நடிகர் ஸ்ரீக்கு தீவிர மருத்துவ சிகிச்சை: வதந்திகளை பரப்ப வேண்டாம் குடும்பத்தினர் அறிக்கை

சென்னை: நடிகர் ஸ்ரீ உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பெற்றோர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ. இவர் கடைசியாக நடித்த ‘இறுகப்பற்று’ படமும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நடிகர் ஸ்ரீ நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ உடல் எடை மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஸ்ரீக்கு என்ன ஆனது, அவருக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ‘‘நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார். ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீ நடிப்பில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஸ்ரீயின் உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளையும் ஊடக தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: