திரிஷாவும் அபிராமியும் ஐ லவ் யூ சொல்லலை… கமல்ஹாசன் கல… கல…

சென்னை: ‘நாயகன்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘தக் லைஃப்’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: நான் ஆங்கிலத்தில் பேசுவது அரசியல் இல்லை. இது தமிழனின் யதார்த்தம். மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு மக்கள் தீர்ப்பே காரணம். அவருக்கு ‘அஞ்சரை மணி ரத்னம்’ என்ற பட்டத்தை கொடுக்கிறேன். தினமும் காலையில் 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். மணிரத்னத்தை பார்த்து மற்றவர்கள் மட்டுமல்ல, நானும் பயந்திருக்கிறேன்.

வீரம் என்பது என்ன? பயப்படாத மாதிரி காட்டிக்கொள்வதுதான். சிம்புவுக்கு இணையாக ஆட வேண்டும் என்று, ஒரு பாடல் காட்சியில் வேகமாக ஆடினேன். வைரமுத்துவை மிஞ்சுவதற்காக நான் பாடல் எழுதவில்லை. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிய மொழியில் ‘ஜிங்குச்சா’ பாடலை எழுதினேன். தாய் 8 அடி பாய்ந்தால். குட்டி 16 அடி பாயும் என்பது சிம்புவுக்கு பொருந்தும். அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு என்மீது அளவுகடந்த பாசம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால், என் சட்டையை அழுதே நனைத்துவிடுவார். மேடையில் இருக்கும் கதாநாயகிகள் அபிராமியும், திரிஷாவும் படத்தில் ஒருமுறை கூட என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. தினமும் ‘சார், ஐ லவ் யூ’ என்று சொன்ன ஒரே நபர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். அதனால் என் மனதை தேற்றிக்கொண்டேன்.

‘தக் லைஃப்’ படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள். அதனால்தான் இவ்வளவு நம்பிக்கை. நீங்கள் கேட்கும் எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனால், வேறுமாதிரி இருக்கும். போன தீபாவளிக்கு போட்ட சட்டையையே இந்த தீபாவளிக்கும் போடுவீர்களா? பார்த்து பழகிய சினிமாவையே மீண்டும் பார்ப்பீர்களா? அதனால்தான் ‘தக் லைஃப்’ படத்தை வேறுமாதிரி உருவாக்கியுள்ளோம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். பிறகு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் பேசினர்.

Related Stories: