சென்னை: சூர்யா நடித்துள்ள 44வது படமான ‘ரெட்ரோ’, வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். விவேக் பாடல்கள் எழுத, பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட், ஸ்டோன் பென்ச் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது: ரசிகர்களுடைய அன்பினால்தான் இங்கு நிற்கிறேன். ரெட்ரோ என்பது, நாம் கடந்து வந்த காலத்தை பற்றி குறிப்பது. அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. படப்பிடிப்பில் ஜெயராம் சார் பர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் போல் பிராக்டிஸ் செய்வார்.
விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். ருக்மணியாக வந்த பூஜா ஹெக்டேவுக்கு நன்றி. ஒரு படம் உருவாக சகோதரத்துவம் முக்கியம். 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. எல்லா நாட்களையும் என்ஜாய் செய்து நடித்தேன். கார்த்திக் சுப்பராஜ் ஐடி ஃபீல்டில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்படி அவர் ரிஸ்க் எடுத்தது தவறு இல்லை. வாய்ப்பு கிடைத்தால், அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கடுமையாக உழைத்து முன்னேறி வெற்றிபெற வேண்டும். எனக்கு மட்டுமல்ல, அனைருக்கும் வாழ்க்கை என்பது ரொம்ப அழகானது. வாய்ப்பு என்பது ஒருமுறையோ அல்லது இன்னொரு முறையோ மட்டுமே கிடைக்கும்.
அதை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். கிடைத்த வாய்ப்பை வைத்து முன்னேறாமல் விட்டுவிட கூடாது. நான் வெற்றிகரமாக இயங்க முக்கிய காரணமே ரசிகர்களின் பேரன்புதான். இந்த அன்பு தொடர்ந்தால் எப்போதுமே நன்றாக இருப்பேன், நன்றாக இருப்போம். நான் ஒரு நடிகன் என்பதை தாண்டி, அகரம் பவுண்டேஷனை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.