிய சிகரங்களையுடைய மலையில் பெய்த மழைநீர் பெருகுதலானே குளிர்ந்த கிளைகளையுடைய பூம்பொழில்கள், பூக்களைப் பூத்து நிற்கின்றன. குளிர்ந்த குளங்கள் நீராலே நிறைந்திருக்கும்  சிறப்புடைய திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையே உள்ள பெரிய வழியில்  சிறந்த இறையன்புடையோர், பரங்குன்றத்தின்கண் உறையும் முருகவேளுக்கு விழாச்செய்ய நடந்து வருகின்றனர்.

அவர்கள் நிறத்தானும் மணத்தானும் ஒன்றிற்கொன்று மாறுபடுகின்ற பல்வேறு சாந்தங்களையும் பெருமையுடைய புகைப்பொருட்களையும் காற்றினால் அவியாத விளக்கிற்கு வேண்டிய பொருட்களையும் மணங்கமழ்கின்ற மலர்களையும் கொண்டு வருகின்றனர். மேலும்  இசையை எடுத்துக் காட்டும் முழவு, மணி, மயில், கோடரி, பிணிமுகம் என்னும் யானை ஊர்தி ஆகியவற்றையும் முருகவேளுக்கு உவந்த பிற பொருட்களையும் ஏந்திக்கொண்டு வந்து   திருப்பரங்குன்றத்தினைச் சேர்ந்து முருகப் பெருமானது திருவடிகளைத் தொழுது நிற்கின்றனர்.  

அவ்வாறு நிற்போரில் சில பெண்கள்  கனவில் தாம்  கண்ட காதலருடனான திருமணம் நனவிலும் அமைதல் வேண்டும் என வேண்டினர். மேலும்  முருகப்பெருமானுக்குரிய  செறிந்த நீரையுடைய வையையாறு புதுநீரை அணிவதாக! எனவும் வரம் வேண்டினர். திருமணமான பெண்கள்  தங்கள்  வயிறு கருப்பம் எய்துக! என்றும் அவ்வாறு  எய்தின் இன்னின்ன பொருளை முருகனுக்குத்  தருவோம் எனவும் வேண்டி நின்றனர்.

மேலும் சில பெண்கள் தங்கள்  கணவர் சென்றுள்ள வினைக்கண் செய்தற்குரிய பொருள் நிரம்ப வாய்ப்பதாக! என்று முருகப்பெருமான் திருச்செவியின்கட் சேரக்கூறி வழிபட்டனர். மேலும் சிலரோ, போர்மேற் சென்றுள்ள தங்களுடைய தலைவர் அப்போரின்கண் பகைவரைக் கொன்று வாகைசூடுக! என்று வேண்டி அர்ச்சனை செய்தனர். இவ்வாறு  கடம்பின்கண் விரும்பி உறையும் செவ்வேளினது காவலையுடைய திருக்கோயிலை இன்றே போல என்றென்றும் வழிபடும்படி, இம் மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் வருந்தும்படி மழை வராது போயினும்; நெறிப்படுத்தி ஒழுகும் அருவி இடையறாது ஒழுகுவதாகிய பெரிய செல்வம்  என்றென்றும் நிலைபெறுவதாக! என வேண்டி வணங்கி நின்றனர். மேலும் அவ்வாறு வழிபடும் பொழுது,

“போர் மலிந்து, சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!    

கறை இல் கார் மழை பொங்கி அன்ன

நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!

அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!”

-  என முருகப்பெருமானின் பல்வேறு பெருமைகளை பாடிப் பரவினர். நீலமணி போலும் நிறமுடைய மயிலினையும் உயர்ந்த சேவற்கொடியினையும் பிணிமுகம் என்னும் யானையை ஊர்ந்து செய்யப்பட்ட வெற்றியுடைய போரினையும் உடைய இறைவனே! நாங்களும் எம்முடைய சுற்றத்தாரும், எம்மைப் போன்ற  மனிதரைப் புகழ்ந்து பாடுதலை விடுத்து, எப்பொழுதும் உன்னுடைய அழகிய நெடிய திருப்பரங்குன்றத்தைப் பாடி, உனது புகழையே ஏத்தித் தொழுது வேண்டிக் கொண்டு நிற்போம் என வேண்டி நின்றனர்.  

முருகன் திருவருள் பெறுவோர்: முருகப்பெருமானின் திருவருளினை விரும்பி ஏற்றுக் கொண்டு முருகனின்  நெறியாகிய அறநெறிக்கட்செல்வோரும் எத்தகைய இடர் வரினும் முருகன்மேல் இடைவிடாத அன்பு கொண்டோரும் குணமுடையோராய்ப் பெரிய தவத்தினையுடையோரும் வணங்கத் தகுந்தோராகிய சீவன்முத்தரும் மட்டுமே  முருகப்பெருமானின் திருவருளைப் பெற இயலும்.  

பிறவுயிரைக் கொல்லும் தீய நெஞ்சத்தோடு வெகுளி உடையோரும் அறநெறிக்கட் சேராத புகழில்லாத தீயவர்களும் கூடாவொழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தையுடையோரும் இப்பிறப்பின் நுகர்ச்சியே இனிமையானது என்றெண்ணி மறுபிறப்பு, அறம், பாவம், வீடு, கடவுள் என்பன பொய்ப்பொருளாம் எனக் கருதும்  அறிவில்லாதாரும் முருகப்பெருமானின் திருவடி நீழலை எய்தாதவர் ஆவர்.

தீயனவற்றை நீக்கி நல்லனவற்றைத் தன் வாழ்வில் கடைபிடிப்போருக்கே அருளும் கடம்பமலர் மாலையினையுடைய பெருமானே! உனது திருவடி நீழலை எய்த விரும்பிய அடியவர்களாகிய நாங்கள் உன்பால் வேண்டி நிற்பன  நுகரப்படும் பொருளும் அவற்றைத் தரும் பொன்னும் அவற்றாலே நுகரும் இன்பமும் அல்ல, எமக்கு வீடுபயக்கும் நினது திருவருளும் அவ்வருளினை உண்டாக்க உன்னிடத்தே நாங்கள் செலுத்த வேண்டிய அன்பும் அவ்விரண்டானும் வரும் அறமும் ஆகிய இம் மூன்றுமேயாம், இவற்றை எங்கட்கு அளித்தருளல் வேண்டும் என முருகனுடைய அன்பர்கள் வேண்டி நின்றனர் எனக் குறிப்பிடும் பரிபாடல் என்னும் பைந்தமிழ்

இலக்கியம். இதனை,

யாஅம் இரப்பதை

பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனு மூன்றும் (80)

உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே.

- என்ற அடிகளால் அறிய முடிகின்றது.

இவ்வாறு இம்மை உலகத்து இசையுடன் விளங்கி மறுமை உலகமும் மறுவின்றி எய்த அருளும் ஆற்றலுடைய பரம்பொருள் அறுமுகமுடைய பரங்கிரிப் பெருமானே ஆவார். திருப்பரங்குன்றில் உறையும் இத்திகழொளிப் பெருமானுக்கு உரிய கார்த்திகை தீபத்திருநாள் கார்த்திகை மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 19 - 11 - 2021) அன்று வருகின்றது. திருவண்ணாமலை போன்று இங்கு நடைபெறும் தீபத்திருநாளும் மிகச் சிறப்புடையது ஆகும்.

அதனால்தான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பாடியருளிய திருஞானசம்பந்தர், மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில்  இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும் அரிய மறைகளை ஓதும் நான்முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று என்று இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாய்

நின்ற காட்சியினைக் குறிப்பிட்டுப் பாடுவார். அத்தகைய பாடல்,

முந்தியிவ்வையந் தாவியமாலு மொய்யொளி

உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும்

சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.

என்பதாகும்.

எனவே தீபத்திருநாளாம் நன்னாளில் திருப்பரங்குன்றின் தீபம் கண்டு தீப ஒளியும் சிவபெருமான், முருகப்பெருமானின் திருவருள் ஒளியும் பெற்று உயர்வோமாக!!

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: