பேழைப் பெருவயிறன் கணபதி எனும் கரிவதனன்

அறுவகைச் சமயநெறிகளும் தழைத்து ஓங்கும் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் வழிபாட்டில் உள்ளன. அவற்றை வகைப்படுத்துவோமாயின் வேழமுகக் கடவுளான கணபதிப் பெருமானுக்கென எடுக்கப்பெற்ற கோயில்களின் எண்ணிக்கையே மிகுதிப்படும். அதற்கு யாது காரணம் என நோக்குவோமாயின் ஆகமவழி வகுக்கப்பெற்ற பெருங்கோயில்கள் அன்றி அரச மரங்களின் கீழும், நீர்நிலைகளின் படித்துறைகளிலும், தெருமுக்குகளிலும், மதிற்சுவர்களிலும் என எங்கும் அவருக்கு கோயில்கள் உண்டு. அதுபோன்றே அவரை வழிபட சிலா விக்கிரகங்களோ, செப்புத் திருமேனிகளோ தேவை என்பதன்று. பசுஞ்சாணத்தாலோ, அரைத்த மஞ்சள் குழைவாலோ, களிமண் கொண்டோ பிடித்து வைக்கப்பெறும் எவ்வுருவிலும் அவர் எழுந்தருள்வார்.

காட்சிக்கு எளியர் மட்டுமன்றி கருணை வழங்குவதிலும் எளிவந்த தகைமையர் ஆவார்.

சமயநூல்கள் வரிசையில் முதல் ஏழு திருமுறைகளைத் தந்த மூவர் முதலிகளும், எட்டாம் திருமுறை தந்த மணிவாசகரும், பத்தாம் திருமுறையாசிரியர் திருமூலரும், பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் வரிசையில் திகழும் கபிலர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோரும், பன்னிரண்டாம் திருமுறையின் ஆசிரியரான சேக்கிழார் பெருமானும் கணபதியைப் போற்றிப் பரவுவதால் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து விநாயகர் வழிபாடு மிக்கோங்கித் திகழ்ந்ததை அறியலாம். திருஞானசம்பந்தப் பெருமானார் சோழநாட்டுத் திருவலிவலத்தில் வியாழக்குறிஞ்சியில் திருவிராகம் பாடும்போது,

பிடியதன் உருஉமை கொள மிகு கரியது

வடிகொடு தனது அடி வழிபடு மவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே

- என்று கூறி கணபதிப் பெருமானின் சீர்மையை எடுத்துரைத்துள்ளார். திருநாவுக்கரசு பெருமானாரோ திருப்புறம்பயத்துப் பதிகத்தில், குமரனும் விக்கின விநாயகனும் பூவாய பீடத்துமேல் அயனும் பூமி அளந்தானும் போற்றிசைப்ப புறம்பயம் எனும் ஊரினை நம் ஊர் என்று கூறி சிவபெருமான் அங்கு போயினார் என்பார். மேலும், கணபதிப் பெருமான் அனைத்து விக்கினங்களையும் போக்குபவர் என்பதால் விக்கின விநாயகர் என்ற பெயர் பெற்ற சிறப்பினைச் சுட்டிக் காட்டியுள்ளார். திருநாரையூரில் ஆறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்தனை நாரையூர் நன் நகரில் கண்டேன் நானே என்று குறிப்பிட்டு ஆனைமுகனைப் போற்றியுள்ளார்.

சுந்தரரோ திருநாகைக் காரோணத்தில் ஈசனாரை நோக்கி தம்பிரான் தோழன் என்ற காரணத்தால் அளவில்லாமல் உண்டு பெருவயிறைப் பெற்றவன் உன்மகன் கணபதி, அவனுக்கு வலிமை தந்த நீ எனக்கு திண்ணென உடல் விருத்தி தாரும் என உரிமையோடும் வாஞ்சையோடும் வேண்டுகிறார். அப்போது “எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி” என்று அப்பெருமானின் தோற்றத்தை நமக்குக் காட்டுகின்றார்.

மணிவாசகப் பெருமானாரோ திருச்சிற்றம் பலக்கோவையார் பாடத் தொடங்கும்போது தில்லை கோபுர வாயிலில் திகழும் கற்பகமாம் கணபதிப் பெருமானைப் பார்த்து “நண்ணிய சீர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு” என வேண்டுகிறார்.

திருமூலதேவநாயனார்,

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்து இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

 - என்ற பிரார்த்தனையோடுதான் தில்லைச் சிற்றம்பலவன்மீது கடவுள் வாழ்த்துப்பாடி திருமந்திரத்தை அருளியுள்ளார். பதினோராம் திருமுறையில் கபிலதேவநாயனார், மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலையைப் பாடத் தொடங்கும்போதே, “திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும்” என்று கூறி கணபதி வழிபாட்டின் பலனைக் கூறுகின்றார். மேலும், பேழைப் பெருவயிறு உடைய கணபதியைப் பார்த்து,

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கணிந்து

என்று பாடி கரிமுகக் கடவுளை கண்ணாரக் கண்டு நாம் பணியுமாறு வேண்டுகிறார். அதிரா அடிகளோ அகவற்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூன்று பா வகைகளால் பாடல்களைத் தொடுத்து மூத்த பிள்ளையாருக்கு திருமும்மணிக் கோவையைச் சமர்ப்பித்துள்ளார்.கணபதி பெருமானை இளம் வயதிலேயே பூசித்து அருள்ஞானம் பெற்ற நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அருளால் பல பிரபந்தங்களைப் பாடி அருளினார். பொல்லாப் பிள்ளையார் என்பதைவிட பொள்ளாப் பிள்ளையார் என்பதே சரியான சொல்லாக இருத்தல் கூடும். பொள்ளா என்றால் செதுக்கப்பெறாதது எனப் பொருள்படும்.

கல்லில் உளிகொண்டு வடிக்கப்பெறாமல் சுயம்புவாகத் திகழ்ந்த கணபதிதான் அவருக்கு அருள்பாலித்திருக்கக்கூடும். நம்பியாண்டார் நம்பி அருளிய திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம், வெண்பா, கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் கோர்க்கப்பெற்ற மாலையாகும். இப்பிரபந்தத்தில் அவர் பாடிய மூன்றாம் பாடலில் மாங்கனி வேண்டி கணபதிப் பெருமானும் முருகனும் போட்டியிட்டகாலை முருகப் பெருமான் மயில்மீதேறி உலகத்தை முதலில் சுற்றி வரப் புறப்பட்டபோது, தன் தாய் தந்தையரையே சுற்றிவந்து போட்டியில் வென்று கணபதிப் பெருமான் மாங்கனி பெற்ற புராணக் கதையை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அப்பாடலாவது,

 கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே

வம்பனைய மாங்கனியை நாரையூர்

நம்பனையே

தன்னவலம் செய்து கொளும் தாள்

தடக்கையாய் என்நோய்

பின்னவலம் செய்வதெனோ பேசு

என்பதாம். மேலும், அடுத்த பாடலில் கணபதிப் பெருமானின் ஊர்தி பெருச்சாளிதான் என்பதை நயமுடைய கருத்துக்களோடு தெளிவுபட விளக்கியுள்ளார். தமிழக சிற்ப மரபுப்படி கண

பதியார் திருமேனிகளுக்கு வாகனமாக பெருச்சாளியைக் காட்டுவதுதான் பழைய மரபாகும். வடபுலத்தில் (மராட்டியம் போன்ற இடங்களில்) மூஞ்சூறு வாகனம் காட்டப்பெறுவது வழக்கமாகும். பின்னாளில் அத்தாக்கம் தமிழகத்தில் ஏற்பட பலர் மூஞ்சூறு வாகனம்தான் அவர்தம் ஊர்தி எனக் கொண்டனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜ சோழன் அமைத்த பரிவாராலயத்து கணபதியார் முன்பு பெருச்சாளி உருவம் இருந்தமையை அவ்வாலயத்துக் கல்வெட்டு “பெரிச்சாளி” என்றே சுட்டி நிற்கின்றது. நந்தமிழ் நாட்டு மரபான பெருச்சாளியையே அவர்தம் ஊர்தியாக நாம் கொள்வோம்.தமிழ்நாட்டில் மேலும் ஒரு மரபாக எழுத்துப் பணியைத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்ட பின்பே எழுதுவது என்பதாகும். “உ” என்ற எழுத்தே பிள்ளையார் சுழி எனக் கொள்ளப்பெறுகின்றது.

அண்மையில் குறியீடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட அதம்பை இராமமூர்த்தி என்பவர் கட்டுரை ஆசிரியரிடம், செட்டிநாட்டைச் சார்ந்த சில பழைய காகித ஆவணங்களையும், கல்வெட்டுப் பிரதிகளையும் காட்டி அவற்றில் பிள்ளையார் சுழிக்குப் பதில் “உலகெலாம் வாழ்க” என்ற சொல் இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, பெரிய புராண மரபுப்படி “உலகெலாம்” என்ற தொடக்கச் சொல் அடிப்படையில், ஆவணங்கள் எழுதும் மரபு அங்கு திகழ்வதையும், அதன் சுருக்கம்தான் “உ” என்ற எழுத்து எனவும் கூறினார். உடன் பெரியபுராணப் பாடல்களை ஆராய்ந்தபோது ஒரு பேருண்மை புலப்பட்டது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்ற தொடக்கத்தோடு முதல் பாடலையும், “ஊனடைந்த உடம்பின் பிறவியே” என்ற இரண்டாம் பாடலையும் பாடி குழகமாக விடுத்து (பாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்) தில்லையுள் மாநடம் புரியும் வரதனாகிய ஆடவல்லானின் திருவடிகளுக்கு வணக்கம் செலுத்து பவர் குழகம் தொடரும் மூன்றாம் பாடலில் தன்

பிரார்த்தனையை முன்வைக்கின்றார்.

எருக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்

நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்

கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்

என்பதே அவர்தம் வாக்கு.

இம்மூன்று பாடல்களையும் ஆழ்ந்து நோக்கும்போது “உலகெலாம்” என்ற சொற்றொடர் தில்லை கூத்தப்பெருமானே வானொலியாக அருளியதாகும். அதனுடன் இணைத்தே ஐங்கரக் கடவுளாம் கணபதிப் பெருமானை கருத்துள் இறுத்தி திருத்தொண்டர் புராணத்தை அவர் அருளினார். எனவே, “உ” என்ற எழுத்தினுள் அம்பலக் கூத்தனின் வாக்கும் கண

பதிப் பெருமானின் காப்பும் அடங்கியிருப்பதால் பின்னாளில் அவ்வெழுத்தைப் பிள்ளையார் சுழி என அழைக்கலாயினர் என்பது விளங்குகின்றது.

திருமுறைகள் போற்றுகின்ற கரிவதனன் ஆகிய காப்புக் கடவுளை தாங்கள் எடுத்த திருக்கோயில்களில் அழகுற அமைத்து வழிபட்ட பெருமை பல்லவர்க்கும், பாண்டியர்க்கும், சோழர்க்கும் உரியதாகும். அம்மரபை தமிழகத்து பிற மரபு மன்னர்கள் அனைவரும் தலைமேற்கொண்டு போற்றி வந்துள்ளனர். பல்லவர் கால கணபதி சிற்பங்களிலேயே தலையாயதாகப் போற்றப்பெறும் சிறப்புடைய கணபதிச் சிற்பமொன்று செங்கல்பட்டு நகரத்தை ஒட்டி 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லம் எனும் ஊரில் காணப்பெறுகின்றது. வசந்தீஸ்வரம் எனும் மகேந்திர பல்லவன் (கி.பி. 580 - 630) காலத்து அக்குடைவரையின் முகப்புப் பாறையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இப்படைப்பு அம்மன்னவனின் காலத்திற்கு சற்று பின்னாளில் தோற்றுவிக்கப்பெற்றதாகும். தேவகுலம் எனும் அக்கோயிலின் முக்கிய தெய்வமாகத் திகழும் வேழமுகக் கடவுள் திண்டு மெத்தைமேல் சாய்ந்தவண்ணம் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். வலம்புரி துதிக்கையும் வலத்தந்தம் உடைத்துக் காட்டப்பெற்றிருப் பதும் அழகுக்கு அழகூட்டுகின்றன. பொதுவாக வலம்புரி விநாயகர் சிற்பங்களை பாண்டியர்களே மிகுதியாகப் படைத்துக் காட்டியுள்ளனர்.

தமிழகத்திலே மிகத் தொன்மையான கணபதி சிற்பம் குன்றக்குடிக்கு அருகிலுள்ள பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் உள்ளதாகும். முற்காலப் பாண்டியர் காலத்தில் திருஈங்கைக்குடி கல் குன்றத்தில் அமைக்கப்பெற்ற ஒரு சிவாலயத்தின் பரிவார தெய்வமாக தேசிவிநாயகர் எனப்பெறும் இப்பெருமான் குறிக்கப்பெறுகின்றார். இத்திருவுருவத்தை அமைத்த மகாசிற்பியின் பெயர் ஈக்காட்டூர்கோன் பெருந்தச்சன் என்பது அங்குள்ள கி.பி. 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டுப் பொறிப்பால் உறுதி பெறுகின்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றுமுறை இக்கணபதியை நேரில் வந்து தரிசித்தான் என கல்லெழுத்துச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இப்பெருமானும் வலம்புரி விநாயகரே ஆவார். கி.பி. 1305இல் குலசேகர பாண்டியன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இத்தேசி விநாயகருக்கு பிட்டும், பணிகாரமும் (பணியாரம்) நிவேதனம் செய்ய வரியில்லாத நிலங்களை அளித்துள்ளான். இக்கணபதியார் ஒரு கையில் மோதகமும், ஒரு கையை இடுப்பிலும் ஊன்றிய இரு கையுடையவராகத் திகழ்வது சிறப்பாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள குடைவரையின்கண் திகழும் இரண்டு கணபதியார் சிற்பங்கள் பேரழகு வாய்ந்தவையாகும். குடைவரையின் உட்புறச் சுவரில் நான்கு திருக்கரங்களோடு, ஒரு காலை குத்திட்டு கையில் மோதகம், அக்கமாலை, தாமரைமொட்டு ஆகியவை ஏந்தியவராகக் காணப்பெறும் திருவடிவம் அழகு வாய்ந்ததாகும். குடைவரையின் வெளிப் புறம் மலைச்சுவரில் மிகப்பெரிய கிரந்த கல்வெட்டுப் பொறிப்பும் அதன் நடுவே அமர்ந்த கோல கணபதியார் திருவுருவம் ஒன்றும் காணப்பெறுகின்றன. “சித்தம் நமச்சிவாய” எனத் தொடங்கும் இப்பொறிப்பு இசை இலக்கணம் கூறுவதாகும். ருத்திராச்சாரியார் என்பவரின் சிஷ்யனும் பரம மாகேஸ்வரனாகிய மன்னன் ஒருவன் மாணவர்கள் நலன் கருதி இந்த இசை இலக்கணக் கல்வெட்டை இங்கு பொறித்துள்ளான் என்ற தகவல் அங்குக் காணப்பெறுகின்றது. இசை இலக்கணம் பயிலும் மாணவர்கள் கணபதியை வழிபட்டு பாடம் கற்க வேண்டும் என்பதற்காகவே இவ்வமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

திருநெடுங்களம் திருக்கோயிலின் பரிவாராலயமாகத் திகழும் தனித்த சிற்றாலயத்தில் வலம்புரியுடன் கூடிய விநாயகர் திருமேனி ஒன்றினை பிரதிட்டை செய்துள்ளனர். வழுத்தூர் கோயிலிலுள்ள நர்த்தன கணபதியும், தாராசுரம் கோயிலில் காணப்பெறும் செப்புத் திருமேனியும் சோழர்கலையின் சிறப்பு முத்திரைகளாகும்.

கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் வங்கதேசத்தை வென்று அங்கிருந்து கொண்டு வந்த கணபதியார் சிற்பம் குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் கங்கைகொண்ட விநாயகர் என்ற பெயரால் விளங்குகின்றது. அரிய இப்படைப்பைக் கண்ட சோழநாட்டுச் சிற்பிகள் அதனை ஒத்த இரு செப்புத் திருமேனிகளை வடித்துள்ளனர். அவை தற்போது தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், திருவானைக்கா சிவாலயத்திலும் இடம்பெற்றுத் திகழ்கின்றன.

சோழர்களின் குறுநில அரசர்களில் ஒரு பிரிவினரான பழுவேட்டரையர்கள் மேலப்பழுவூர் கீழையூர் சிவாலயத்தில் (அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருஹம்) அட்டமாதர்களுடன் வைத்துள்ள கணபதியார் திருமேனி தனித்துவம் பெற்ற ஒன்றாகும். தமிழகத்துக் கலை உறவால் ஜாவாவில் உள்ள பரம்பனான் சிவாலயத்தில் இடம்பெற்றுத் திகழும் கணபதியார் திருவுருவமும் கண்டு வணங்கத் தக்க ஒன்றாம்.பேழைப் பெருவயிறனாகிய கணபதி எனும் கரிவதனனின் தாள் பணிவோம். வளம்பெற வாழ்வோம்.

(தொடரும்)

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: