ரூ.2.5 கோடி மோசடி விவகாரம்: மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை ஆஜராக சம்மன்

ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த பிரபல இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இவ்விரு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நிலத்தைப் பல பேரிடம் விற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனங்களின் விளம்பர தூதராக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளதால், இந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக வரும் 27ம் தேதி அவரும் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்த மகோஷ் பாபுவுக்கு மொத்தம் 5.9 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், 3.4 கோடி ரூபாய் வங்கி மூலமாகவும், 2.5 கோடி ரூபாய் பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணையில், பணமாக வழங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மகேஷ் பாபு தனது செல்வாக்கை பயன்படுத்தி, இந்த நிறுவனங்களில் மக்களை முதலீடு செய்ய ஈர்த்ததாகவும், இதனால் மோசடி திட்டங்கள் நம்பகத்தன்மை பெற்றதாகவும் அமலாக்கத்துறை கருதுகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: